வீடுவரை உறவு-இந்துமகேஷ்.

“நேற்று என்ன நடந்தது?”

-நினைத்துப் பார்க்கிறேன்.

காலையில் கண்விழித்தது முதல், இரவு உறங்கப் போனதுவரை நிகழ்ந்தவைகள் யாவும் மனத்திரையில் வெறும் காட்சிகளாய்த் தெரிகின்றன. வழக்கம்போல நடக்கும் நாளாந்தக் காரியங்களை நிகழ்த்தி முடித்த ஒரு நாளாகவே நேற்றையப் பொழுதும் போய் மறைந்திருக்கிறது.

முற்றுமுழுதாய் என்னென்ன நடந்தது என்பதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ஒப்புவிக்க முடியாதபடி சில நிகழ்வுகள் மறந்து போயிருந்தன. உண்டேன் உடுத்தினேன் என்பது தெரிந்திருந்தாலும் என்ன உண்டேன் என்ன உடுத்தினேன் என்பதைக்கூட சற்று நினைவுபடுத்தித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அப்போதும் அவைகளைச் சரியாகச் சொல்லியிருக்கிறேனா என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. மனதின் நினைவுப் பக்கங்களில் எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகப் பதித்து வைக்க முடியாதபடி ஏதோ ஒரு மாயை இடையூறு செய்கிறது.

இப்படியே இன்றையப் பொழுதும் முற்றுமுழுதாய் நினைவில் தங்காமல் நாளையப் பொழுதில் கனவாய்க் கலைந்துவிடப்போகிறது.

நிகழ்காலம் என்பது இறந்தகாலமாய் தன்னை மறைத்துக்கொண்டு விடுகிறது.

“என்ன இந்த வாழ்க்கை?”

தாம்தாம் கற்றறிந்தவரையில் இதுதான் வாழ்க்கை என்று தேர்ந்தெடுத்த வழியிலேயே ஒவ்வொருவரும் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“இந்த வாழ்க்கையின் முடிவெங்கே?”

“இது தெரியாதா? எல்லோர்க்கும் தெரிந்த ஒரே பதில்தானே இது! மரணம்தான் இந்த வாழ்க்கையின் முடிவு!”

-பொதுவாக எல்லோரும் சொல்கிற விடைதான் அது.

“மரணத்தோடு இந்த மண்ணுலக வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனில் இத்தனைகாலம் வாழ்ந்த வாழ்வுக்கு அர்த்தம்தான் என்ன?”

இந்தக் கேள்விக்குள் ஆழ்ந்துபோகும் மனிதனுக்கு முகம்காட்டுகிறான் இறைவன்.

முடிவும் முதலும் நான்தான்!

இறைவனும் நானும் ஒன்றென இரண்டறக் கலந்துவிடும் மனிதன் மறுபடி இந்த மண்ணுலக மாயைகளில் சிக்கிக் கொள்வதில்லை. அதனால் நான் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டேன் என்று அவன் வந்து சொல்லிக் கொள்வதுமில்லை. அப்படிக் கண்டதாகச் சொல்லிக்கொள்பவன் உண்மையில் இறைவனைக் கண்டதுமில்லை.அதனால்தான் கண்டவர் விண்டிலர் என்றும் விண்டவர் கண்டிலர் என்றும் அன்று சொல்லி வைத்தார்கள்.

தனியாக வந்து தனியாகவே போய்மறைந்துவிடும் இந்த வாழ்வில் இத்தனை உறவுகள் எதனால் வந்தன? பற்று பந்தம் பாசம் என்று கட்டிக்கொண்ட உறவுகளால்தான் இந்த மாயா உலகத்தின் வண்ணங்களைக் காணமுடியும். இந்த வண்ணங்கள் கலைந்துபோகும்போது ஒவ்வொருவரும் ஞானம் பெறமுடியும் என்று வாழ்வின் விதியை வகுத்துத் தந்திருக்கிறது இயற்கை. ஞானத்தின் எல்லையில் முக்தி தரும் வீடு. அந்த வீடுபேறடைய எம்மை வலிந்து துரத்தும் உறவுகள்.

உறவுகள் பெருகப் பெருக உலகத்தின்மீதான பற்றுதல் மௌ்ளமௌ்ளக் கரையும். இந்த உண்மையை நாம் உணராது போனாலும் காலம் அதை உணர்த்தும். பிறப்புக்கு முன்பு எங்கிருந்து வந்தோம் என்ற கேள்விக்கு அப்போது விடைகிடைக்கும். உடலெனும் கூட்டுக்குள் நாம் வந்தமர்வதற்கு முன்பு எந்த வீட்டில் உலாவித் திரிந்தோமோ அந்த வீடு பற்றிய தெளிவு வரும். மறுபடி அந்த வீடுபெற வேண்டும் என்ற ஞானம் துளிர்க்கும். இந்த உடற்கூட்டை எறிந்துவிட்டு அந்த வீட்டுக்குப் போய்விட உயிர் தவிக்கும்.

அந்த வீடுவரை எம்மை அழைத்துச் செல்லவே இந்த உறவுகள்!

„என் பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார்

பொன்பெற்ற மாதரும் போமென்று சொல்லிப் புலம்பிவிட்டார்

கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார்

உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே!”