Breaking News

பிரவீனா நர்த்தனாலயத்தின் முதலாவது ஆண்டு பரதக்கலை விழா 23.06.19 நடைபெற்றது.

பரதக்கலைவிழா

கடந்த 23.06.19 அன்று சாபுறூக்கன் டுட்வைலர் என்ற இடத்தில்,பல கௌரவ விருதுகைளைப் பெற்றவரான கலாநிதி திருமதி.வானதி தேசிங்குராஜா அவர்களின் ‚வானதி வாணி நர்த்தனாலயத்தில் சிறுமியாக இருந்த போது இணைந்து அவரைக் குருவாக ஏற்று பல ஆண்டுகளாக நடனக் கலையைக் கற்று பரதநாட்டியம் கண்டு, நடனத்துறை சார்ந்த தேடல் மூலம் தன்னை பட்டைத் தீண்டிக் கொண்ட திருமதி.பிரவீனா தீபன் பாக்கியநாதர் அவர்களுடைய பிரவீனா நர்த்தனாலயத்தின் முதலாவது ஆண்டு பரதக்கலை விழா குருவின் முன்னிலையில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஏலையா சஞ்சிகையை நடத்தியவரும் எழுத்தாளரும் நாடக – குறும்படத்துறைக் கலைஞருமான ஏலையா க.முருகதாசன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

எழுத்தாளரும் பிராங்பேர்ட் தமிழநாதத்தின் முன்னாள் ஆசிரியருமான திரு.பாலசிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்களும்,

எழுத்தாளர் திருமதி.சுந்தராம்பாள் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

சாபுறூக்கன் தமிழலாயத்தின் நிர்வாகியும் ஆசிரியையுமான கவிதாயினி திருமதி.யெகதீசுவரி இராசரட்ணம் பிரவீனாவை வாழ்த்தி கவிதையுரை வழங்கியதுடன் மாணவர்களுடன் இணைந்து மலர்ச்செடி கொடுத்து பாராட்டினார்.

இசைக்கலைவாணியும்,சங்கீதகலாஜோதியுமான திருமதி.ஜெயதர்சினி சிவசங்கர் அவர்களும், திரு.சாரங்கன் அவர்களும் பாடல்களைப்பாட கலைவித்தகர் திருமதி.ஈழவாணி விஜேந்திரன் அவர்கள் வீணை வாசிக்க திரு.ஆரூரான் சந்திரலிங்கம் அவர்கள் மென்முழவு வாத்தியத்தை வாசிக்க, நாட்டியக்கலாஜோதி திருமதி.பிரவீனா தீபன் பாக்கியநாதர் அவர்களின் நட்டுவாங்க முறையில் நடனக் கலைஞர்கள் அனைவரும் நேர்த்தியாக பிசிறில்லாத நடன உருப்படிகளை ஆடினார்கள்.

இந்த நடனங்களையும், நடனங்களுக்கு பின்னணி இசையை பாடலை நேரிடையாக கொடுத்த கலைச்செயலைப் பார்த்த போது நடனக் கலைஞர்கள் முதலாவது ஆண்டுக்கான நடனங்களை ஆடுகிறார்களா அல்லது அரங்கேற்றம் நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டதை தவிர்க்க முடியாமலிருந்தது.

தனது குருவின் ஆலோசனைப்படியும் அறிவுறுத்தலின்படியும் பிரவீனா இவ்விழாவுக்கான ஒவ்வொரு திட்டமிடலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துத்தான் செய்திருக்கிறார் என்பதை இவ்விழாவின் முழுமையை அவதானித்த போது உணரமுடிந்தது.பெற்றோரின்,மாணவர்களின், கணவரினதும், கணவரின் பெற்றொர் அவரின் பெற்றோர் என அனைவரினும் ஒத்துழைப்புடனும் இவ்விழாவைச் சிறப்பாக செய்திருந்தார்.

சாபுறூக்கன் தமிழ் மக்கள் ஆளுமையுள்ள ஒரு நடன ஆசிரியரைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

எந்த நடனம் சிறந்தது என்று ஒப்பீடு செய்ய முடியாத நிலைக்கு அனைத்து நடனங்களுமே அளவறிந்த நடனங்களாக இருந்தன.கலாநிதி திருமதி.வானதி தேசிங்குராஜா அவர்களின் நடனக்கலைக்கூடத்திலிருந்து ஒரு எழுச்சி பிரவீனா என்ற பெயரில் வெளிக்கிளம்பியுள்ளது என்பதை இவ்வாண்டு விழா நிரூபித்துள்ளது.

