Breaking News

பூவரசு வாசகர் (மலரும் நினைவுகள் )அரங்கம்-1999

பூவரசு கலை இலக்கியப் பேரவையின் 
வாசகர் அரங்கம்-1999 

This image has an empty alt attribute; its file name is 1poo99.jpg

பூவரசு இனிய தமிழ்ஏட்டின் எட்டாவது ஆண்டு நிறைவுமலர் கடந்த 23.01.99 சனிக்கிழமை மாலை பிறேமன் நகரில் வாசகர்கள் மத்தியில் வாசகர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வாசகி திருமதி பராசக்தி பாலசுப்பிரமணியம் பூவரசு கலை இலக்கியப் பேரவையின்  பிரதம ஆலோசகர் திருமதி வில்ரூட் கடெல்கா ஆகியோர் மங்களவிளக்கேற்றி வைபவத்தை ஆரம்பித்து வைத்தனர். வாசகி திருமதி சாந்தராணி பத்மகுமார் வரவேற்புரை வழங்கினார்.

உரையாற்றிய பூவரசு இனியதமிழ் ஏட்டின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான திரு இந்துமகேஷ் பூவரசின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருப்பவர்கள் அதன் வாசகர்களும் படைப்பாளர்களும் என்றும் அவர்களது பேராதரவே பூவரசின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றது என்றும் குறிப்பிட்டார் வளர்ந்துவரும் இளைய தலைமுறையினரிடையே உருவாகிவரும் புதிய படைப்பாளர்களின்  ஆக்கங்கள் குறித்து கருத்து வெளியிட்ட அவர் புதிய படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கு பூவரசு முன்னுரிமை அளித்து வருகின்றது எனவும் எதிர்காலத்தில் சிறந்த பல படைப்புக்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் இளம்தலைமுறை எழுத்தாளரிடையே தெரிகின்றது எனவும் மகிழ்ச்சி தெரிவித்தார். வுழக்கம்போல் இந்த ஆண்டுக்கான பூவரசு கலை இலக்கியவிழா பெரிய அளவில் ஒழுங்குசெய்யப்படவில்லை எனவும் பூவரசு வாசகர்கள் பலரது விருப்பப்படியே இவ்வெளியீட்டு வைபவமும் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பூவரசு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பூவரசைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் இந்துமகேஷின் கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டிய எழுத்தாளர் திரு. வீ.ஆர்.வரதராஜா இப்பணிகளை இந்துமகேஷ் மேலும் தொடர்வதற்கு வேண்டிய ஊக்கத்தினை வழங்கும்படி வாசகர்களையும் படைப்பாளர்களையும் கேட்டுக்கொண்டார்.  எழுத்தாளர் திரு. எழிலன் தனது உரையில் எழுத்தாளர்களின் சமூகக் கடமைகள்பற்றிக் குறிப்பிட்டார். 
எத்தகைய நிலையிலும் அஞ்சாது தனது கருத்துக்களைச் சொல்லும் எழுத்தாளன் சொல்லிலும் செயலிலும் உறுதியாக நிற்கவேண்டும் என்றும் ஒருசிலரின் அர்த்தமற்ற விமர்சனங்களால் பாதிப்படையாமல் அவன் தனது பணிகளைத்தொடரவேண்டும் என்றும் வலியுறுத்திய எழுத்தாளர் திரு. இராஜன் முருகவேல் தனது பத்திரிகை அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டு உரையாற்றுகையில் எதிர்காலத்தில் இன்றைய நமது வாழ்வைப் பிரதிபலிப்பது இன்று எம்மால் படைக்கப்படும் இலக்கியங்களே என்றும் அவற்றை வெளிப்படுத்தும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் என்றும் ஒரு சஞ்சிகையாளன் சந்திக்க நேரிடும் சவால்களை வென்று ஒரு சஞ்சிகையை வெளிக்கொணர்வது அத்தனை  சுலபமான காரியமல்லவென்றும் இந்து முயற்சியில் சளைப்பின்றி உற்சாகமாக ஈடுபட்டு வரும் இந்துமகேஷின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என்றும் பூவரசு எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் தனது கலை இலக்கியப்பணிகளில் வளர்ச்சிபெற்றிருப்பதற்கு காரணகர்த்தாக்களான வாசகர்கள் தொடர்ந்தும் தமது ஆதரவை பூவரசுக்கு வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

