விடியலுக்கில்லை தூரம் – 8 (1986) -இந்துமகேஷ்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு புஷ்பத்தின் கடிதம் வந்திருந்தது.

“என்னைப் பற்றியும் ஏதாவது விசாரிச்சிருப்பாள். .படிச்சுப்போட்டு என்னட்டையும் தா மச்சான்!“ என்றான் அரவிந்தன்.

„புஷ்பத்தை நான் மறந்தாலும் நீ மறக்கமாட்டாய் போல!“ என்றான் வசந்த்.

„உனக்கு அவள் தங்கச்சிமாதிரி.. எனக்கு அவள் வருங்கால மனிசி..! அப்ப ஆருக்கு அவளைப்பற்றி அக்கறை கூட இருக்கும் சொல்லு பார்ப்பம்!“ என்றான் அரவிந்தன்.

„சரி சரி உன்ரை அறுவையை நிப்பாட்டு!“ என்று சொல்லிக்கொண்டே கடிதத்தைப் பிரித்தான் வசந்த்.

கடிதத்தின் உள்ளடக்கம் அவனைத் திடுக்கிட வைத்தது.

„கடவுளே!“ என்றான். மனம் பதறிற்று.

„என்ன மச்சான்?“ என்றான் அரவிந்தன் பதட்டத்துடன்

„புஷ்பத்தின்ரை தகப்பனையும் தம்பியையும் ஆமிக்காரங்கள் சுட்டிட்டாங்கள்!;“என்றான் வசந்த் வேதனையுடன்.

வசந்த் நீட்டிய கடிதத்தை வாங்கிப் பார்த்தான் அரவிந்தன். பெருமூச்செறிந்தான் கண்கள் கலங்கின.

„புஷ்பத்தின்ரை வீட்டிலை மட்டுமில்லை.. எல்லா வீட்டிலையும் இதுதான் நடக்குது!“

„இதுக்கு ஒரு முடிவில்லையா அரவிந்து?“

„இப்பிடி நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக் கொண்டிருக்கிறமே இதுதான்முடிவு!“என்றான் அரவிந்தன் விரக்தியோடு.

„எப்பவோ ஒரு நாளைக்கு எல்லாருமே சாகத்தான் வேணும்…ஆனா இண்டைக்கே உயிரைக் குடுக்க எவனுமே தயாராக இல்லை. இதுதான் எஙகடை பலவீனம்: இண்டைக்கு கலியாணம்கட்டி நாளைக்கு பிள்ளையளைப்பெற நாங்கள் தயார். ஆனா நாளைஇண்டைக்கு அந்தப் பிள்ளை எங்கை வாழப்போகுது எப்பிடி வாழப்போகுது.. இதைப்பற்றி நாங்கள் எப்பவாவது சிந்திக்கிறமா? இல்லையே. எங்களைப்போலக் கோழையள் இருக்கிறவரைக்கும் எஙகளுக்கு இதே முடிவுதான்!“
-அரவிந்தன் உணர்ச்சிவசப்பட்டிருந்தான்.
„இந்த உயிர்ப் பலிகளைத் தடுக்க ஒரு வழியும் இல்லையா மச்சான்?“

“இருக்குது.. ஒரே ஒரு வழி..! இயமனைக் கொண்டிட்டால் சரி. உயிர்ப்பலி இருக்காது!“

„நீ பகிடி விடுகிறை!“ என்றான் வசந்த்.

„பகிடியில்லை மச்சான். இண்டைக்கு எங்கடை சனங்களை முன்னேறவிடாமல் தடுக்குதே சுயநலம் எண்ட இயமன் அந்த இயமனைக் கொண்டிட்டால் அதுக்குப் பிறகு உயிர்ப்பலிக்கே இடமில்லை… ஒற்றுமை ஒற்றுமை எண்டு வாய்கிழியக் கத்திறவனெல்லாம் முதலிலை ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேணும்.. அந்த ஒற்றுமைக்குக் குறுக்கீடாக இருக்கிற சுயநலத்தை ஒழிக்கவேணும். அப்பதான் எங்களுக்கு விடிவு.!“

„இதை நீயும் நானும் சொன்னாப்போலை எல்லாம் நடந்திடுமா?“

„இப்பிடித்தான் எங்களை மாதிரித்தான் சரியாய்ச் சிந்திக்கிறவனெல்லாம் தன்தன் பாட்டிலை ஒதுங்கிறதாலைதான் நாங்கள் பின்னுக்கே போறம். நீயும் நானும் கதைக்கிறதைத்தான் எல்லாரும் கதைக்கிறான்கள். கதைக்கிறவனெல்லாம் கதையோடையே இருந்திட்டால் காரியம் நடக்காது. காரியத்திலையும் இறங்கவேணும்.!“

வசந்த் எழுந்துபோய்க் கண்ணாடி யன்னலை மறைத்திருந்த திரைச் சீலையை விலக்கினான்.வெளியே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. கீழே புல்தரையில் சிறுவர்கள் சிலர் குழிகளைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து இரண்டு மூன்று ஜெர்மானியக் குமரிகளும்.