Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 ஒரு சிரி(று)கதை அதுதான் தெரியவில்லை! -இந்துமகேஷ்: – stsstudio.com

ஒரு சிரி(று)கதை அதுதான் தெரியவில்லை! -இந்துமகேஷ்:

ஆறுமாதங்களுக்கு முன்னால் பனியில் விறைத்து எலும்பும் தோலுமாய் நின்ற மரங்கள்,
கோடைகாலத்து ஐரோப்பியக் குமரிகளைப்போல குளுமைகாட்டின.
சில நேரங்களில் வியப்பாய்த்தானிருக்கும்.
கோடையில் துகிலுரிந்து பனிக்காலத்தில் ஒன்றுக்குமேல் ஒன்றாய் உடுத்திக்கொள்ளும்
மனிதர்களைப் போல அல்லாமல், பனிக்காலத்தில் இலைகளைக் களைந்தெறிந்து வெற்றுடம்பு காட்டிவிட்டு, கோடையில் இலையும் பூவும் பிஞ்சும் கனியுமாய்- இந்தமரங்கள்!

புதிராய்த்தொடரும் வாழ்க்கைப்பயணம்மாதிரி…
இயற்கையில் எல்லாம் புதிர்களாய்…
அவனைப் பொறுத்தவரையில் அவளும் இப்போது அவனுக்கு ஒரு புதிராகிப் போனாள்.
அவனுக்கு ஆச்சரியம்தான் இப்போது.
எப்படிச் சாத்தியமாயிற்று இது?
பல சந்தர்ப்பங்களில் அவளது விழிகளைச் சந்திக்கவே முடியாமல் இவனது பார்வை
தடுமாறித் தவித்த அந்த நிலை இப்போது இல்லை.
„கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.“
வள்ளுவன் சரியாய்த்தான் கணித்திருந்தான்.
வாய்மொழி மறந்து தாய்மொழி தொலைத்து உணர்வுகள்மட்டுமே ஒரு மொழியாக.
„நித்யா…உனக்கு ஒரு கதை சொல்லவேணும் நான்… எனக்கு நடந்த கதை!“
„காதல்கதை…? சொல்லுங்க!“
அவள் ஆர்வமானாள்.

+++

ஊரில் இருக்கையில் ஒரு சாத்திரியார் இவனது பிறந்த நேரத்தைக் கணித்துச் சொன்ன பலன் சட்டென நினைவுக்கு வந்தது.
„இவன்ரை கலியாணத்துக்கு முந்தி இவன் ஒரு கண்டத்தைக் கடந்தாகவேணும்!“
அம்மா பயந்திருந்தாள்-
என்ரை பிள்ளைக்கு என்ன ஆகப்போகுதோ?

ஆசியாக் கண்டத்தில் இவனுக்கு கல்யாணம் வாய்க்கவில்லை.
இப்போது ஐரோப்பாக் கண்டத்தில்!
எப்படியோ கண்டம் கடந்தாகிவிட்டது.
இனிக் கல்யாணத்துக்குத் தடையில்லை.
ஆனால் அத்தனை சுலபமா கல்யாணம் என்பது.
இவனை அவள் பார்த்து அவளை இவன்பார்த்து இவனுக்குத் தெரிந்தவர்களும் அவளுக்குத் தெரிந்தவர்களும் இவர்களைப்பார்த்து எல்லாம் சரிப்பட்டு வரவேண்டுமானால்
அது இலகுவான காரியமா என்ன?
ஆனால் இவன் முதலில் தனது தேர்வு சரியாக இருக்கவேண்டுமென்பதில் குறியாக இருந்தான்.
அடிக்கடி இவனது அறைக்குள் வீடியோக்களுக்குள் வந்து விழுந்தெழும்பும் தமிழ்ப்படத்துக் கதாநாயகிகள் அடிக்கடி இவனது கனவில்வந்து தொல்லை தர
அவர்களில் எவளுடைய சாயலிலேனும் எவளாவது..
ஆனால் எங்கே…?
அப்படி எவளாவது இருந்தால் அவளது அழகுக்கு மேலாக அவளது கையில் புகையும் சிகரட்டும் அவளது தலைவெட்டும் வாயைத்திறந்தால் வந்து விழுகிற மரியாதை கெட்ட தமிழும்….
அதெல்லாம் நாகரிகம்தான்…
ஆனால் அவற்றை சீரணிக்க முடியாமல்… Ich Liebe dich என்று சொல்லவந்த வார்த்தை ஆரம்ப
Ich உடன் குரல்வளைக்குள் சிக்கிக்கொண்டு விடும்.
காதலாவது கத்தரிக்காயாவது.

