Tube தமிழ் பத்தாவது ஆண்டு நிறைவும் இரு கவிநூல்களின் அறிமுக விழா

Tube தமிழ் பத்தாவது ஆண்டு நிறைவும் இரு கவிநூல்களின் அறிமுக விழா நிகழ்வுகளின் நிகழ்ச்சித் தொகுப்பில்Tube தமிழ் புதிய அலுவலகத்தில் இருந்து…

டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினரின் பங்கேற்போடு யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய ‚ரியூப் தமிழ்‘ பத்தாம் ஆண்டு விழாவும், இரு நூல்களின் அறிமுக விழாவும்.

டென்மார்க்கினைத் தளமாகக் கொண்ட ‚ரியூப் தமிழ்‘ எனப்படும் தமிழ் காணொளிகள் தளத்தின் பத்தாமாண்டு நிறைவு விழாவும், டென்மார்க் கவிஞர் றெபேக்காள் எழுதிய ‚நான் ஏங்குகிறேன் மழைக்காக‘ கவிநூல் மற்றும் டெனிஷ் பிரபல எழுத்தாளர் அனசனின் ‚என் வாழ்க்கை ஓர் அழகான கதை‘ (தமிழில்: தருமன் தருமகுலசிங்கம்) நூல் என்பவற்றின் அறிமுக விழாவும், ‚ரியூப் தமிழ்‘ புதிய அலுவலகத் திறப்பு விழாவும் 05.08.2017 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள ‚ரியூப் தமிழ்‘ புதிய கட்டடத்தில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து சுடர் ஏற்றல் இடம்பெற்றது. நிகழ்ச்சிகளை அறிவிப்புக்கவிஞர் யாழ் சபேசன்தொகுத்து வழங்க வரவேற்புரையினை ‚ரியூப் தமிழ்‘ சஞ்சிகா நிகழ்த்தினார்.

தொடர்ந்து ‚ரியூப் தமிழ்‘ புதிய அலுலகத்தினை டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர் ரோல்ஸ் ராவன் அவர்கள் விருந்தினர்களுடன் இணைந்து திறந்து வைத்தார். தலைமையுரையினை ‚ரியூப் தமிழ்‘ இயக்குநர்/தொழிலதிபர் ரவிசங்கர் சுகாதேவன் நிகழ்த்தினார். தொடர்ந்து வாழ்த்துரைகளை ‚டான்‘ தொலைக்காட்சி நிகழ்ச்சி மேலாளர் பண்பலை வேந்தன் ரி.எஸ்.முகுந்தன், முத்து ஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் கம்பீரக் குரலோன் சி.நாகேந்திரராசா ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து ‚ரியூப் தமிழ்‘ இயக்குநர் ரவிசங்கர் சுகாதேவன் அவர்கள் விருந்தினர்களினால் நினைவுப் பரிசில் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து டென்மார்க் தேசத்துக் கவிஞர் றெபேக்கா இயக் கறாறுப் எழுதிய டெனிஷ்/தமிழ் இருமொழி கவிதைகளின் தொகுப்பான ‚நான் ஏங்குகிறேன் மழைக்காக‘ கவிதை நூலின் ஆய்வுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.

பாராட்டுரைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்லநாதன், இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜன், இந்தியா தமிழ்நாடு ‚தமிழர் நடுவம்‘ தலைவர் செல்வா பாண்டியர் ஆகியோர் நிகழ்த்தினர். சிறப்புரையினை டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர் ரோல்ஸ் ராவன் நிகழ்த்தினார். நிகழ்வில் ‚ரியூப் தமிழ்‘ இதழின் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.

டெனிஷ் பிரபல எழுத்தாளர் அனசன் அவர்களின் ‚என் வாழ்க்கை ஓர் அழகான கதை‘ நூலின் அறிமுகத்தினை எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் நிகழ்த்தினார். இந்நூலானது டென்மார்க் தருமன் தருமகுலசிங்கம் அவர்களினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.பிரபல புலம்பெயர் எழுத்தாளரும், ஈழத்து முதல் தமிழ்ப் பெண்விமானி அர்ச்சனா அவர்களின் தந்தையுமான கி.செ.துரை ஒரு நிமிடத்தில் சிறப்பான ஆய்வுரை வழங்கினார். நிகழ்வில் டென்மார்க் தருமன் தர்மகுலசிங்கம் அவர்களின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி மாத்தளை பெ.வடிவேலன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

நன்றியுரையினை ‚ரியூப் தமிழ்‘ சார்பாக சஞ்சிகா நிகழ்த்தினார்.

ஈழத்தின் முதல் தமிழ்ப் பெண்விமானி அர்ச்சனா செல்லத்துரை, நடிகர் வசந்த் செல்லத்துரை,வவுனியா ‚அக்னிச் சிறகுகள்‘ அணியினர் உட்பட்ட பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும், படைப்பாளிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிகளை ‚கோபால் வெளியீட்டகம்‘ நிர்வாகி கவிஞர் கம்பிகளின் மொழி பிரேம் நெறியாள்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.