Breaking News

பத்து வயது வரைக்கும் அம்மாவின் அரவணைப்பில் படுத்து உறங்கியவர்கள்..

இன்றைய தலைமுறை போல்
எனது தலைமுறையினர்
தனிப்படுக்கையில் உறங்கியது இல்லை.
பத்து வயது வரைக்கும் அம்மாவின்
அரவணைப்பில் படுத்து உறங்கியவர்கள்..
எந்தவித உணவும் என் தலைமுறைக்கு
விலக்காகவோ அல்லது ஒவ்வாமையாகவோ இருந்ததில்லை.
வேண்டிய எதையும் சாப்பிடுவோம்.
சைக்கிள் ஓட்டும்போது நாங்கள் தலைக்கு கவசம் தேடியது இல்லை.
விழுந்து முழங்கால் உரசிப்பட்டாலும்
எச்சிலைத் தொட்டுத் துடைத்துவிட்டு மீண்டும் ஓட்டுவோம்.
பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தால் ஒரே விளையாட்டுத்தான்.
அறைக்குள் அடைபட்டுக் கிடந்ததில்லை.
நாங்கள் விளையாடியது கால்பந்து, கரப்பந்து,கிட்டிப்பொல்லு,
பச்சைக் குதிரை,சில்லிக்கட்டை,தட்டுக்கோடு மென்பந்து கிரிக்கெட் என்று
நிஜ விளையாடுகள்.நெட் விளையாட்டுகள் கிடையாது.
தாகம் எடுத்தால் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிப்போம்.
பள்ளியிலும் சரி. விளையாடும் இடத்திலும் சரி
நாங்கள் போதல் தண்ணீர் குடிக்க வாய்ப்பு இல்லை.
ஒரு எலிபன்ட் சோடா வாங்கி நாலுபேர் மாறி மாறி குடித்தாலும்
எங்களுக்கு நோய் ஏதும் வந்ததில்லை.
அதிக அளவு இனிப்பும், தட்டு நிறைய சோறும் சாப்பிட்டாலும்
நாங்கள் குண்டாகியது கிடையாது.
காலில் அனேகமாக பாத அணிகள் எதுவும் இல்லாமலே வலம் வருவோம்.
அதனால் எங்களின் கால்களுக்கு ஒன்றும் ஆனதில்லை.
குப்பி விளக்கில், சிமினி விளக்கில் படித்திருக்கின்றோம்
அதனால் கண்கள் பழுதாகி கண்ணாடி அணிந்ததில்லை.
உடல் வலிமைக்கு ஊட்டச்சத்து பானங்கள் அருந்தியதில்லை.
மிஞ்சிய சோற்றில் தண்ணீர் ஊற்றி அதைக் காலையில் குடித்தே
வலிமை பெற்றோம். உற்சாகம் அடைந்தோம்.
எங்களுக்கு வேண்டிய விளையாட்டுப் பொருட்களை நாங்களே தயாரிப்போம்.
டயர் உருட்டுதல்,நுங்குவண்டில் உருட்டுதல், தென்னை ஓலையில் பம்பரம்,
குரும்பட்டியில் ஈர்க்கு குத்தி கிறுக்கி செய்தல் இப்படி பல.
எங்கள் பெற்றோர்கள் பண வசதி படைத்த லட்சாதிபதிகள் அல்ல.
அவர்கள் பணம் பணம் என்று ஓடியது கிடையாது.
அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பு ஒன்றுதான்.
அவர்கள் கூப்பிடு தூரத்தில்தான் நாங்கள் இருப்போம்.எங்களை தொடர்புகொள்ள
ஒரு கூப்பாடு போட்டாலே போதும். இன்றுபோல் அலைபேசி தேவையில்லை.
உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டால் முதலில் பாட்டி வைத்தியம்தான்.
அதன் பின்புதான் வைத்தியரின் வைத்தியம்.
எங்கள் உணர்வுகளை நாங்கள் உதட்டசைவில் அலைபேசியிலோ
அல்லது தொலைபேசியிலோ பரிமாறவில்லை.
மாறாக எழுத்தில் வடித்து கடிதமாக அனுப்புவோம்.
எங்களிடம் இன்றைய தலைமுறைபோல் செல்போன்,
ஸ்மாட்போன், பிளேஸ்டேசன்,, வீடியோகேம்,கொம்பியூட்டர்,நெட், எதுவும் இல்லை.
ஆனால் நிறைய நண்பர்கள் இருந்தார்கள்.
எவர் வீட்டுக்கும் எப்பவும் எந்த நேரத்திலும் செல்லுவோம்
இன்றுபோல் போவதற்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை.
உறவுகள் அருகில் இருந்ததால் உடலும்,உள்ளமும் நன்றாக இருந்தன.
அதனால் உடல் நலத்துக்கு காப்புறுதி எடுத்ததில்லை.
இன்றைய தலை
முறையினருக்கும், இதற்கு முந்திய முந்திய தலை முறையினரிடமும் எவ்வளவு மாற்றங்கள். (25 வருடங்களை ஒரு தலைமுறையாக எடுத்துக் கொண்டேன்)
என்னதான் அறிவியல் யுகத்தில் இன்று வாழ்ந்தாலும்
அன்றைய வாழ்க்கை வருமா? அறுபது வயதுக்கு மேற்ப்பட்டோர் சொல்லுங்க.

கோவிலுர் செல்வராஐன்

leave a reply