Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 ஒரு போராளியின் பார்வையில் இன்றைய ஈழமே’சினம்கொள்’: ரஞ்சித் ஜோசப் – stsstudio.com

ஒரு போராளியின் பார்வையில் இன்றைய ஈழமே’சினம்கொள்’: ரஞ்சித் ஜோசப்

அண்மையில் கனடாவில் சிறப்புத் திரையிடல்கள் மூலம் சினம்கொள் திரைப்படத்தை பார்வையிட்ட ரசிகர்கள் இதை ஒரு முக்கியமான ஈழத் திரைப்படம் என்று பாராட்டுகின்றார்கள். இந்த திரைப்படத்தை பார்த்த தமிழகத்தில் உள்ள முக்கியஸ்தர்களையும் தம்மை படம் வெகுவாக பாதித்துள்ளதாக கூறுகின்றனர். இன்னும் வெளியிடப்படாத இந்த திரைப்படத்திற்கு சிறப்பு திரையிடல்கள் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. லண்டனில் எதிர்வரும் 20ஆம் திகதியும் சுவிஸில் 21ஆம் திகதியும் நோர்வேயில் 27ஆம் திகதியும் பிரான்ஸில் 28ஆம் திகதியும் சிறப்பு திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்மையில் ஆனந்த விகடன் இதழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனரை் ரஞ்சித் ஜோசப்பின் இவ் நேர்காணலை வணக்கம் லண்டன் நன்றியுடன் இங்கே பிரசுரம் செய்கின்றது. ஆசிரியர்

“எம் விடுதலைப் போராட்டத்தையோ, எம் மக்களின் கதையையோ தமிழகத் தமிழர்களால் எக்காலத்திலும் உருவாக்க முடியாது. தமிழகத்தில் இருக்கக்கூடிய படைப்பாளிக்கு அது ஒரு கதை. ஈழத்திலிருந்து வரக்கூடிய இயக்குநருக்கு அது ரத்தமும் சதையுமான வாழ்க்கை. தமிழகம்தான் எங்கள் தாய்வீடு. நான் இங்குதான் சினிமா கற்றேன். அந்த நன்றி எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் எங்கள் சினிமாவை எங்களால்தானே உருவாக்க முடியும்.”  இப்படி அழுத்தமாக பேசுகின்றார் இயக்குனர் ரஞ்சித்.

இது இந்தியத் தயாரிப்பில் எடுக்கப்பட்ட முதல் முழுநீள ஈழ சினிமா. முழுக்க ஈழ நிலப்பரப்பில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்தவர்கள் அனைவருமே ஈழத் தமிழர்கள். இந்தியாவில் தணிக்கை பெற்று ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள ‘சினம் கொள்’, தேசிய விருதுத் தேர்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

“நீங்கள் யார், ஈழத்தில் எந்த ஊர்… உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?”

“பிறந்து வளர்ந்தது, இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்வேலி. யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அங்கிருந்து 91-ம் ஆண்டு கொழும்புக்கு இடம்பெயர்ந்தோம். கொழும்பிலிருந்து 93-ம் ஆண்டு என் 16-வது வயதில் கனடாவுக்கு அகதியாகச் சென்றோம். ஸ்கூல், காலேஜ் அனைத்தும் கனடாவில்தான்.பிலிம் அண்டு டெலிவிஷனில் டிகிரி கோர்ஸ் சேர்ந்தேன். கோர்ஸ் முடித்துவிட்டு குறும்படங்கள் எடுத்தேன். பிறகு கனடாவில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் வேலை செய்தேன். 2005-ம் ஆண்டு இறுதியில் திரைக்கதை பற்றிய லெக்சர் கொடுப்பதற்காக வன்னிக்கு அழைக்கப்பட்டேன். நான்கைந்து மாதங்கள் வன்னியில் தங்கியிருந்தேன். அப்போது அரசியல் துறை சார்ந்தவர்களுடன் கதைக்கும்போது, ‘சினிமா என்ற இந்த ஊடகத்தை விடுதலைப் போராட்டத்துக்கு எப்படிப் பயன்படுத்தலாம்’ என்று பேசினோம். அந்தவகையில்தான் தமிழ்நாடு சென்று இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராகச் சேருவது என்று முடிவெடுத்தேன்.”

“எங்கள் சினிமாவை உங்களால் எடுக்க முடியாது!”

“யாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தீர்கள்?”

“2007-ல் இந்தியா வந்து கவிஞர் அறிவுமதி அண்ணன் மூலம் இயக்குநர் சசி சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து ‘பூ’ படத்தில் வேலை செய்தேன். இன்று எங்களுடைய மண் சார்ந்து, மொழி சார்ந்து ஒரு படம் எடுத்திருக்கிறேன் என்றால் அதற்கு கனடாவில் கற்ற சினிமாவைவிட சசி சாரிடம் கற்ற அனுபவங்கள்தான் முக்கியமான காரணம்.”

“ ‘சினம் கொள்’ எந்தப் புள்ளியில் தொடங்கியது?”

