வேளாண்மை விளைகின்ற பூமி !

 

மண்ணிலே கருவாகி
மண்ணிலே உருவாகி
மண்ணிலே மாண்டவன்தான் உழவன் -அவன்
மண்ணுக்கும் மக்களுக்கும் தலைவன்.

வேளாண்மை விளைகின்ற பூமி
விளைநிலமே உழவனுக்கு சாமி

பொன்னென்ற ஒருவார்த்தை
பொன்னைக் குறித்திடலாம் ..மண்ணென்ற ஒருவார்த்தை
மண்ணைக் குறிப்பதில்லை..
ஏனென்றால்
அது நம் முன்னோரின் மானம்-தமிழ்
மண்தானே எங்களின் வானம்..
மானம் காப்தற்காக
மறவர்கள் ஏரெடுத்து
வானம் பார்த்தே வரப்புயர்த்தி
வரண்ட நிலமெல்லாம் பண்படுத்தி
அள்ளி எறிந்து விதைவிதைத்து
அவணக்கணக்கில் நெல்லறுத்து
கருத்தக் கரும்பெடுத்து பாகாக்கி
பசுவின் பாலூற்றி நெய்யூற்றி
பொங்குவோம் பொங்கல்
பொங்கலோ பொங்கலென்று
உழவர்கள் பாடுகையில்
பொங்குமே தைப் பொங்கல்
புலருமே தை திங்கள்…
தாய் மண்ணில் தமிழர் பட்ட துன்பமெல்லாம்
மங்கட்டும்.தரணியிலே வாழுகின்ற தமிழர் அனைவருக்கும்
இன்பமெல்லாம் பொங்கட்டும்.