Breaking News

நிழலில்…சிறுகதை-இந்துமகேஷ்.

மழை இந்த நிலத்தை மறந்து வெகுகாலமாகிவிட்டது.ஓவென்ற பேரிரைச்சலுடன் அலைக்கரங்களால் தரையை அறைந்து அறைந்து அழுதுவிட்டு தன்னுள்ளேயே தன் சோகங்களைத் தேக்கிக்கொண்டு எப்போதும்போல் அமைதியாய் இருப்பதாய்க் காட்டிக்கொண்டு பரந்துகிடக்கிறது கடல்.நல்ல தண்ணீர்க் கிணறுகள் வற்றிக்கிடந்தன.எலும்பும் தோலுமாய் நடமாடும் ஒன்றிரண்டு நாய்களைத்தவிர, ஆடு மாடு கோழி என்று எந்த ஜீவனும் அங்கில்லை.ஆளரவமற்றுக் கிடந்த தெருவழியாக மெதுவாக நடந்துகொண்டிருந்தார் அருளம்பலம்.அயலில் இருந்த வீடுகளில் பல இப்போது வெறும் கற்குவியல்களாகக் காட்சி தந்தன.கொஞ்சம் தப்பிக்கிடந்த வீடுகளிலும் கறையான்களும் பாம்புகளும் குடியேறியிருந்தன.மனிதர்கள்…?எல்லோரும்போய்விட்டார்கள்..பாதிப்பேர் மேலுலகம்… மீதிப்பேர் வெளிநாடு.வந்தவர்கள் எல்லாம் போய்த்தான் ஆகவேண்டும். ஆனால் இப்படியா? ஒரு முடிவு தெரியாமல்… முடிவெடுக்கத் தோன்றாமல்…?!இன்னும் எத்தனை காலத்துக்கு..?“எல்லாம் விதி!“ என்று தன்னையறியாமலே அவரது வாய் முணுமுணுத்தது.“விதியா..?“ சட்டெனத் தன்னைக் கடிந்துகொண்டார் அவர்.“இத்தனை காலமாய் இல்லாமல் எல்லோரையும்போல விதியை நானும் நம்புகிறேனா? அந்த அளவுக்கு பலவீனப்பட்டுப் போனேனா?“தன்மீதே அவருக்கு சற்றுக் கோபம் வந்தது.இந்த எழுபது வருட வாழ்க்கையில் அவர் ஒரு நாத்திகனாகத்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்.“ஒவ்வொருத்தனும் தன்னைத்தான் நம்பவேணும். அதை விட்டிட்டு இல்லாத ஒண்டை இருக்கிறதாய் எண்ணி ஏமாந்து போகக்கூடாது.இண்டைக்குக் கடவுளின்ர பேரைச் சொல்கிறவன் எல்லாம் தன்னைத்தான் ஏமாத்திறான்… தன்னோடை சேர்த்து மற்றவையளையும் ஏமாத்திறான். ஏமாத்திற சங்கதி வெளியிலை தெரிஞ்ச உடனை விதி எண்டு சாட்டிப் போட்டு சும்மா இருந்திடுறான்..“அருளம்பலத்தார் சொல்வது சில நேரங்களில் சரிபோலத் தோன்றினாலும் யாரும் அவரதுகொள்கையைக் கடைப்பிடிக்காமல் கோயில் குளம் சாமி என்று தங்கள் விருப்பப்படியேதான் நடந்தார்கள்.“இந்தாளுக்கு வயசு போகப்போக அறளை பேந்திட்டுது!“ என்று பின்னால் சொல்லிக் கொண்டார்கள்.தன்னைப் பற்றிச் சனங்கள் விமர்சிப்பது காதில் விழுந்தாலும் இவர் அதை பெரிது படுத்திக் கொள்வதில்லை.“மூளைகெட்ட சனங்கள் இப்படித்தான் கதைக்கும்.. இதுகளுக்கும் ஒருகாலம் வரும். அப்பதான் என்ரை தத்துவம் விளங்கும்!“ என்பார்.இன்றுவரை அவர் கொள்கையில் பிடிவாதமாய்த்தான் இருந்தார்.