Breaking News

வந்தது தெரியும் – போவது எங்கே? -இந்துமகேஷ்

பாழடைந்து கிடந்த அந்தப் பழையகாலக் கல்வீடு இருந்த சுவடேதும் இன்றி முற்றிலுமாய்த் துடைத்தழிக்கப்பட்டுவிட்டது. பற்றைக் காடெனச் சுற்றிப் படர்ந்திருந்த மரம் செடி கொடிகளும் இப்போது அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தன. வீடு இருந்த இடம் இப்போது வெட்ட வெளியாய் விரிந்து கிடக்கிறது. இன்னும் சில காலத்தில் இங்கே ஒருவீடு இருந்ததற்கான எந்தச் சான்றும் இருக்கப் போவதில்லை.

அந்த வீட்டில் குடிகொண்டிருந்து இரவு நேரங்களில் ஊரவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த பேய் பிசாசுகள் இப்போது எங்கே போயிருக்கும்? அதைப்பற்றி அக்கறைப்படுவர் எவருமில்லை. எங்காவது இன்னோர் பாழடைந்த வீட்டைநோக்கிப் போயிருக்குமோ? தெரியவில்லை!

மனிதன் வாழும்வரை அவனது மனத்தை நிறைத்திருக்கும் எண்ண அலைகள் அவன் உயிர்நீத்த பின்னும் இந்தக் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றனவோ? நல்ல எணணங்கள் கடவுளையும் தீய எண்ணங்கள் பேய்களையும் வாழும் மனித மனங்களில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவோ?

எல்லாம் மன உணர்வுகளின் வெளிப்பாடுதான். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான். பேய் அவன் மனதில்தான் வெளியில் இல்லை.

„உலகம் மாயை.. தெய்வம்மட்டுமே நிரந்தரம்!“ என்று ஞானவழிநோக்கி நடைபோடுபவனும் சரி „கடவுள் என்பது கற்பனை. இந்த உலகம் மட்டுமே நிரந்தரம்!“ என்று தர்க்கம் புரிபவனும் சரி எல்லோரும் ஒருநாள் மரணத்தின் வாசலில்தான் வந்து நிற்கிறார்கள்.

அந்தப் பொழுதில் மற்றவர்களிடம் கேட்க முடியாத கேள்வி அவர்களிடத்து எழவே செய்யும். தம்மைத்தாமே அவர்கள் கேட்டுக் கொள்வார்கள்:

„இனி எங்கே?“

மரணம் நிகழும் அந்தப் பொழுதில் அவர்களுக்கு விடைகிடைக்கும். ஆனால் அதை வந்து மற்றவர்களுக்குச் சொல்லாமலேயே அவர்கள் போய் விடுவார்கள்.

இந்த மண்ணில் மனிதனைப் பிரசவிக்க ஒரு தாய் இருப்பதுபோல் இந்த உடல்நீங்கும் நேரம் அந்த உயிரை வரவேற்கவும் எங்காவது யாராவது தயாராக இருப்பார்கள் என்பதும் நம்பிக்கைக்குரியதுதான்.

இந்த நம்பிக்கையின் மூலப் பொருளே கடவுள்.

மரணபயமே மதங்களின் ஊற்றாக இருந்திருக்க வேண்டும்.உடலோடு வாழும் வாழ்க்கைக்கான நெறிமுறைகளை வகுத்துத் தந்த மதங்கள் மரணத்துக்குப் பின்னும் வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு கூடிய ஆறுதலையும் தருகின்றன.

பிறந்தது முதல் இறப்பதுவரையில் நாம் வாழக் கற்றுக்கொள்வதும் நமது முன்னோர்களின் வாழ்க்கையின் அடிச்சுவட்டில்தான். நமது வாழ்க்கை என்பதும் அவர்களது வாழ்க்கையின் தொடர்ச்சிதான். அவர்களது அனுபவங்களே நமக்கு வழிகாட்டுகின்றன. நாங்கள் தொடர்கிறோம். இன்ப துன்பங்கள் ஒவ்வொருவரினதும் சுயானுபவமாக இருந்தாலும் அவை மற்றவர்களாலேயே நமக்குத் தரப்படுபவை.