பாடல்களைப் பாடிய திருமதி.ஜெயதர்சினி சிவசங்கரின் குரலில் ஒரு காந்தசக்தி இருப்பதை அவதானித்தேன்.சபையோரின் கவனத்தை தன்னிடத்தில் தன்குரலால் வசப்படுத்தக்கூடிய ஆற்றல் இருப்பதை கவனித்தேன்.அது எப்படியென்றால் ஆணுக்குரிய குரலும் பெண்ணுக்குரிய குரலும் கலந்து ஒரு புதிய குரலாக இவரின் குரல் இருந்தது

வயலின் வாசித்த கலாவித்தகர் திருமதி.ஈழவாணி விஜேந்திரன் அவர்கள் ஒரு பாடகியும் என அறிந்தேன். அவரின் மாணவர்கள் இரு சங்கீத நிகழ்ச்சிகளை இவவிழாவில் அளித்திருந்தார்கள்.குருவின் ஆளுமையை மாணவர்கள் பிரதிபலித்து நின்றார்கள்.அவர்கள் பாடி முடிக்கும்வரை மேடைக்கு முன்னால் நின்று அவர்களை வழிநடத்திச் சென்ற ஆசிரியரின் அவதானிப்பும்; சங்கீதத்தின் மேல் அவர் கொண்ட பற்றும் கவனிப்புக்குட்பட்டது.

இளந்தலைமுறைப் பாடகரான திரு.சாரங்கன் சந்திரலிங்கம் சக பாடகிக்கு சளைக்காது எவ்வித வித்தியாசமுமற்ற முறையில் பாடியமை வியப்பைத் தந்தது.இப்படி ஒரு பாடகனா என மகிழ்வைத் தந்தது.இவ்வளவு காலமும் இவர் எங்கே இருந்தார் என்ற கேள்விக்கூடாக பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற பாடகர்களுடன் சமவேகத்தில் பயணிக்கக்கூடிய இத்தகு இளந்தலைமுறையினரை உறசாகப்படுத்தி முன்னிலைப்படுத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உண்டு என்பதையும் அவரின் திறமை உணர்த்தியது.

மென்முழவு வாத்தியத்தை வாசித்த இளந்தலைமுறைக் கலைஞரான திரு.ஆரூரான் சந்திரலிங்கம் பல ஆணடுகளாக மென்முழவு வாத்தியத்தை வாசித்த கலைஞர் போன்று அதை வாசித்த லாவகம் சிந்திக்க வைத்தது.இத்தகு கலைஞரை முன்னிலைப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உண்டு.

இவ்விழாவை சிறப்பாகத் தொகுத்து வழஙகியவர்களான திரு.பசுபதி இரட்ணராஜா அவர்களும், திரு.சகநாயகன் சி.சக்திவேல் அவர்களும் பலமேடைகண்டவர்கள்.

நிலைமைக்கும்,சூழ்நிலைக்கும் ஏற்ற விதத்தில் அறிவிப்புச் செய்வதில் இருவருமே வல்லவர்கள். அதனை அன்று நிரூபித்திருந்தார்கள்.பிரவீனா நன்றியுரையைக்கூட சிறப்பான முறையில் வழங்கியிருந்தார்.

இவ்விழாவில், திருமதி.பிரவீனா தீபன் பாக்கியநாதர் அவர்களுக்கும், திரு.சாரங்கள் சந்திரலிங்கம் அவர்களுக்கும், திரு.ஆரூரான் சந்திரலிங்கம் அவர்களுக்கும் அவர்களின் திறமை கண்டு சபையோரால் முன்மொழியப்பட்ட கௌரவ விருதுகளான ‚பரதக்கலை வாரிதி'(பிரவீனா) ‚இசைஞான வாரிதி'(சாரங்கன்)‘ மெனமுழவு வாத்திய வாரிதி'(ஆரூரான்) முறையே வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

இவ்விழாவில் ஒரு நெகிழ்ச்சிச்சம்பவம் நடைபெற்றது தனது மாணவிகள் தனக்கு அணிவித்து மகிழ்நத மாலையை தனது குருவிற்கு அணிவித்து மகிழ்ந்து கண்கலங்கி நிற்க குருவும் கண்கலங்க சபையோரும் நெகிழ்ந்து நின்றனர்.குருவை மதிப்பவர் எவரும் உயர்வார் என்பது உணமையிலும் உண்மையே.

இவ்விழாவில் ஒன்றிணைந்து நின்ற அனைவரையும் வாழ்த்திப் பாராட்டுகினறேன்.

ஏலையா க.முருகதாசன்

leave a reply