Breaking News

பன்முக ஆளுமை „கலையருவி“ கே.பி.லோகதாஸ்!

ஐரோப்பாவின் வானொலி,தொலைக்காட்சி,திரைப்படங்கள்,
குறும்படங்கள்,மேடை நாடகங்கள் மூலம்
இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் இளமையுடன்
வலம் வந்து கொண்டு இருக்கும் இனிய கலைமகன்
„நவரச நாயகன்“ கே.பி.லோகதாஸ்!…
„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“ க்கும்,
அனைத்து முகநூல் உறவுகளுக்கும் மீண்டும்
„நவரச நாயகன்“ கே.பி.லோகதாஸ் அவர்களை
„நெஞ்சினிலே எங்கள் நினைவினிலே“ நிறுத்தி
அழகு பார்த்த „கலைசுடர்“ தீபன் கிருஷ்ணன்
அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
(அவர் பதிவிலிருந்து…)

நெஞ்சுக்கு பக்கத்தில் : பன்முக ஆளுமை
„கலையருவி“ கே.பி.லோகதாஸ்!
—————————————————–
„க‌லையருவி“ கே.பி.லோகதாஸ் அவர்களின் விரல்களைப் பிடித்தபடி நனைந்து சிலிர்க்கின்றேன்! நான் எனது இளவயதுக் காலங்களில் நவரசநாயகன் கார்த்திக்கின் ரசிகன் என்பதால். அவர் நடித்த புதிய திரைப்படம் எதாவது வெளிவந்திருக்கிறதா என்று கேட்போம் என்று, பரிஸ் லாஷப்பலில் அமைந்திருந்த லூன் வர்த்தக நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே இருந்தவரிடம் அண்ணா கார்த்திக் நடித்த புதிய படமேதாவது வெளிவந்திருக்கிறதா? என்று கேட்டேன்.

அந்த நேரத்தில் அவர் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பாடலை காட்டி வெளிவந்திருக்கிறது தரவா என்றார். யார் இவர் என்று கேட்டேன். இவர் ஈழத்து நவரச நாயகன் கே.பி.லோகதாஸ் என்று பதிலளித்தார். நீங்களே வைத்துப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டேன்.
சில வருடங்களுக்குப் பின்பு; மீசை அரும்ப ஆரம்பித்தால் காதல் வந்து கண் சிமிட்டிப் போவது வழமைதானே. சாதாரண பெண்ணொருத்தி நிலாவாகத் தெரிந்தபோது, அவ்வப்போது நான் சின்னச் சின்னக் கவிதைகளை எழுதுவதுண்டு. ஒரு நாள் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி கேட்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. வண்ணை தெய்வம் அவர்கள் „பிரசவக் களம்“ என்ற கவிதை பாடும் நிகழ்ச்சியை „விதைகளும் விழுதுகளும்“ என்ற தலைப்பில் நேயர்களைக் கவிதை பாட அழைத்து நடத்திக் கொண்டிருந்தார். அப்போது நானும் ஒரு கவிதை பாடினேன். அவர் தந்த உட்சாகம் என்னை அங்கே மறுபடி மறுபடி அழைத்தது.

சில நாட்களில் தமிழ் ஒலி நின்றுவிட்டது. தமிழ் அலை வந்து விட்டது. அங்கே „கவிதை பாடும் நேரம்“ என்றொரு நிகழ்ச்சி. தொகுப்பாளர்கள் கே.பி.லோகதாஸ் – தோழர் சுரேந்திரன் கூட்டணி! பாடல் காட்சியை பார்த்துவிட்டு நிராகரித்த நவரச நாயகனோடு வானலைகளில் உரையாட ஆரம்பித்து விட்டேன். பின் நாட்களில் அதே வானொலி நிர்வாகத்தினர் என்னையும் அழைத்து „வணக்கம் தமிழ் அலை“ என்று ஒரு நிகழ்ச்சியை கொடுத்தனர்.

எனது குரல் வளம் வானொலிக்கு ஏற்றபடியாலும், ஓரளவு திறமை இருந்ததாலும் வேகமாக‌ முன்னேற‌ முடிந்தது. கே.பி.லோகதாஸ் அவர்களை கண்டால் ஆசிரியர் மீது மாணவனுக்கு இருக்கின்ற பயம்! தெரியாதவர்களோடு அவர் அதிகம் பேச மாட்டார். பழகிய பின்பு பேச்சை நிறுத்த மாட்டார். அது அவருடைய சுபாவம்!

