Breaking News

வெற்றிச்செல்வியின் போராளியின் காதலி …!

வெற்றிச்செல்வியின் போராளியின் காதலி நாவல் வன்னிப்பெரு நிலத்தின் புலிகளின் கால காட்சியை கண்முன் காண வைக்கின்றது. போராளிகளும் மனிதர்கள் அவர்களிடம் காதலும் இருந்தது. அந்தக் காதல் வாழ்க்கையின் முகம் எது என்பதை படைப்பாளி விபரிக்கின்றார். இயக்கம் என்றாலே கண்ணிலும் காட்டக் கூடாதென்ற சுமதியை “ சாதி சமயமெல்லாம் சோறு போடுறதில்லை” எனப் பேசவைத்துள்ளதையும் “போராளியின் காதலி” க்குள் காணலாம். இந்தக் காதல் கதைக்குள் போர்க்களத்தை ஓரளவுக்குச் சித்தரித்துச் செல்லும் வெற்றிச்செல்வி பின்தளத்தில் பார்க்க ஓர் பின் களமாக இருக்கும் மருத்துவமனைகளை அப்படியே வெளிப்படுத்துகிறார். கடும் சண்டை நடந்த காலங்களில் மருத்துவமனைகள் இரவு பகலாக இயங்கியதும் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இயங்க வேண்டியிருந்தவை போன்ற பலவற்றை இந்த நாவல் பதிவாக்கியுள்ளது. மருத்துவமனைகள் கூட போர்க்களம் போன்றே இருந்தது. அதன் மீதும் தாக்குதல் நடந்தது என்பதை அங்கிருந்து பட்டறிவுடன் வருவோர் பேசுவதை எப்படி மறுதலிப்பது?அமுதா, வடிவு ஆகியோரின் காதல் பற்றி இடையில் தொட்டுச் சென்றாலும் சுமதியும் வாமனும் காதல் கொண்டதை கதை முழுவதும் கோர்த்துச் செல்வதை காணமுடியும். காதலர்களின் சண்டையையும் இரசிக்கலாம். கவிமதி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இரவு வேளை மோட்டார் சைக்கிளில் சுமதியை ஏற்றிச் செல்வதை வாசிக்கும் போது நாங்களே பயணம் செய்வது போல படைப்பாளி காட்சியை கண்ணுக்குள் கொண்டுவருகிறார். கப்ரன் பண்டாரவுக்கு சிகிச்சை வழங்குவதும் இறுதிப்போரின் கட்டாய ஆட்சேர்ப்புப் பற்றியும் கூட இந்த நாவல் பேசத் தவறவில்லை. வன்னியின் கிழக்குக்கரையோரத்தில் 2009 நடுப்பகுதியில் போர் முடிவை நோக்கிச் செல்லும் போது வாமனும் சுமதியும் என்ன முடிவெடுக்கின்றனர்? அந்தக் காலம் நெஞ்சு பதறும் பல சம்பவங்கள். நடந்த காலமாகும். உயிரிழந்த பிள்ளையை இறுதி மூச்சைப்பிடித்திழுத்துக் கொண்டு தகப்பன் முகத்தைப் பார்த்துவிட்டு சாகிறேன் எனக் கேட்பது போன்ற பல கொடுமையான சம்பவங்களும் குறிப்பிட்ட காலத்தின் கதையாகையால் அவற்றைத் தவிர்த்துவிட முடியாத்தாகியுள்ளது. ஆசிரியர் நேரடிப் பட்டறிவுள்ளவர் இடையறாது எழுதுபவர். மலர்ந்த முகமாக காணப்படும் அவரிடம் ஏராளம் போர்க்கால பட்டறிவுகள் உள்ளன. அவற்றை போரிலக்கியமாக படையல் செய்ய இவரைப் போன்றவர்களால் தான் முடியும். நெருப்பு சுடும் என்பது தெரியும் சூடு வேண்டியவருக்குத் தான் அது எப்படிச் சுட்டதெனத் தெரியும். வெற்றிச்செல்வி நெருப்பின் சூட்டை தான் பட்டறிந்தவர். எனவே போரிலக்கியம் படைக்க இன்னும் ஏராளம் கதைகள் வெற்றிச்செல்வியிடம் உள்ளன. “ அந்தக் கண்கள் மெதுமெதுவாய் உயிர் வற்றிப் போகின்றன” என்பது படைப்பாளியின் மொழி. குப்பி கட்டாத போராளி பற்றியும் பேசும் நாவலில் கூரைவிரிப்புகள், மரங்களுக்கு கீழ் மருத்துவமனைகள் இயங்கியதை இன்னும் காட்சிப்படுத்தியிருக்கலாமோ? என்ற பத்தியமில்லா என் நிலையைத் தவிர மற்றும்படி நாவல் போரின் குறிப்பிட்ட பார்வையை தன்னகத்தே நகர்த்தி போராளியின் காதலி இப்படி முடிவெடுப்பாள் என்பதை ஆணித்தரமாகவும் அதேநேரம் கடும் வைரமற்றும் பதிவிடுகிறது. பழக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்வது போல எடுத்த நாவலை வைக்காது வாசித்து முடித்தேன். ஏதாவது வேலையிருத்தாலும் அவற்றை பிற்போட்டுவிட்டு வாசித்தேன். வாசிக்க அலுப்பேற்படுவதாகவோ அல்லது வித்துவக்காச்சல் கொண்ட மொழியாகவோ அல்லாமல். ஆர்வமாக வாசிக்கத் தூண்டும் மொழியைக் கொண்டு வெற்றிச்செல்வி போராளியின் காதலியைப் படைத்திருக்கிறார். *நட்புடன்- கனகரவி

leave a reply