வா நிபந்தனையற்றுப் பேசுவோம்!கவிதை – சாம் பிரதீபன் –

எமக்குள்
கருத்து வேற்றுமை இருக்கட்டும்,
கொள்கை முரண்பாடு இருக்கட்டும்,
இருந்தும் வா…
பேசுவோம்
எந்தப் பக்கத்தில் இருந்தாவது
ஏதோ ஒரு பாடத்தை.
கசப்பாயோ
புளிப்பாயோ
எதுவாயும் இருக்கட்டும்.
முதலில் பேசுவோம்
நீ நீயாயும்
நான் நானாயும் இருந்து கொண்டு.
ஜீரணிக்க முடியாத
உன் கருத்துக்களாயினும்
மதிக்கிறேன்.
நீயும் அவ்வாறெனின்
ஒழிவு மறைவு வேண்டாம்
பேசுவோம்
தெளிவாகவே
அனைத்தையுமே.
உனக்குள் உள்ள முழுவதையும்
வெளியே எடுத்து வை
என்னைப் போலவே.
வெறுமைக்குள் பேசி
மனங்களில்
எங்களை எழுதிக்கொள்வோம்.
நீ உன்னிடமிருந்து
உண்மையை வெளியிடு
என்னில் காயங்களை
அது தோற்றுவித்தாலும் கூட.
அப்படியே
எனது உண்மைகள்
உன்னைப் பிராண்டும் போதும்
வலிகளைத் தாங்கிக்கொள்.
சிக்கல்களின்
முடிவுகளை எடுப்பதில்
கலந்து பேசுவோம்.
அதிகாரங்கள் மட்டும்
உனதுகளுக்கு நீயும்
எனதுகளுக்கு நானுமாய் இருக்கட்டும்.
நிபந்தனைகளை ஓரங்கட்டிவிட்டு
எங்கேயும் எப்போதும் பேசுவோம்.
இன்றோடு முடியாவிட்டால்
நாளையும்
நாளை மறுநாளும்
அடுத்த வாரமும்கூட பேசுவோம்.
எங்கள் எங்கள்
சுயங்களோடு நின்றுகொண்டு…..

ஆக்கம் – சாம் பிரதீபன் –

Merken