Breaking News

நெஞ்சே அடைக்கிறது: வலிகளை பகிர்ந்துகொண்ட ஈழத்து சிறுமி டிசாதனாவும், அவரது தாயாரும்

ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‚சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்‘ நிகழ்ச்சியில் ரன்னராக வந்தவர் டிசாதனா.

ஆறாம் வகுப்பு படிக்கும் அவருக்கு, குழந்தையிலிருந்தே இசையின் மீதான ஆர்வம் ஊற்றெடுத்துள்ளது. தானும் குடும்பத்தாரும் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், சந்திக்கும் வலிகளைப் பகிர்ந்துகொண்டார்கள் டிசாதனாவும் அவரது தாயாரும்.

டிசாதனாவின் அம்மா கமலேஷ்வரி, “நாங்கள் இலங்கையில் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. அப்போது எனக்கு வயசு 11. ஆறாம் வகுப்பு படிச்சுட்டிருந்தேன். ஆர்மி கேம்ப்க்கு பக்கத்துலதான் எங்க ஸ்கூல். அங்கேதான் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமிடையே சண்டை நடந்துச்சு.

முழுக்க முழுக்க அடக்குமுறை இருந்ததால், பள்ளிக்கூடம் போகமுடியாது. எனக்கோ பள்ளிக்கூடம் போக அவ்ளோ பிடிக்கும். ஆனால், படிப்பைவிடவும் உயிர் முக்கியமில்லியா? அதனால், ஒவ்வொரு நாளும் ஜனங்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிய வீதிகளை ஜன்னல் வழியாகக் கண்ணீர் வழிய ஏக்கத்தோடு பார்த்துட்டே இருப்பேன். இப்படி வீட்டுக்குள்ளே எத்தனை நாள்கள்தான் இருக்க முடியும்? நம்ம பிள்ளைகள் வாழணும்னு அப்பாவும் அம்மாவும் ஆசைப்பட்டாங்க.

இருக்கிற நகைகளை வித்து சாப்பிட்டுட்டு இருந்தோம். ஒரு கட்டத்துக்கு மேல சாப்பாட்டுக்கே கஷ்டம். பனை ஓலை மரத்தை வெட்டி, அதுல இருக்கிற குருத்தைச் சாப்பிட்டோம். ‚இங்கே கஷ்டப்பட்டது போதும், வேற நாட்டுக்குப் போறதைத் தவிர வேற வழியில்லை’னு முடிவுப் பண்ணினாங்க.

இலங்கை கடற்படைக்குத் தெரியாமல், தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு படகுல கிளம்பினோம். கொஞ்ச முன்னாடியே இறங்கி, இடுப்பளவுத் தண்ணீர்லேயே நடந்து, சிலரின் உதவியோடு ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்துசேர்ந்தோம்.

அங்கிருந்து அவ்வப்போது போகும் பஸ்ஸில் ஏறினோம். நாமக்கல், பரமத்தி வேலூருக்கு வந்துசேர்ந்தோம். உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு தன்னந்தனியா இன்னொரு நாட்டுக்கு அகதிகளாகப் போகும் துயரத்தை வார்த்தைகளால் விளக்க முடியாதுங்க.

அது எச்சிலை விழுங்க முடியாமல் நெஞ்சை அடைச்சுக்கும் அவஸ்தை. நான் விளையாடின அந்தத் தெரு, நான் சுற்றித் திரிந்த ஊர் பாதைகள், வாழ்ந்த வீடு என எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்துட்டோம். பரமத்தில் வேலூருக்கு எங்களோடு சேர்த்து ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகதியா வந்துச்சு. சொந்த பூமியை விட்டு வந்த துயரத்தில் பல நாள்கள் தூக்கமே இல்லை. கிடைச்ச வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சோம்.

 

பிறகு என் படிப்பைத் தொடர்ந்தேன். ஓரளவுக்கு பள்ளிப் படிப்பை முடிச்சேன். கல்யாணமும் ஆச்சு. ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தாங்க. எங்க வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷம்னா இந்த இரண்டு பிள்ளைச் செல்வங்கள்தான்.