இவர் நாத்திகவாதம் பேசியபோதும் இவரது மனைவி மகாலட்சுமியின் போக்கு இவருக்கு நேர் எதிராகவே இருந்தது.நாளாந்தம் மூன்று வேளையும் பக்கத்து வளவுக்குள்ளிருக்கும் வைரவர் கோயிலுக்குப் போய் கும்பிடுபோட்டுவிட்டுத்தான் மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.அருளம்பலத்தார் தன்னளவில் நாத்திகவேதம் பேசினாலும் மனைவியையோ மக்களையோ தன் கொள்கைக்கு அவர் இழுத்ததில்லை. அவர்களது சுய விருப்பு வெறுப்புக்களுக்கு இடையூறாக இருந்ததில்லை.“இயற்கையாகவே ஒவ்வொருத்தருக்கும் சுய சிந்தனை எண்ட ஒண்டிருக்குது.. அதை மற்றவையள் மாத்தப்படாது!“ என்பார் அவர்.கல்யாணமாகி ஆறேழு வருடத்துக்குப் பிள்ளைகள் எதுவும் இல்லாமல் பிறகு அடுக்கடுக்காய் நான்கு பிள்ளைகளைப்பெற்று அவர்களும் வளர்ந்து பெரியவர்களாகி அவர்களுக்கும் திருமணமாகிப் பேரப்பிள்ளைகளையும் கண்டு கிராமத்தைவிட்டு அவர்கள் அயலூர்களுக்குப் போய்க் குடியேறிய பின்னும் ஊரைப் பிரிய மனமில்லாமல் வாழ்வும் சாவும் இந்த நிலத்திலைதான் என்கிறமாதிரி தனக்குள் ஒரு வைராக்கியத்துடன் அவர் வாழ்ந்த வாழ்க்கை..ஊருக்குள்ளேயே ஒரு கெளரவமான மனிதராய் மற்றவர்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற்று, ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் ஊருக்குள்ளேயே அவர்தான் „ராஜா!“ஆனால் காலவெள்ளம் எல்லாவற்றையும் இப்போது கரைத்துப் போட்டாயிற்று.கூடுவிட்டுப் பிரிந்த பறவைகளாய் மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் எல்லோரும் தத்தம் திசைகளில் பறந்துபோக ஊருக்குள்ளேயே மாளிகைபோன்ற அந்த வீட்டில் எஞ்சியது அருளம்பலத்தாரும் அவர் மனைவி மகாலட்சுமியும்தான்.அக்கம் பக்கத்திலிருந்த சனங்களும் அயலூருக்குப் போயிருந்த நேரத்தில் ஆமிக்காரன்கள் கிராமத்துக்குள் புகுந்துவிட போனவர்கள் திரும்பிவரவில்லை. மீதமிருந்தவர்களிலும் சிலர் அடுத்தடுத்த நாட்களில் கிணறுகளுக்குள்ளும் வளவுகளுக்குள்ளும் சவமாகிக் கிடந்தார்கள்.“என்ரை வயிரவரே!“ என்று மனத்தால் ஓலமிட்டு, கழுத்தில் தொங்கும் மஞ்சள் கயிற்றை அடிக்கடி கண்களில் ஒற்றிக்கொண்டு சத்தமிடாமல் அழுவாள் மகாலட்சுமி.“இந்த அநியாயத்தை எல்லாம் எப்பதான் நிப்பாட்டப் போறை ஐயா!“போனகிழமைதான் அந்தக் கடிதம் வந்திருந்தது.மூன்று மாதங்களுக்கு முன்பு அருளம்பலத்தாரின் கடைசிமகன் கதிரவேலு சுவிசிலிருந்து அனுப்பியிருந்த கடிதம் அது்.“..