“‘இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுக் காணாமல்போனவர்களைப் பற்றி ஆவணப்படம் செய்யணும். இங்கு வருகிறீர்களா’ என்று 2017-ல் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் என்னை அழைத்தார். 2005-க்குப் பிறகு நான் ஈழம் பக்கமே போகவே இல்லை. திரும்ப உள்ளே போகும்போது ஒருவேளை கைது செய்யப்படலாமோ என்ற அச்சம். என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம் என்று துணிந்து போனேன். அங்கு டிஸ்கஷனின் போது, ‘இதை ஏன் நாம் முழுநீளப் படமா பண்ணக்கூடாது’ என்ற எண்ணம். அதற்கு இலங்கைப் பணத்துக்கு ஒரு கோடி ரூபாய். இந்தியப் பணத்துக்கு 40 லட்சம் தேவை என்பது புரிந்தது. நண்பர்களும் உதவ முன்வந்தார்கள். ‘சினம் கொள்’ தொடங்கிவிட்டோம்.

இறுதிக்கட்டப்போரில் கைதுசெய்யப்பட்ட ஒரு போராளி, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுகிறான். ‘போராட்டம் மௌனிக்கப் பட்ட 2009-க்குப் பிறகு ஈழத்தமிழனுடைய நிலை என்ன?’ என்ற கேள்வியை அவன் பார்வையில் மூன்றுவிதமான கருத்துகளோடு முன்வைக்கிறேன். ஒன்று, ‘எந்நேரத்திலும் சுடப்படுவாய். செத்துப் போகத் தயாராகவே இரு’ என்று மக்களை பய உணர்வோடே வைத்திருப்பது. அடுத்து, தமிழ் நிலப்பரப்பில் கஞ்சா, ஆல்கஹால், நீலப்படம் போன்ற பண்பாட்டுச் சீரழிவுகள். மூன்றாவது, போராளிகளின் தற்போதைய நிலை.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளிகளின் பொருளாதார நிலை பரிதாபகரமாக உள்ளது. ஒருவேளைச் சாப்பாட்டுக்கே அல்லல் படுகிறார்கள். விடுவிக்கப்பட்ட போராளிகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ‘என் இறுதிக்காலத்தில் மாவீரர்களின் குடும்பங்களுக்காகவும் காயப்பட்டு உடல் அவயவங்களை இழந்த போராளிகளுக்காகவும் வாழ்வதுதான் என் இலக்கு’ என்று தலைவர் பிரபாகரன் சொல்லியிருக்கிறார். அதற்கு சர்வதேசரீதியில் ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி வைத்திருந்தார். இன்று அவர் இல்லை என்ற சூழலில் அவர் கட்டியெழுப்பிய அந்தப் பொருளாதாரம் என்ன ஆனது? வெளிநாடுகளில் உள்ள அந்தப் பொருளாதாரக் கட்டமைப்புகள் அனைத்துமே அதற்கான பொறுப்பாக இருந்தவர்களின் சொந்தச் சொத்தாக மாறிவிட்டன என்பதே உண்மை. ‘சினம் கொள்’ பட வில்லனே அப்படி ஒரு புலம் பெயர்ந்த தமிழர்தான். இப்படியான பிரச்னைகளை ஓரளவுக்கேனும் சர்வதேச சமூகத்தின் முன் இந்தப் படம் வைக்கும்.

வசனம் மற்றும் பாடல்களை எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியிருக்கிறார். இசை என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவு மாணிக்கம் பழனிக்குமார், படத்தொகுப்பு அருணாசலம். ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்த அரவிந்தன்தான் ‘சினம் கொள்’ நாயகன். நாயகி, நர்வினி டேவிட். டென்மார்க்கில் வசிக்கும் ஈழப் பெண். இவர்களுடன் தமிழக நடிகர் தனஞ்செயனும் நடித்திருக்கிறார்.”

“எங்கள் சினிமாவை உங்களால் எடுக்க முடியாது!”

“ஈழத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்ததா?”

“ஸ்க்ரிப்டை இலங்கைத் திரைப்படக் கூட்டுஸ்தாபனம் ஏற்றுக்கொள்ளுமா என்ற தயக்கத்திலேதான் கொடுத்தோம். படப்பிடிப்பு நடத்த அனுமதித்தனர். 15 நாள்கள் ஷூட்டிங் முடித்திருந்த நிலையில் திடீரென்று ஒருநாள் இலங்கை பிலிம் போர்டில் இருந்து ‘ஷூட்டிங்கை நிறுத்துங்கள். மீறிச் செய்தால் கேமராவைப் பறிமுதல் செய்வோம், கைது செய்வோம்’ என்று சொன்னார்கள். நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு, ‘ஷூட் பண்ணும்போது எங்கள் கண்காணிப்பாளர் ஒருவர் உங்களுடனேயே இருப்பார். அவரிடம் காட்சிகளைச் சொல்லி அனுமதி பெற்ற பிறகே ஷூட் செய்ய வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் அனுமதித்தார்கள். அப்படித்தான் படத்தை முடித்தோம்.’’

“2005-க்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து 2017-ல் ஈழம் சென்றீர்கள். எப்படி இருந்தது அந்த உணர்வு?”

“எத்தனையோ ஆயிரம் குடும்பங்களில் தலைவன் கிடையாது, தலைவி கிடையாது, பிள்ளைகள் கிடையாது. மீதம் இருப்பவர்களுக்கும் கைகால்கள் கிடையாது. தமிழர் பகுதிகளில் இன்று தமிழ் இரண்டாம் நிலைக்குப்போய், எங்கும் சிங்களம்தான். எங்கு பார்த்தாலும் ராணுவம். சுதந்திரமாக இருக்கிறோம் என்ற எண்ணமே உங்களுக்கு வராது. யாரோ ஒருவர் உங்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்ற எண்ணம்தான் வரும்.”