என் கணவர் விமலநாதன் கட்டடவேலை பார்த்துட்டிருந்தார். டிசாதனாவுக்கு குழந்தையிலிருந்தே இசை ஆர்வம் அதிகம். தலையாட்டி, கையசைத்து இசையை ரசிப்பதைப் பார்த்தோம். கொஞ்சம் வளர்ந்ததும் பாட்டு வகுப்புக்கு அனுப்பினோம். கோவையில் ஜி தமிழ் நடத்திய ஆடிசனுக்குத் தயக்கத்தோடுதான் அழைச்சுட்டுப் போனோம்.

‚இலங்கை அகதியான எங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பீங்களா?’னு கேட்டோம். ‚திறமை எங்கே இருந்தாலும் வாய்ப்பு உண்டு’னு உற்சாகத்தோடு அனுமதிச்சாங்க. ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிபெற்று நிகழ்ச்சியில் பாட ஆரம்பிச்சா என் பொண்ணு. டிசாதனா ஒவ்வொரு நாள் ஷூட்டிங் போகும்போதும், நானே சாதிச்சுட்ட திருப்தி இருக்கும். வெற்றி தோல்வி சகஜம் என்பதை ஆரம்பத்திலிருந்தே அவளுக்குச் சொல்லிக்கொடுத்தோம். தமிழ்நாட்டுக்கு நாங்க வந்து 26 வருஷம் ஆகிடுச்சு. ஜி தமிழ் ‚சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்‘ நிகழ்ச்சியில், ‚விடைக்கொடு எங்கள் நாடே‘ பாட்டைப் பாடும்போதுதான், நாங்க பட்ட கஷ்டங்கள் பற்றி டிசாதனாகிட்டே முதல்முறையா சொன்னோம்“ என்று கலங்கும் கண்களைத் துடைத்துக்கொண்டே மகளைப் பார்த்து புன்னகைக்கிறார்.

“அம்மா எத்தனையோ முறை ‚இலங்கைக்குப் போயிடலாம்டா. நம்ம சொந்த ஊர் மாதிரி சொர்க்கம் எதுவும் இல்லைடா’னு சொல்லுவாங்க. நிலைமை சரியாகிட்டா அங்கே போய் இருக்கலாம் என்கிற ஆசை மனசுக்குள் இருக்கு. எங்க சொந்தக்காரங்க அங்கே இருக்காங்க. ஏதாவது பிரச்னைனாலோ, நல்லது நடந்தாலோ போனில் சொல்வாங்க.

அதைக் கேட்கும்போது, அங்கே தவிச்சுட்டு இருக்கவங்களுக்கு எப்போ விடிவு காலம் வரும்னு நினைப்பேன். என் அம்மாவின் அப்பா, அம்மா மீன்பிடித் தொழிலில் இருந்தவங்க. அம்மா இலங்கையில் இருந்தப்போ, இந்த மாதிரி பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை. மீனவர்களைச் சுட்டுக் கொன்றதில்லை. ஆனால், இப்போ நிலைமையே வேதனையா இருக்கு“ என அனுபவம் மிகுந்த வார்த்தையால் பேசுகிறார் டிசாதனா.

அவரைத் தொடர்ந்து பேசிய கமலேஷ்வரி, “இலங்கையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைத்தான் அடிக்கடி சொல்லிட்டே இருக்காங்க. எங்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமையும் இல்லை, இந்திய நாட்டின் குடியுரிமையும் இல்லை. இரண்டுப் பக்கமும் எந்த உரிமையில் இல்லாமல் ஊசலாடறோம்.

ஏதாவது ஒரு நாட்டின் குடியுரிமை கிடைச்சால் போதும். தங்குவதிலிருந்து அத்தனை அடைக்கலத்தையும் தமிழ்நாடு கொடுக்குது. ஆனால், எங்க நாட்டைப் பிரிஞ்சு இருக்கோமேனு நினைக்கும்போது கண்ணீரை அடக்க முடியலை.

எங்க தலைமுறை என்னவாகும்னு நினைக்க நினைக்க நெஞ்சே அடைக்குது. டிசாதனாவுக்கு இப்போ நிறைய வாய்ப்புகள் வருது. ஜி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய நன்றிகள். அவள் பெறும் வெற்றிகளை எங்க தாய்நாட்டு மக்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்“ என்கிறார் கண்ணீருடன்.

leave a reply