உங்களைப் பார்க்கவேணும்போல இருக்குது. இப்ப ஓரளவுக்கு சனங்கள் இங்கை வந்துபோகக் கூடியதாயிருக்குது. பொன்சர் அனுப்பிறன்.. நீங்களும் அம்மாவும் இங்கைவந்து எங்களோடை ஒரு ரெண்டு மூண்டு மாதத்துக்கு இருந்திட்டுப் போங்க.. இந்தக் கடிதம் கிடைச்ச உடனை வெளிக்கிட்டுக் கொழும்புக்கு வாங்கோ..மிச்சத்தை டெலிபோனிலை கதைக்கிறன்..“ என்று அவன் எழுதியிருந்தது மகாலட்சுமியின் மனத்தில் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளின் நினைவுகளை அதிகமாய்க் கிளறிவிட, அவள் கணவனின் முகம் பார்த்தாள்.“சாகிறதுக்கு முந்தி ஒருக்கால் பிள்ளையளைப் பேரப் பிள்ளையளைப் பாத்திடுவமே…!“அருளம்பலத்தார் மெளனித்திருந்தார்.மனைவியின் ஏக்கம் அவருக்குப் புரிந்தது.. ஆனால் அவளோடு இணைந்து தானும் புறப்பட வேண்டும் என்பது இயலாத காரியமாக அவருக்குத் தோன்றிற்று.தனது எண்ணத்தை மனைவியிடம் அவர் சொன்னபோது மகாலட்சுமி கலங்கினாள்:“உங்களை விட்டிட்டு நான் ஒருக்காலும் ஒரு இடமும் போனதில்லையே.. இப்பமட்டும் ஏன் மாட்டன் என்கிறியள்..?““எல்லாம் காரணத்தோடைதான்! நீ போயிற்றுவா!“-அவளைச் சமாதானப்படுத்தி கொழும்புவரைக்கும் அனுப்பி வைத்தாயிற்று. இன்றுவரை எந்தத் தகவலுமில்லை. அவளில்லாத தனிமையில்தான் அவளது அருகாமையின் அவசியத்தை உணர்ந்தார் அவர். அவளுடன் கூடப் போயிருக்கலாமோ என்று தோன்றும்.“போயிருந்தால் பிள்ளைகளை பேரப்பிள்ளைகளை இன்னும் உற்றம் சுற்றம் எண்டு அங்கினை இருக்கிற சொந்த பந்தங்களை எல்லாம் பார்த்திட்டு வந்திருக்கலாம்தான்.“மனம் அவரை அலைக்கழித்தது.“சரி போனவள் போட்டு வரட்டுக்கும்!“இப்போது ஊருக்குள் தான்மட்டுமே தனித்து நிற்பதாய் ஒரு உணர்வு அவரை ஆட்கொண்டிருந்தது.எத்தனை மனிதர்களை எத்தனை நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ந்த நிலம்…இப்போது ஆளரவமற்ற சுடுகாடாக மனித வேட்டைக்காரர்களைத் தாங்கும் பலிபீடமாக மாற்றமடைந்திருக்கிறது.“இந்த நிலை எப்போது மாறும்?“அந்தக் கேள்வியே அவர் மனதில் திரும்பத் திரும்ப வந்துமோதிற்று.“எப்போது மாறும்? எப்போது மாறும்?“இயற்கையின் நியதியில் எதுவும் எப்போதும் நிகழலாம்.இன்னநேரத்தில் இன்னதுதான் நிகழும் என்ற உறுதியான முடிவை மனிதன் எடுப்பதற்கு இயற்கை சம்மதிப்பதில்லை.நடந்துகொண்டிருந்தவர் அருகிலிருந்த வேலிக்கருகில் சரசரப்புக் கேட்க நின்று திரும்பினார். கந்தலான வேட்டியொன்றினால் தலைமுதல் கால்வரை மறைத்து கண்கள்மட்டும் வெளித்தெரிய கைத்தடியொன்றின் உதவியுடன் விழுந்துகிடந்த வேலியைத்தாண்டி மெள்ளத் தெருவுக்கு வந்தவனைக் கண்டதும் ஆச்சரியப்பட்டார்.