செஞ்சோற்றுக்கடன்

இறுதிப்போர் காலத்து
இடைவிடா மழைப்பொழுதில்
கொட்டகையது நீராலே
குலைந்துமே சரிந்திட
தம்மிடத்தில் தஞ்சம் தந்த
தரப்பாள் கொட்டகைக்காரரின்
தகைசார் கடன் தீர்ந்திடுமோ?

யாருமருகில்இல்லாவேளை
காலதிலே எறிகணைபட்டு
நான் காயமுற்றவேளை
தன்னாடை தன்னில்
சிறுதுண்டு கிழித்து
என்குருதி தடுத்த
ஏழைத் தமிழ்த்தாயின்
கடனை தீர்ப்பதெப்போ?

தாய்தன்னை இழந்த
தளிர்தன்னைக் கண்டு
யார் பிள்ளை எனும்
கேள்வியது கேளாது
தன்முலை தனையூட்டி
வன்பசி தீர்த்த
நல்மன பெண்ணின்
கடன்தான் தீர்வதெப்போ?

பசிமயக்கம் கொண்டும்
படுக்கவொரு இடமற்றும்
பரிதவித்த போதினிலே
பதுங்கு குழியில் இடம்தந்து
பாசமொடு கஞ்சிதந்து
நேசமாய் அணைத்த
நெஞ்சங்களின் கடனை
தீர்ப்பதெப்போ?

தேகமது தன்னில்
சேகரித்த குருதிகளை
பாரங்கள் சுமந்து
பாடுபட்ட மக்களுக்கு
தானங்களாய் கொடுத்த
வானதிலும் பெரியவுளம்
தானதனை படைத்தோரின்
தர்மக்கடன் தீர்வதெப்போ?

அனைத்துறவும் இழந்து
அம்பலவன் பொக்கனையில்
அந்தரித்த வேளையிலே
அருகேயோர் உறவாகி
அன்பெனக்கு அளித்த
அழகு ஜிம்மி நாயின்
அன்புக்கடனை
அடைப்பது எப்போ?

முள்ளிவாய்க்கால் முற்றங்களில்
முகம்கழுவ நீரின்றி
அகம் கரைந்த நாட்களிலே
சிலமணிகள் ஒதுக்கியே
கிணற்று நீரளித்த
வனப்பு உளங்களின்
நிறைத்த கடனை
சென்றுமே அளிப்பதெப்போ?

பதுங்கு குழிக்கு உரப்பையின்றி
பாடுபட்ட நாட்களிலே
பழஞ்சேலை தந்துமே
பாதுகாப்பு அளித்திட்ட
பாட்டியின் பாசக்கடன்
தீர்ந்துதான் போவதெப்போ?

இறுதிப்போர் காலங்களில்
எத்தனை கடன்கள்.
செஞ்சோற்றுக் கடன்களிலும்
சிறந்த கடன்கள்.
யாரென்ற
எவர் என்ற
கேள்விகளே கேளாது
கிடைத்திட்ட கடன்கள்.
அப்போதும்…
இப்போதும்…
எப்போதும்…
தீர்க்க முடியாத
செஞ்சோற்றுக் கடன்கள்.

-யோ.புரட்சி-