Breaking News

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்கிறது என்பது உண்மை”

இதைச் சொன்னவர் யார்

ஒரு மாணவன் சித்தத்தில் சிலை வடிக்கும் சிற்பக்கலைக்கும்  ஓவியக்கலைக்கும் மனதைப் பறிகொடுத்தான். தன் சிந்தனையில்  கலையைக் கட்டிப்போட்டான். எண்ணம் எல்லாம் ஊறிக்கலந்திருந்த கலையை கலைத்துவிட்டு வாழ அவன் ஒன்றும் சாதாரண மகன் அல்ல. குரும்பசிட்டி பொன். பரமானந்த வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் பெற்றெடுத்த ஒரு கலை முத்து. உலகப் பல்கைக்கழகத்தின் (Cultural Doktorate in Fine Arts – USA ) கவின்கலையில் கலாநிதி என்னும் உயர் கௌரவத்தைப் பெற்ற முதல் ஈழத்துத் தமிழன். வாழ்க்கை முழுவதும் இரு துறைகளில் தடம் பதித்து புகழோடும் வாழும் நற்குண மனிதன். அவர் தான் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன். இவர் கவிஞனாய், ஓவியனாய், சிறுகதையாளனாய், பேச்சாளனாய் பல்வேறு பரிமாணங்களை எடுத்து ஜேர்மனியில் வாழ்ந்து வருபவர்.

1950 அன்று தந்தையார் ஆரம்பித்து வைத்த வெற்றிமணி பத்திரிகையை ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு நடத்திக் கொண்டு இருக்கின்றார். இரவு நேரம் முழுவதுமாகத் தன் வாழ்வாதாரப் பணியில் ஈடுபட்டு, பகல் முழுவதுமாக இலக்கியத்துறைக்குத் தன்னை அர்ப்பணித்து வெற்றிமணி என்னும் பத்திரிக்கையை ஜேர்மனி, இங்கிலாந்து, இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலும் இலவசப் பத்திரிகையாக வெளிவரச் செய்கின்றார். அதேபோல் சிவத்தமிழ் என்னும் சஞ்சிகையும் ஆன்மீகச் சஞ்சிகையாக வெளிவருகின்றது. வெற்றிமணி பத்திரிக்கை ஆனி மாதம் 2017 ல் 250 ஆவது பத்திரிகையாக வெளியாகியுள்ளது. இப் பூரிப்பில் இப்பத்திரிகையைக் கையேந்தி  தனது தந்தையார் வாழ்ந்து மடிந்த வீட்டின் முன் நின்று கொண்டு வாசித்துள்ளார். தனது தந்தையின் மூச்சுக் காற்றை உணர்ந்தவராய் இவ்வரிகளைக் கூறுகின்றார்.

தனது 250  ஆவது நிறைவை நினைவு கூர்ந்து அப்பத்திரிகையில் எழுதி வருகின்ற எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் முகமாக விருதும் விருந்தும் என்னும் ஒரு நிகழ்வினை  வெற்றிநிலா முற்றம் என்னும் பெயரில் விருதும் விருந்தும் நிகழ்வாக ஜேர்மனி schwerte நகரில் 16.09.2017 அன்று மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்.

 

 கலைஞர்கள், எழுத்தாளர்கள், மத குருக்கள், வாசகர்கள் என ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். குறிக்கப்பட்ட நேரத்தில் மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பிக்கப்பட்டது.  schwerte அம்மன் கோவில் மத குருக்களினுடைய மகனின் தேவரத்துடன் விழா களைகட்டத் தொடங்கியது. ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்துமத குருக்கள் மூவர்  ஆசியுரை வழங்கியிருந்தார்கள்.

தமிழர் கலாச்சார நற்பணி மன்ற, நுண்கலைக்கல்லூரி, அறநெறிப்பாடசாலை ஸ்தாபகர் நயினை விஜயன் அவர்களுக்கும், ஆன்மீகத் தென்றல் புவனேந்திரன் அவர்களுக்கும், நடனக் கலைஞன் நிமலன் சத்தியகுமார் அவர்களுக்கும் சிவத்தமிழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

                     5 நிமிட உரைகள் என்று வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன. அதில் நானும் எனது உரையை நடத்தியிருந்தேன். நிகழ்வில் கவனக் குறைவு ஏற்படாத வகையில் இடையிடையில் பரதநாட்டியம், வீணை இசை, திரை இசைநடனம், வெற்றிமணி ஆசிரியருடைய மகன் சஞ்சி சிவாவினுடைய  நெறியாள்கையில் வெளியான பாடல்களைப் பாடிய பெண்குரல்களுக்குரிய தான்யா, விஜிதா ஆகிய இருவருடைய பாடல்களும்,  இலங்கைத் திருத்தலங்களின் ஒளிவடிவங்களும் அகலத் திரையில் காண்பிக்கப்பட்டன.

 

தமது திறமையில் அனைவரையும் கவர்ந்த வெற்றிமணி ஆசிரியருடைய மகன் சஞ்சி சிவா, நெடுந்தீவு முகிலன் ஆகியோர் நெறியாள்கையில்  வெளியான குறுந்திரைப்படங்கள் அகலத் திரையில் காண்பிக்கப்பட்டன. எதிர்காலத் தலைமுறையினரின் அதீத வளர்ச்சியினை இத்திரைப்படங்கள் வெளிப்படுத்தின. இந்நிகழ்ச்சிகளை அகரம் சஞ்சிகை ஆசிரியர் த.இரவீந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.

இறுதியில் வெற்றிமணி விருது உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது எனக்கும் கிடைத்தது பெரும் மதிப்பைத் தருகின்றது. ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

பொதுவாகவே நிகழ்வுகள் முடிவடைந்ததும் களைப்புடனே வீட்டிற்கு வருவது வழைமை. ஆனால், இந்நிகழ்விற்கு எவ்வாறு சென்றோமோ அந்த சுறுசுறுப்புடனேயே வீடு வந்தடைந்தோம். வெற்றிமணி ஆசிரியர் தன்னுடைய பத்திரிகையில் காட்டுகின்ற கவர்ச்சியையும், புதுமையையும், நேர்த்தியையும் நிகழ்ச்சியிலும் காட்டியிருந்தார்

 

 

 

 

 

 

leave a reply