எழுத்தாளர் திரு. செ.யோகநாதன் பேசுகையில் பூவரசு கலைஞர்களையும் கலை இலக்கிய ஆர்வுலர்களையும் வெளிக்கொணர்ந்து அவர்களது திறமைகளை ஊக்குவிப்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால் தன்னையே உதாரணமாக்கலாம் என்றார். ஓரளவு கவியாற்றல் உள்ள தன்னை முதன்முறையாக 1992இல் கவியரங்கில் மேடையேற்றிய பூவரசு சுயமாகப் பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடவும் வழிசமைத்தது, பட்டிமன்றத்தில் பங்குகொள்ளவைத்துப் பேச்சாற்றலை வளர்த்தது என்று பல்வேறு துறைகளிலும் தன்னுள் பொதிந்துள்ள கலையாற்றலை வெளிக்கொணரவைத்தது பூவரசே என்று நன்றி தெரிவித்த அவர் இதுபோல எத்தனையோ கலை இலக்கியவாதிகளுக்கு ஊக்கமளித்து அவர்களது திறமைகளை வெளிக்கொணரும் பூவரசு பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழ்ப்பணி புரியவேண்டும் என்று வாழ்த்தினார்.

பூவரசுக்கான வாழ்த்துக் கவிதையொன்றை இளம் எழுத்தாளரான விக்கினேஷ் படித்தார்.
இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான் திரு.எஸ் தேவராஜா (சால்ஸ்கிற்றார்) பூவரசு வளருது என்னும் தனது வாழ்த்துப்பாடலை வாசகர்களுடன் இணைந்து பாடினார்.பாடகர் திரு. பாலசுப்பிரமணியம் பூவரசு ஆண்டுமலருக்கென தான் எழுதி அனுப்பிய வாழ்த்தக் கவிதையை மெட்டமைத்துப் பாடினார். 
வாசகர்கள் சார்பில் திரு.சு.மகேந்திரமூர்த்தி திரு.சிவராஜா பிரம்மஸ்ரீ சசிகரசர்மா ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினார்கள்.

வாசகர் அரங்கின் சிறப்புநிகழ்ச்சிகளாக இந்துமகேஷ் எழுதி பூவரசு 2வது ஆண்டு மலரில் வெளியான நெஞ்சுக்குள்ளே ஒரு(த்)தீ  நெடுங்கதை அவரால் இசையும் கதையுமாக மாற்றப்பட்டு திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வம் அவர்களால் வாசிக்கப்பட்டது இக்கதைக்குப் பொருத்தமான பாடல்கள் திரையில் ஒளிபரப்பப்பட்டது நிகழ்ச்சிக்கு அழகுசேர்த்தது.

தொடர்ந்து மனிதநேயம் என்னும் தலைப்பில் விவாதமேடை இடம்பெற்றது. எழுத்தாளர் திரு.இராஜன் முருகவேல் திரு. டொன்பொஸ்கோ ஞானச்செல்வம்; எழுத்தாளர் திரு. எழிலன் ஆகியோர் பங்குகொண்டனர்.வாசகர் அரங்கின் இறுதிநிகழ்வாக 1984இல் திரு.பி.விக்னேஸ்வரனின் தயாரிப்பில் உருவான இந்துமகேஷின் உதயத்தில் அஸ்தமனம் தொலைக்காட்சி நாடகம் திரையில் காண்பிக்கப்பட்டதுவாசகர் அரங்கம் முற்றிலும் இலக்கிய நிகழ்வாக அல்லாமல் ஒரு தரமான கலை இலக்கிய நிகழ்வாகவே அமைந்தது என்று வாசகர்கள கருத்துத் தெரிவித்தனர்.பூவரசு கலை இலக்கியப் பேரவை சார்பில் திருமதி சசிகலா தேவராஜா அவர்களின் நன்றியுரையுடன் வாசகர் அரங்கம் 99 நிறைவு பெற்றது.

-வாசகன்

leave a reply