ஒருநாள் ஆறுதலாக இருந்து யோசித்தான்.
எனக்கு ஒரு கதாநாயகி தேவை.. சரி ஆனால் அந்தக் கதாநாயகியும் என்னைப் போல ஆசைப்பட்டால்….
ஒரு அப்பாஸ் ஒரு அஜீத் ஒரு அரவிந்தசாமி என்று இல்லாவிட்டாலும்
ஒரு கமலஹாசன் அல்லது ரஜனிகாந்த் மாதிரியாவது….
எவனைப்போலவும் இல்லை.
இவன் வடிவேலு மாதிரி!
சரி வடிவேலுவுக்காவது சில சமயங்களில் சரளா ஜோடி சேர்கிறாள்.
கவுண்டமணிக்கே ஜோதிமீனா….
இவனுக்கு….?!

தேர்வு பலமாயிருந்தது….
ஆனால் பெறுபேறுதான் பூஜ்யம்.
திடீரென ஒருநாள் ஒரு திருமணவீட்டில் ஒருத்தியைச் சந்தித்தான் இவன்.
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்றெல்லாம் புத்தகங்களில் படித்து எந்தப் பெண்களிடமும்
இதுநாள்வரை இவன் கண்டறியாத அந்தக் குணாதிசயங்களின் ஒட்டுமொத்தமான
கலவையாக அவளைக் கண்டபோது ஆச்சரியம்வந்தது.
அவளது அழகு… அதுமாதிரி ஒரு அழகை அவன் இதுநாள்வரையில் பார்த்ததே இல்லை.
அப்படி ஒரு அழகு.
நிறம்மட்டும் வெள்ளைக்காரிகளுக்கு நேர் எதிர். அதனால் என்ன?
(ஆபிரிக்காவில் ஜனத்தொகை குறைந்தாவிட்டது?)
ஆனால் முதற்பார்வையில் அவளும் இவனைப்பார்த்து மெள்ளப் புன்னகைக்க
பற்றிக்கொண்டது காதல் தீ.
அடுத்தடுத்த சங்கதிகள்தான் கொஞ்சம் கடுமை.
ஏதோ ஒரு ஒப்புக்கு அவள் புன்னகைத்து வைக்க இவன் அவளைத் தொடர ஆரம்பித்துவிட்டான்…
கண்களில் நெருப்பைக்கொண்டுவந்து „கால் செருப்பைக் கழற்றுவேன்“ என்று இங்கே வசனம் பேசமுடியாது.
காரணம் கால் செருப்புக் கழற்றுவதற்கு நேரமாகும்.
வேண்டுமானால் காலைமடித்து முழங்காலால் இவனது அடிவயிற்றில் இடித்துவிட்டுப் போகலாம்.
ஆனால் அவளுக்கு அந்த அளவுக்குத் துணிச்சல் இல்லை.
கூடவே பிறந்த அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு.
அவளால் முடிந்ததெல்லாம் ஒரு கோபப் பார்வை.
அவ்வளவுதான்.
அந்தப் பார்வையே இவனைக் கலங்கவைத்தது.
ஆனாலும் மறுபடியும் ஒருநாள் அவளிடமிருந்து புன்னகை வரும் என்று காத்திருந்தான் இவன்.
ஆனால் புன்னகைக்குப் பதிலாக ஒரு நாள் அவளது சார்பில் ஆறேழு „தடியன்“கள் வீடுதேடி வந்துவிட்டார்கள்.
„இனிமேல் அவளுக்குப் பின்னாலை உன்னைக் கண்டம்…நீ உயிரோடை இருக்கமாட்டாய்…!“
எச்சரித்துவிட்டுப் போகத்திரும்பியவர்களை இவன் விடவில்லை.
„ஒருத்தியை ஒருத்தன் விரும்பிறதிலை என்ன பிழை…?“
„அது பிழையெண்டு ஆர் சொன்னது…ஆனால் நீ அடுத்தவன்ரை மனிசியிலை கண்வைக்கப்படாது!“
-அதிர்ந்தான் இவன்.
„அவள் கல்யாணம் ஆனவளா?…அவளின்ரை கழுத்திலை தாலி இல்லை!“
-இவன் ஈனஸ்வரத்தில் முனகினான்.
„தாலி இல்லாட்டில்…? நீர் உடனை காதலிச்சிடுவீரோ? அவள் இப்ப தாலி போடுறதில்லை… அவளின்ரை சபையாலை தாலியை எப்பவோ கழற்றிப்போட்டாங்கள்!“