“டேய்..நீ குமாருவெல்லெ..!?““ஓமய்யா..!“மெள்ளத் தணிந்து வந்தது அவன் குரல்.“நீ இந்த ஊருக்குள்ளைதான் இருக்கிறையா?““வேறை எங்கை ஐயா போவன்.. என்னை ஆதரிக்க ஆர் இருக்கினம்?“-கேள்வியில் விரக்தி தொனித்தது.அருளம்பலத்தார் ஒரு சில சமயங்களில்மட்டும்தான் அவனைக் கண்டிருக்கிறார்.வாலிப வயதிலேயே அவனைத் தொற்றிக் கொண்டிருந்தது தொழுநோய். இப்போது அவனுக்கு வயது நாற்பதைத் தாண்டியிருக்கும்.“பாருங்க ஐயா ..நோய் நொடி இல்லாத எத்தனையோ நல்ல சீவனுகள் போய்ச்சேர்ந்திட்டுது.. நான்மட்டும் தப்பிக்கிடக்கிறன்.. இவங்கள் போடுற குண்டுகூட என்ரை தலையிலை வந்து விழுகுதில்லை..!“அவன் தன்னிரக்கப்பட்டான்.“இயற்கை அப்பிடித்தான்.. மனிசன் நினைக்கிற மாதிரியெல்லாம் இயற்கையை மாத்தமுடியுமே குமாரு..?!““இது இயற்கை இல்லை ஐயா..! இது மனிசன்ரை வேலை.. இவன்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாதவரைக்கும் இதுதான் நடக்கும்!“ என்றான் குமாரு.“கடவுளே..?“ சிரித்தார் அருளம்பலத்தார்.“கடவுள் இருக்கெண்டு நீயும் நம்பிறியே..?அதுவும் மனிசனைக் கஷ்டப்படுத்திற கடவுள்.!““மனிசன்ரை பிறப்பே கஷ்டம்தானை ஐயா.. கஷ்டமில்லாமல் ஆர் பிறந்திருக்கினம்? ஆர் வாழ்ந்திருக்கினம்? எல்லா மனிசருக்கும் நாளாந்தம் ஏதோ ஒரு கஷ்டம் இருந்துகொண்டுதானிருக்கும். இந்தக் கஷ்டமெல்லாம் திரும்ப ஒருகாலம் சந்தோசத்தைக் கொண்டுவரும்..!“- குமாரு தன்பாட்டில் சொல்லிக்கொண்டிருந்தான்.வாழ்க்கை அனுபவங்கள் எல்லாரையும்தான் தத்துவம் பேசவைக்கும்போலும்.இத்தனை துன்பப்பட்டும் தன்னைப் படைத்ததாக இவன நம்புகிற கடவுள்மீது கோபப்படவில்லையே இவன்.. மாறாக இன்னும் ஒரு எதிர்காலத்துக்காகக் காத்திருப்பவன் போலல்லவா இவன் பேசுகிறான்?இவன் நம்பிக்கையைக் கெடுக்கவேண்டாமே என்று தன்னுள் நினைத்தார் அருளம்பலத்தார்.“இப்ப நீ எங்கைபோறை குமாரு.?““கோயிலடிக்குத்தான்!“ என்றான் குமாரு.“எல்லாச் சனங்களும் ஊரைவிட்டிட்டுப் போயிற்றுதுகள் ஐயா..கோயில் வெறிச்சுப்போய்க் கிடக்குது.. கொஞ்சநேரம் போய்நிண்டு அதிலை ரெண்டு தேவாரம் பாடிப்போட்டு வருவமெண்டு போறன்!“- சொல்லியபடி மெதுவாக நடந்தவனைத் தொடர்ந்தார் அருளம்பலத்தார்.கோயில் வீதிகளில் பரவிக்கிடந்த சருகுகளையெல்லாம் கூட்டிப்பெருக்க யாருமில்லை. சுழன்றடிக்கும் காற்று அவ்வப்போது கொஞ்சம் குப்பைகளை கோயில் மதிலின் ஓரமாய் ஒதுக்கிவிட்டுப் போய்க்கொண்டிருந்தது.