வெள்ளைக் கடற்கரை

வெள்ளைப் புற்றடி விநாயகரை
வணங்கி வீதி வழி செல்ல
மண்கும்பான் கும்பி மணல்
மலையழகு காட்டும்
மணலிடையே பனைமரங்கள்
நுங்கு தாங்கி நிற்கும்
இதைப் பார்த்து நடக்கையிலே
சோமர் கிணறு தெரியும்
சுகமான குளிப்பென்று – அது
எம்மை அழைக்கும்
தெங்குகள் இடையினிலே
பள்ளிவாசல் மிளிரும்
தெவிட்டாத நீர் இங்கேயென
சாட்டி வழி சொல்லும்
மாதாவின் திருத்தலத்தின்
மணி ஓசை கேட்கும்
மனத்தினிலே அதன் ஒலி
அருள்நினைவு சுரக்கும்
மேல்வானில் செங்கதிர்கள்
அழகுகோலம் தெளிக்கும்
அதன் கீழே பறவையினம்
வரிக்கோலம் போடும்
கீழ்வானம் நோக்கி யெங்கும்
படகுகள் பாய் இழுக்கும்- இதைப்
பார்த்துச் சிறையாக்கள்
பாய்ந்தழகு கொடுக்கும் – அதைப்
பார்த்து நிற்கையிலே
கடல் அலைகள் அழைக்கும்
இருந்துபார் என்றெம்மை
வெண்மணல் பாய் விரிக்க
கரைமீது கடல் வந்து
அலைகொண்டு மோதும்
அலைபோன பின்னாலே
நண்டு படம் கீறும்
இதைப் பார்த்த அலையொன்று
அதை அழித்துச் செல்லும்- அவ்
அலையோடு அந் நண்டு
கடலுக்குள் போகும்;
இவை பார்த்து என்னவளும்
அலையிடையே நடந்தாள்
அலைபோன பின்னரே
குழி ஒன்று அகழ்ந்தாள்.
அதில் வந்த நீர் மொண்டு
என் வாயில் விட்டாள்
சுவையான நீரென்று
அவள் கரம் பிடிக்க
துள்ளி நகர்ந்தாள்
புள்ளிமான்போல
எட்டி மெதுவாக
என் பக்கம் இழுத்தேன்.
இழுபட்ட கொடிபோல
என்மீது துவண்டாள்
இதமான மனத்தோடு
மயிலோடு வீழ்ந்தேன்.
அவள்
தன் மதிமுகம் பொத்தியே
என் மடிமீது சாய்ந்தாள்.
இதைப் பார்த்த இரவியும்
பதுங்கினான் வெட்கத்தால்
உள்ளம் பொறுக்காத
முள்ளிப் பூ உருண்டோடி
அவள் பக்கம் வர
பதபதைத்து எழுந்து அவள்
கடலுக்குள் சென்றாள்
கை நீட்டி நானும்
அவள்; பின்னே செல்ல
ஆழ்கடல் நோக்கியே
மெதுவாக நகர்ந்தாள்
அலையிடையே அவள் கண்கள்
கயல்கள் போல் தெரிய
பிடிக்கும் ஆவலாய்
பின் தொடர்ந்து போனேன்
கோபமாய் அலையொன்று
வேகமாய் நீரினுள் தள்ள
பாவமாய் கையைப் பிடித்தாள்
கருநாகம் சுற்றியதுபோல் கூந்தல் – என்
கையிலே சுற்றியதால் பயந்தேன்.
அலைமேலே முத்துக்கள் போல
அழகு பல்வரிசை காட்டியவள் சிரித்தாள்
இதமான குளிரொன்று வீச
ஏறினோம் இருவரும் கரையே
அந்தியேட்டி மடத்தினூடாய்
மடுவார்கேணி தாண்டி
மயானக் கரையிறங்கி
கடல்வண்ணனை வணங்கி
களிப்புடனே வீடு சென்றோம்.

  மணியம் (செண்பகன்) டோட்முண்