Breaking News

முதுமையின் முகங்கள்! -இந்துமகேஷ்

அந்தக் கிழவனை இப்போதுதான் பார்க்கிறேன்.

தெருவீதியைக கடந்துபோனபோது கடையொன்றின் கதவுக் கண்ணாடியில் அவனது உருவம் முழுதுமாய்த்
தெரிந்தது.
நேரில் அவனை நான் ஒருபோதும் இப்படிச் சந்தித்துக் கொண்டதில்லை.
எப்போதாவது அரைகுறையாகத்தான் அவனைப் பார்த்திருக்கிறேன்.
தலைமுதல் கால்வரை இன்றுதான் சரியாகப் பார்த்தேன்.

இப்போது பார்க்கையில் முன்னெப்பொழுதும் அவனை நான் சந்தித்துக் கொண்டதில்லையோ என்ற நினைப்பே எழுகிறது.

இளைஞனாக அடிக்கடி சந்தித்துக்கொண்ட அவனாக இவன் இல்லை.
முகத்தில் கைகளில் கால்களில் என்று ஆங்காங்கே கண்ணில்பட்ட பகுதிகளிலெல்லாம்
வரிக்கோலமிட்டிருக்கும் தோலின் சுருக்கங்கள் இவனது வாழ்வின் காலங்களுக்கு கணக்கிட்டுக் காட்டுகிறது.
பார்வைமட்டும் கூர்மையாய் எல்லாவற்றையும் எல்லாரையும் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
சின்னஞ்சிறுசுகள் முதல் பென்னம் பெரிசுகள்வரை ஆரையும் அலட்சியம் செய்யாமல் ஆராய்கிற மாதிரி
அவனது கண்கள் அவர்கள்மீது விழுந்து மேய்கிறது.

அவனைக் கடந்து போகிறவர்களெல்லாம் ஏனோ அவனிடமிருந்து தப்பித்துவிட நினைக்கிறவர்கள்மாதிரி
நடையை எட்டிப் போடுகிறார்கள்.

அவனது கண்ணில் படாமல் தனது குழந்தையை தன்னுள் மறைத்துக்கொண்டு விரைகிற தாய்..
எரிச்சலோடு அவன்மீது பார்வையை எறிந்தவிட்டு விலகிப்போகிற பெரிய மனிதர்கள்..

பார்வையாலேயே தங்களைக் கவ்விக்கொண்டு விடுவானோ என்று பரிதவித்துப் போகிறமாதிரி
விலகியோடுகிற இளம்பெண்கள்…

விறைத்த பார்வையோடு அந்தக் கிழவன் ஒரு வாங்கில் போய்க் குந்திக் கொள்கிறான்.
தொலைந்துபோன வாழ்வின் பக்கங்களை நினைவுப் புத்தகத்திலிருந்து மீட்ட நினைத்தானோ என்னவோ
கண்களை மெள்ள மூடிக்கொண்டு வாங்கில் மெள்ளச் சரிந்துகொள்கிறான்.

„வா மோனை வந்து சாப்பிட்டிட்டுப் பள்ளிக் கூடத்துக்கு ஓடு!“
-சின்னவயதில் அம்மா.

அதே அம்மா இவன் வளர்ந்தபோது சலித்துக் கொண்டாள்.
„எல்லாப் பிள்ளையளும் படிச்சுப்போட்டு நல்ல உத்தியோகத்திலை இருக்குதுகள் .. நீ மட்டும் இப்பிடிப்
பொடியளோடை ஊர் சுத்திக்கொண்டு திரியிறது நல்லதில்லை மோனை!“

அம்மாவிலிருந்து விலகி கூடுபிரிந்து சிறு பறவையாய் தனித்துப் பறந்தபோது ஒட்டிக்கொண்ட புதிய உறவுகள்.. நட்புக்களாய்….
ஆனால் அவையும் சிலகாலம் மட்டுமே.

இளைஞனானபோது கனவுக்கன்னி என்று காதலைக் காட்டியவளிடம் காதலைச் சொன்னான்.
„உன்ரை மூஞ்சிக்குக் காதல் கேட்குதோ?“
அவள் திருப்பிச் சொன்னாள்.
அவளைக் கடந்தபோது எதிர்ப்பட்ட இன்னொருத்தி சொன்னாள்:
„உங்களுக்கென்ன.. உங்கள் அழகுக்கும் பண்புக்கும் ஈடாக உலகில் ஒருத்தருமே இல்லை. உங்களைக்
கட்டிக்கொள்ள அவளுக்குப் பலனில்லை!“.

இவளே காதலியாய்.. பிறகு மனைவியாய்..!
கால மாற்றத்தில், „மூஞ்சி சரியில்லை “ என்ற முன்னவளை விட, இவளே இவனை வார்த்தைகளால் தூக்கி அடித்தாள்.
„எவ்வளவோ நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டியவள்.. உம்மைக் கட்டிக்கொண்டு என்ன சுகத்தைக் கண்டன்?!“

அடுத்தடுத்து மனதில் அடிகள் விழ ஆரம்பித்தன.
துன்பங்கள் தூர இருந்து வருவனவல்ல.அவை பிறப்போடு கூடவே வருகின்றன என்ற ஞானம் துளிர்க்க ஆரம்பித்தது.

பிள்ளைகள் பிறந்த பின் இந்த ஞானம் மேலும் தழைத்தது.
„அப்பா..! அப்பா..!“ என்று அணைந்த பிள்ளைச் செல்வங்கள் சற்று வளர்ந்ததும், „எப்போ நீ எங்களைவிட்டுப் போவாய்?“ என்று கேட்கிறமாதிரிப் பார்க்க ஆரம்பித்தன.

இவன் எப்படிப் போவது?
அவர்களாய்ப் போனார்கள் வாழ்க்கையைத் தேடிக்கொண்டு. இப்போது இவன்மட்டும் தனியனாய்….!?

எங்கிருந்து வந்தேன்? எங்கே போகப்போகிறேன்? என்ற கேள்விகளுக் கிடையில் தனக்கென ஒரு துணைதேடும்
தனிமையில் இவன்.

இந்தத் துணை இனி மனிதர்களிடமிருந்தல்ல-
அதற்கும் மேலான ஒன்றிடமிருந்து!

தனிமை இவனைப் பயங்கொள்ள வைக்கிறது.
ஒரு பற்றுதல் இல்லாமல் பாசம் இல்லாமல் வாழ்வாவது?

பற்றுக் கோடாய் இறைவன்.
ஆத்மாவில் ஆத்மாவாய் அவன்.

எப்போதோ கோயிலில் கேட்ட சிவபுராணத்தின் வரிகள் மனதில் புரள்கிறது –
……………………………………………………………………
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே…
……………………………

அந்தக் கிழவனை இப்போது நான் மிக நெருங்கிப் பார்க்கிறேன்.
மனதில் மின்னலடிக்கிறது.
இந்த முகத்தை இளமையாக நான் பார்த்திருக்கிறேன்.
இது..இது…இது…?
இது என் முகமல்லவா?!

-இந்துமகேஷ்.

leave a reply