Breaking News

அமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களின் பிரிவில்… ஓராண்டு

மாயமிது வாழ்வெனினும் மரணமது முடிவல்ல!

என் அன்பில் கலந்த நண்பர்
ஊடகச் செம்மல்
அமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களின் பிரிவில்…
ஓராண்டு இன்று!

– இந்துமகேஷ்.

எனதன்பு வீ.ஆர்.வீ!

காரணங்கள் ஏதுமின்றி காரியங்கள் எதுவுமில்லை இவ்வுலகில்!
எல்லாவற்றுக்கும் ஏதோவொரு காரணம்
எங்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் கூடத்தான்!

வந்து பிறந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து வாழ்பவர்கள்தான் மாமனிதர்களாக வரலாற்றில் தங்கள் பெயர்பதித்துப் போகிறார்கள்!
அந்த வரிசையில் நீங்களும் இன்று!

என்நாடு, என்மக்கள், என்மொழி என்று
இதயசுத்தியோடு எப்போதும் இயங்கியவர் நீங்கள்!

புலம்பெயர்ந்த பின்னால்
அகதிகளாய் ஆனோமே என்று அழுது புலம்பாமல்
வெளிநாட்டு மோகத்தில் வீழ்ந்து மனம் புரளாமல்
தாயக விடுதலை நோக்கி தளராது பாடுபட்ட
நம்மவர்களில் முன்னவர் நீங்கள்!

எழுதுகோல் ஏந்திய என்போன்றவர்களுக்கு இணையற்ற தோழனாய்-
எதிர்காலச் சந்ததிகளும் தமிழர்களாய் வாழ்ந்திட அரும்பணியாற்றுகின்ற
தமிழாலயத்தின் வடமாநில பொறுப்பாளராய்-
கொண்ட கொள்கையில் பற்றுறுதி கொண்ட பண்பாளராய்-
மாற்றுக் கருத்தாளர்களையும் மாறாத புன்னகையோடு வசப்படுத்திக் கொள்ளும் மாண்புமிகு மனிதராய்-
ஊணுறக்கம் கருதாது இரவுபகல் பாராது
தாயகத்தின் கனவோடு சலியாது உழைத்திட்ட
உங்கள் விழிகளில் நீளுறக்கம் இன்று நிலையாகிப் போனதேன்?

உடல்நலக் குறைவால் நீங்கள் உயிர் பிரிந்தீர்கள் என்னும் காரணத்தை
நம்புதற்கு கடினம் எனக்கு!

உற்ற நண்பராய் உங்களை நான் உணர்ந்திருந்தேன்!
ஈராண்டின் முன்னே நீங்கள் உங்களை இழந்த உண்மை நேரிலே கண்டிருந்தேன் – நெஞ்சம் பரிதவித்தேன்!

கண்ணின் மணிபோலும் கலந்திருந்த உங்கள் உயிர்க்
காதல் மனையாளைக் காலன் பறித்த தினம்-
உயிரிழந்த உடலாக உங்களையே நான் அன்று கண்டேன்.

“என்னைத் தனியே விட்டு எங்கும் அவள் சென்றதில்லை
அவளைப் பிரிந்து நானும் அரைக்கணமும் இருந்ததில்லை
இன்றவளை விட்டுவிட்டு எத்தனைநாள் நானிருப்பேன்
இன்னும் சிலநாளில் என் கதையும் முடிந்துவிடும்!”

-சொன்னதுபோல் கதைமுடித்து சொல்லாமல் சென்ற உங்கள்
எண்ணத்தின் வலிமைதனை இந்நேரம் உணர்கின்றேன்!

வீட்டை நினைப்பவர்கள் நாட்டை நினைப்பதில்லை
நாட்டை நினைப்பவர்கள வீட்டை நினைப்பதில்லை
– இப்படிச் சொல்பவர்கள் தம்கடமை மறப்பதுண்டு
இரண்டையும் நினைப்பவர்கள் உங்களைப் போல் எவருண்டு?

மனை, மக்கள், மருமக்கள், பேத்திகள் என்றிவரோடு
உறவான நண்பர்கள், சுற்றத்தார் சூழ்ந்திருக்க
நிறைவான இல்வாழ்வு இறைவன் அளித்த வரம்!

வாழ்கின்றவரை எங்கள் வாழ்வெல்லாம் பிறர்க்கென்:று
சலியாது ஆற்றிநின்ற சமூகப் பணி உங்கள் தவம்!

தாயகத்து உறவுகட்காய் சலியாது உழைத்த உங்கள்
நேயத்தை எங்கள் நெஞ்சங்கள் நினைவில் வைக்கும்!
மாயமிது வாழ்வெனினும் மரணமிது முடிவல்ல
வாழ்ந்திருப்பீர் எம்முடனே – வரலாறாய் என்றென்றும்!

உங்கள் அன்பில் கலந்த
இந்துமகேஷ்

leave a reply