ஆன்மஞானம் பெற்றவர்கள் நமக்குத் தந்துவிட்டுப்போன அவர்களது கருத்துக்கள் மரணம்பற்றிய தெளிவை நமக்குக் கொடுக்க முயல்கின்றன. மனித ஆன்மாவானது புலன்களால் உணரக்கூடிய தூல உடலாகவும் மனம் மற்றும் உணர்ச்சிகளால் ஆன சூக்கும உடலாகவும் எண்ணங்களால் ஆன காரண உடலாகவும் என மூவகை உடலைப் பெற்றிருக்கிறது. தூல உடல் எனும் தற்போதைய நமது உடலை மரணத்தின்போது நீக்கும் நாம் சூக்கும உடலை அடைகிறோம் என்றும். அதில் சிலகாலம் வாழ்ந்து முடித்து எண்ணங்களால் ஆன காரண உடலைபபெறுகிறோம் என்றும் ஞானியர் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு உடலாகக் களைந்து இறுதியில் மூலப் பரம்பொருளான இறைவனிடம் உயிர் போய்ச் சேர்ந்து கொள்கிறது என்று அவர்கள் தந்துள்ள விளக்கம் மரணம் பற்றியதான ஒரு தெளிவை நமக்குத் தருகிறது எனினும் அது குறித்து நாம் இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கலாம். இந்த உலகின் கடைசி மனிதனின் மரணபயம் தீரும்வரை அந்த விவாதமும் தொடரும்.

„ இப்போது நீ என்ன சொல்லவருகிறாய்? வந்தது தெரியும்! போவது எங்கே என்பது உன்னால் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதா? மரணம் என்பது எல்லோருக்கும் ஒரே முடிவைத்தான் தருகிறதா? நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் வாழ்ந்து முடித்த இருவகை மனிதர்களுக்கும் ஒரே முடிவுதானா? இயற்கையாய் மரணித்தவனுக்கும் விபத்தினால் உயிரிழந்தவனுக்கும் கொலை செய்யப்பட்டவனுக்கும் கொலைசெய்து மரணதண்டனை பெற்றவனுக்கும் ஏற்படக்கூடிய மரணங்கள் எல்லாமே ஒரே விதமானவைதானா? எல்லோரும் இந்தப் பூமியில் வந்து பிறந்ததுபோல் எல்லோரும் திரும்பிப் போகும்போதும் ஒரே இடத்துக்குத்தான் திரும்புகிறார்களா?

– கேள்விகள் நீண்டு கிடக்கின்றன.

பதில் ஒன்றுதான்

-மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல!

இதுவே எல்லாக் கேள்விகளுக்குமான ஒரே பதில்! இந்தப் பதிலை ஒத்துக் கொண்டாலும் நிராகரித்தாலும் இந்தப் பதில் குறித்த கேள்விகள் மறுபடியும் முளைக்கும். மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல எனில் மரணத்துக்குப் பின் என்ன? என்ற கேள்வியும்
மரணத்தோடு இந்த வாழ்க்கை முற்றுப் பெறுகிறதெனில் இதுநாள்வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்ற கேள்வியும் எழுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

„எங்கே போகிறோம்?“

பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனித உயிரும் இந்தக் கேள்விக்குள் சிக்காமல் தப்புவதில்லை. இந்தக் கேள்விக்கான விடைதேடுவதில் விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறார்கள். மரணம்குறித்து ஒரு அறிஞன் சொன்னான்:

„நான் உயிரோடிருக்கும்வரை எனக்கு மரணம் நேரப் போவதில்லை. மரணம் வந்தபின்னால் நான் உயிரோடிருக்கப் போவதில்லை. பிறகு மரணத்தை எண்ணி நான் அஞ்சுவானேன்.?“

 

செத்திடமும் பிறந்திடமும் இனிச் சாவாதிருந்திடமும்
அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ
ஒத்தநில மொத்தபொருள் ஒரு பொருளாம் பெரும்பயனை
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே!
-(மாணிக்கவாசகர்)

(இதற்கு முன்னால் பல பிறவிகள் எடுத்துச் செத்த இடங்கள் மீண்டும் பிறந்த இடங்கள் இனிமேல் சாவாமல் இருக்கும் இடமாகிய சிவலோகம் ஆகிய எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாத ஞானிகளாலும் அறிந்துகொள்ளக் கூடிய ஒரே பொருள் அறிவுருவாக இருக்கின்ற நீதான். நிலவுலகங்கள் அனைத்தும் ஒரே இயல்பினை உடையவை. அங்குள்ள பொருள்கள் அனைத்தும் ஒரே தன்மையினைக் கொண்டவை என்ற மெய்ம்மையினை எனக்கு உணர்த்தியவனும் நீயேதான். அந்நாளில் என் அப்பனாகிய நீ எனக்கு மிக எளிமையாக வந்து அருள் தந்தாயே! எனக்குக் கிடைத்த அந்த அருளினைப்போல் வேறெவரால்தான் உன்னிடமிருந்து பெறமுடியும். இதுவும் ஓர் அதிசயம்தானே?”

leave a reply