இவன் திணறினான்.
கலியாணம் முடித்தவளா?
அப்படியானால் கட்டின தாலியைக் கழற்றி எறிவானேன்…
அது என்ன சடங்கும் சம்பிரதாயமும்….
தாலிகட்டிறது ஒரு சடங்கு.
அது ஒரு பாதுகாப்பு வேலி…
அதை வேணாமெண்டால்…?
இவனது முதற்காதல்(?) கருகிப்போயிற்று.

+++

இவனது முதற்காதல் கதையைக் கேட்டு நித்யா சிரித்தாள்
விழுந்து விழுந்து சிரித்தாள். (காயம்படவில்லை)
„அப்ப நீங்கள் எனக்குத் தாலிகட்டமாட்டீர்கள்!“
„வேண்டாம் நித்யா…தாலி பெண்ணுக்கு வேலி என்கிறதெல்லாம் சும்மா… அது ஆணுக்குப் பெண்ணை அடிமையாக்கிறது மாதிரி…
மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுறதுமாதிரி..பெண் ஒரு உயிருள்ள ஆத்மா… அதைப்புரிஞ்சு கொள்ள வேணும்… தாலிகட்டினாத்தான் மனைவியா…தாலி இல்லாமலும் இருக்கலாம்…இந்த வெளிநாட்டுக் காரிகள்மாதிரி!“
„போதும்…போதும்;…!“ சடக்கென எழுந்தாள் நித்யா.
„நீங்கள் ஏன் தாலி வேணாமெண்டு சொல்கிறீங்கள் எண்டு எனக்குத்தெரியும்…உங்களுக்கு கிடைக்கிற சம்பளத்திலை எனக்கு ஒரு தாலி வாங்கவும் உங்களாலை முடியாது… அதிலையும் நான் பத்துப் பவுணிலை தாலி கேட்டா நீங்கள் என்ன செய்வீங்கள்…? அதுக்குத்தானை இப்பிடி ஞாயம் சொல்லிச் சமாளிக்கிறீங்கள்…? வேண்டாம்… தாலிகட்ட முந்தியே இப்பிடிக் கதைக்கிற உங்களோடை எப்பிடி நான் குடும்பம் நடத்த முடியும்…நீங்க வேறை ஆளைப் பாருங்கோ!“
-அவள் வேகமாகப் போய் பஸ்ஸில் ஏறிக்கொண்டாள்…

இவன் குழம்பிப்போய் நின்றான்…
படித்த குறள் ஞாபகம் வந்தது.
„கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல“

காதலிக்கிறவன் காதலிக்கிறவளைப் பார்த்துக்கொண்டே இருந்தாப் போதும்
வாயைத்திறந்தானோ….?
வள்ளுவன் என்ன சொன்னான்…
காதலிக்கிறவன் தன்ரை சொந்த வாயைத்திறந்து சொந்தக் கருத்தைச் சொல்லப்படாது என்றா?
அதுதான் தெரியவில்லை!