வினாக்களால் ஆனவள்



என் யாதுமாகியவளே!
நிலவைப்போல – நீ
இருப்பதாய் சிலர் சொல்லும்போது
கொடுப்புக்குள் சிரித்துக்கொள்வேன்
கால காலமாக இருக்கும்
நம்பிக்கையை சிதைப்பான் ஏன் என
பொறுத்துக்கொள்வேன்
முத்தத்திற்கான தனித்த பொழுதுகளில்
நிலவு உன் பாதங்களை சரணடைந்ததை
நான் சொன்னால் எவர் நம்புவார்கள்
தொலைபேசி அழைப்பில்
நீ முத்தமிடும்போதெல்லாம்
நடுங்கிப்போகிற நான்
எப்படி முதலிரவின் சூட்டை
சமாளிக்கப்போகிறேன்
தயவு செய்து
எனக்கு பாலுக்குப் பதிலாய்
மதுரசம் கொடுத்துவிடுங்கள்
தேசமென்பதன் அடர்ந்த வெளியிலும்
மனிதமிழந்த மனிதச் சந்தையிலும்
ஒரு பவித்திர பவளமாய்
எப்படி ஒளிர்கிறாய்..?
என் வருங்காலங்களை
மகிழ்ச்சியால் மட்டுமே அலங்கரித்தால்
நாலா புறங்களிலுமிருந்துவருகிற
பொறாமைத் தீயை
எங்ஙனம் அணைப்பேன்…?
மூச்சுவிடாமல் கொடுக்கிற
முத்தங்களில்
தொப்புளைச் சுற்றி ஒரு
காட்டுத்தீ படர்வதை ரசிப்பதற்காகத்தான்
இந்த ஜீவிதம்
இதை நீ உணர்ந்திருக்கிறாயா..?
மின்னல்களை உடலில்
படரவிடுகிற அணைப்பை
எப்படி நிகழ்த்துகிறாய்…?
உன் நகங்களில் ஆயிரம்
விரல்கள் முளைத்திருக்கிறதா…?
நீயென்பது
தீரா நதியொன்றின் தூய பானமா..?
நீயென்பது
பூர்வ ஜென்மத்தில்
நான் வேண்டிக்கேட்ட வரமா..?
என் யாதுமாகியவளே!
இன்று
உன் இசை மீட்டும்
கூந்தலருகே
இமைமூட வேண்டும் இடம் கொடு
#அனாதியன்