முள்ளிவாய்க்கால்! வக்கிரங்களின் வடிகாலா?
முள்ளிவாய்க்கால்!
நாங்கள் மறந்துபோன ஒரு இடமா?
முள்ளிவாய்க்கால்!
நாங்கள் நினைக்க மறுக்கும் ஒரு சம்பவமா?
முள்ளிவாய்க்கால்!
நாங்கள் அரசியல் நடத்த கிடைத்த
ஒரு துருப்புச் சீட்டா?
முள்ளிவாய்க்கால்!
எமது பழைய வக்கிரங்களை தீர்த்துக்கொள்ள
எமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமா?
முள்ளிவாய்க்கால்!
அரசியல் தீர்க்கதரிசிகளாய் எங்களைக் காட்டிக் கொள்வதற்கு
நாங்கள் பயன்படுத்தும் ஒரு அத்திவாரமா?
முள்ளிவாய்க்கால்!
பழி சொல்லிச் சொல்லி
எங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்ள
நாம் பயன்படுத்தும் ஓர் அதிஷ்டப் புள்ளியா?
முள்ளிவாய்க்கால்!
எங்களைப் பிரபயப்படுத்துவதற்கு
எமக்கு கிடைத்த ஒரு ஏணியா?
முள்ளிவாய்க்கால்!
நாங்கள் அழுது வடிப்பதற்கான
ஒரு வருடாந்த திவசமா?
முள்ளிவாய்க்கால்!
நாங்கள் கெளரவ பிச்சை வாங்கி
எமது வயிறுகளை நிரப்ப
எமக்கு கிடைத்த ஒரு அமுத சுரபியா?
முள்ளிவாய்க்கால்!
எங்கள் சுய நலன்களுக்கு மட்டும்
விலையாகிப் போகும்
ஒரு பேசு பொருளா?
– சாம் பிரதீபன் –