கோயிலுக்குத் தெற்குப்புறமாக கடலின்கரையருகே போய்க் கொஞ்சநேரம் நின்று கண்களுக்கெட்டிய தூரம்வரை பார்வையைப் பரப்பினார் அருளம்பலத்தார்.கடல் எப்போதும்போல்..!தொடுவானத்தின் மேற்குக் கரையில் அந்திச் சூரியன் சிவக்கத் தொடங்கியிருந்தான்.இயற்கை இன்னும் மாறவில்லை.எத்தனையோ வருடங்களாக இவர் பார்ப்பதுபோலவே..இந்த வானம்.. இந்தக் கடல்.. இந்தக் கதிரவன்… இந்த மேகங்கள்..நாளும் விடிகிறது..நாளும் பொழுதுசாய்கிறது..ஆனால் மனிதர்கள்…?பிறப்பும் சாவும் என்று தொடர்ந்து போகிறது மனிதரின் பயணம்.வாழ்க்கையின் எச்சங்களாய் நினைவுகள்..ஒவ்வொருவரும் தத்தமக்கென்று சில குறிக்கோள்களை கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு அதற்குள்ளேயே வாழ்ந்துமுடிக்கிறார்கள்.வயிறும் மனமும் தேவைகளுக்காய் அலைகிறது. தேவைகள் வளர வளர வாழ்வில் தீவிரம் வருகிறது. அதில் வென்றாகவேண்டும் என்ற வேகம் வருகிறது. வென்றவர்கள்போக மற்றவர்கள்..?ஆனால் எல்லோரும் ஏதோ ஒருவகையில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.சரியாக வாழ்ந்து முடிப்பவர்களால் மட்டும்தான் வாழ்வுக்கு உதாரணமாக முடிகிறது.“இதுவரையில் நான் வாழ்ந்தது் சரிதானா?“-இந்தக் கேள்விக்கு என்ன அவசியம் வந்தது என்று அவருக்குத் தோன்றவில்லை.ஆனாலும் கேட்டுக்கொண்டார்.எல்லா மனிதருக்கும் என்றோ ஒருநாள் வருகின்ற தனிமை.பெற்ற தாயோ, கட்டிய மனைவியோ, உற்றம் சுற்றமோ, ஒட்டிய வேறெந்த உறவுகளோ எட்டியும் பார்க்க முடியாத தனிமை. இந்தத் தனிமையில் பயணப்படும்போது மனிதன் தன்னைத்தான் கணக்கிடப் போகிறான்.“ஏன் வந்தேன்.. எங்கே போகப்போகிறேன்.? இயற்கை அழைத்தது வந்தேன் மறுபடி இயற்கை அழைக்கிறது போகிறேன் என்று சொல்லிவிட முடியுமா?“அருளம்பலத்தார் அருகில் இருந்த தீர்த்தக் குளத்தின் படிக்கட்டில் போய் அமர்ந்துகொண்டார். தலையை இரண்டு கைகளாலும் தாங்கிப் பிடித்துக்கொண்டார்.“இறைவா!“ என்றார் தன்னை மறந்து.கோயில்வாசலில் நின்று குமாரு பாடிக்கொண்டிருந்தான்..“சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்துதரணியொடு நாம் வாழத் தருவரேனும்மங்குவார் அவர்செல்வம் மதிப்போமல்லோம்மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்..“(பிரசுரம்: புங்குடுதீவு சிறீ கணேச மகாவித்தியாலய பழையமாணவர் சங்க சுவிஸ் கிளையினரின் 5வது ஆண்டு மலர்-1996)

leave a reply