ஒரு நாள் தம்பி வா இருவரும் சேர்ந்து நிகழ்ச்சி செய்வோம் என்று அழைத்தார். நானும் மகிழ்ச்சியில் போய் அமர்ந்தேன். அந்த நிகழ்ச்சியில் நான் வணக்கம் மட்டும்தான் சொன்னேன். நிகழ்ச்சி முளுவதையும் அவரே நடத்தி முடித்து விட்டார். பின் நாட்களில் அதிகமான நிகழ்ச்சிகளை அந்த வானொலியில் நான் நடத்தியபோதும்; நவரச நாயகன் அழைத்தால் மட்டும் அன்பாக‌ மறுத்துவிடுவேன். ஆனால் மௌனமாக அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பதற்கு அவ்வளவு பிரியம்!

சிறப்பாக செய்தி வாசிப்பதோடு.., இசையும் கதையும், பாட்டும் பதமும், பல்சுவை, நாடகம், தாய் நிலம், சரணம் தேடும் பல்லவி, கவிதை பாடும் நேரம், இப்படி அவர் நடத்திய நிகழ்ச்சிகளின் பட்டியல் மிக‌ நீண்டவை. அன்பும், நகைச்சுவை உணர்வும் கலந்த இவரது பேச்சு நேயர்கள் பலரையும் கவர்ந்திருந்தது. தொலைக் காட்சியிலும் கூட சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்!

யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதால், முடிந்தளவு எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு செல்வார். சில வேளைகளில் வெடித்தும் இருக்கின்றார். அந்த வேளைகளில் நிஜாயம் அவர் பக்கம்தான் இருக்கும்!

அறிவுப்புத் துறையில் இருந்து விலகி வந்த பின்புதான் கே.பி.லோகதாஸ் அவர்களுக்கும் எனக்கும் அதிகமான நெருக்கம் ஏற்பட்டது. தொலைபேசியிலும், நேரிலும் மணிக்கணக்கில் பேசுவோம்! நான் நம்பிக்கையோடு மனம் விட்டுப் பேசுகின்ற ஒரே ஒருவர் இவர்தான். இவர் கலையை மட்டுமல்ல, பல மனிதர்களின் மனங்களையும் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்.

இவரை நண்பனாக எனது மனசு ஏற்றுக் கொண்டதில்லை. அண்ணன் என்ற உணர்வோடுதான் ஏந்தி வைத்திருக்கிறது! கூடிப்பிறந்தவருக்கோ, சொந்தங்களுக்கோ கட்டுப்படாத நான். இவர் சொல்லை மீறுவதில்லை. சத்தமாகக் கதைத்தாலே கட்டுப்பட்டு விடுவேன். ஏனென்றால் இவர் உண்மையானவர் என்று எனக்கு நன்கு தெரியும்!

பிரான்ஸில் பல கலைஞர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவர்தான். தயாநிதி, பிரியாலயம் துரைஸ், இரா குணபாலன், கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன் இப்படிப் பல மூத்த கலைஞர்களும் அடங்குவர்.
மூத்த இயக்குனர், நடிகர், பேச்சாளர், ஊடகவியலாளர் இப்படிப் பல்கலை அவதாரம் இவர்!

மேடையில் நின்று இவர் நடிக்கின்ற போது, பின் வரிசையில் அமர்ந்து பல நாடகங்களைப் பார்த்திருக்கின்றேன். அதே மாபெரும் நடிகரை நானும் இயக்குவேன் என்று கனவுகூடக் கண்டதில்லை!

நான் வளர் நிலைக் கலைஞன் என்ற நினைப்பில் இருந்து கொஞ்சமும் தழும்புவதில்லை! இருந்த போதிலும், கலையருவி கே.பி.லோகதாஸ் என்ற மாபெரும் கலைஞர் நடித்த 20 படைப்புகள் வரை, இதுவரை இயக்கியுள்ளேன் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். நான் பார்த்து வியந்தவரை இயக்கியதுதான் இந்தக் கலையால் நான் அடைந்த சந்தோசங்கள்! இன்னும் அவரும் நானும் இணைந்து பயணிக்கப் போகும் படைப்புகளின் எண்ணிக்கை மிக நீண்டவை!

நல்ல மனிதனாக, சிறந்த கலைஞனாக உலா வருகின்ற கலையருவி கே.பி.லோகதாஸ் ஒரு புத்தகம். நான் ஒரு பக்கத்தை மட்டும்தான் புரட்டியிருக்கின்றேன்.
மறுபக்கத்தையும் புரட்ட வேண்டும் என்ற காத்திருப்போடு…!

-பிரியமுடன்
கி.தீபன்

leave a reply