Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கவிதை நூல் அறிமுகமும் குறும்படத் திரையிடலும் – stsstudio.com

கவிதை நூல் அறிமுகமும் குறும்படத் திரையிடலும்

படைப்பிலக்கியங்களோடும் இலக்கியகர்த்தாக்களோடும் தமிழ்மொழி, கலாச்சார பண்பாடுட்டுவிழுமியங்களை மேம்படுத்தும் உறவுப்பாலமாகப் பயணிக்கும், யேர்மனி தமிழ் எழுத்தாளர்சங்கத்தால் கடந்த 30.11.2019 சனிக்கிழமையன்று நடாத்தப்பட்ட, மீராவின் பறவையாய் அவளை மாற்றிப்பார்ப்போமா ? நூல் அறிமுக விழாவும் வி.சபேசனின் துணை-குறும்படத் திரையிடலும் யேர்மனி-டோட்முண்ட் Leopold Str.50-58 என்ற முகவரியிலமைந்த மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்கமுடியாத பணியிடத்து அவசர பொறுப்புகளால் இந்நூலின் ஆசிரியர் அவர்களின் பூணர ஒப்புதலுடன், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் முழுப்பொறுப்பினையும் எற்று இவ்விழாவினை நிறைவுற நடாத்திமுடித்ததென்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.
இளம் அறிவிப்பாளர் சிவவிநோபனின் நிகழ்ச்சித்தொகுப்போடு 14.30 மணிக்கு திரு. சோ.தங்கராஜா (உலகத்தமிழ் பண்பாட்டு மையம் யேர்மனி பொறுப்பாளர். தொழிலதிபர்) அவர்களும் , திரு.வ. சிவராசா (மண் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்சத்தின் பிரதம ஆலோசகர்) அவர்களும், மற்றும் STS Tamil TV, STS Studio உரிமையாளர் திரு.எஸ்.தேவராஜா அவர்களும் மங்கல விளக்கேற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து மௌன வணக்கம் இடம்பெற்றது போர்களின் நிமித்தம் தம்முடைய உயிர்களை நீத்தவர்களுக்கும் இயற்கை அனர்த்தங்களினாலும் விபத்துக்களினாலும் தம்முடைய இன்னுயிர்களை இழந்தவர்களுக்குமான மௌன அஞ்சலியினைத்தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்தினை டோட்முண்ட் – வள்ளுவர் தமிழ் பாடசாலை மாணவிகளான செல்வி கோசிகா சத்தியசீலனும் செல்வி தமிழினி பரமேஸ்வரனும் வழங்கியதனையடுத்து அவர்களுக்கான நினைவுப்பரிசில்களை திரு. சோ.தங்கராஜா அவர்களின் கரங்களால் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. சம்பிரதாயபூர்வமாக நிகழ்வுகள் தொடர்ந்தன. இந்த நிகழ்வுகளில் பங்கேற்கமுடியாத சூழ்நிலையில் தற்போது பிரித்தானியாவில் வசித்துக்கொண்டிருக்கின்ற திருமதி. மீரா குகன் அவர்கள் நிகழ்வினைக்கண்டு களிப்பதற்காகவேண்டி இணையத்தின் துணையுடன் முகநூல்வழி நேரடியாகக் காட்சிப்படுத்திய கருமங்கள் மிகக் கச்சிதமாக அமைந்தன.
முதலில், வரவேற்புரையினை எழுத்தாளரும், கவிஞரும், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினருமான திருமதி கெங்கா ஸ்ரான்லி அவர்கள் நிகழ்த்தியதனையடுத்து தலைமையுரை இடம்பெற்றது. யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்; தலைவரும் ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை நிர்வாகப் பொறுப்பாசிரியருமான திரு.அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் தலைமையுரையினை வழங்கினார். நூலாசிரியரில்லாது நடைபெற்ற மூன்றாவது விழாவாக இந்நிகழ்வினைச் சங்கத்தின் 65வது நூல் அறிமுக /வெளியீடென்றும் தலைமையுரையில் அவர் குறிப்பிட்டதுடன் சங்கத்தின் செயற்பாடுகளையும் நிகழ்வினில் பதிசெய்த தலைமைரையினையடுத்து இடம்பெற்ற நிகழ்வாகக் கவிதைநூல் அறிமுகத்தினை, யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்; பொதுச்செயலாளரும் ஆசிரிய ஆலோசகருமான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் நிகழ்த்தினார். அதில் கவிஞை மீராவின் ஆளுமைகளையும் அவர்விபரித்தமையைத் தொடர்ந்து, யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்; துணைத் தலைவரும் யேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் தலைவருமான திரு. பொன்.சிறி ஜீவகன் ஆசிரியர் அவர்களின் திருக்கரங்களால் முதல்பிரதிகளை உலகத்தமிழ் பண்பாட்டு மையம் யேர்மனிப் பொறுப்பாளர்: திரு. சோ.தங்கராஜா அவர்களும் அம்மாஸ் உணவக உரிமையாளர்:திரு. இரவீந்திரதாஸ் கார்த்தீபன் அவர்களும் பெற்றுக்கொண்டதனையடுத்து, இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பிர்கள் என, தமிழ்ப்பற்றோடும் ஆர்வத்தோடும்; பறவையாய் அவளை மாற்றிப்பார்ப்போமா ? கவிதை நூற் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். சிற்றுண்டிகளும் பானங்களும் வழங்கப்பட்ட இடைவேளையினையடுத்து நிகழ்வுகள் துரிதமாகத் தொடர்ந்தன. கவிஞர் நெடுந்தீவு முகிலன் வழங்கிய நூலின் மீதான விமர்சனம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் குவிந்தன. அந்தவகையில் மண் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர், திரு.வ. சிவராசா அவர்கள், எழுத்தாளரும் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினருமான திருமதி. ஜெயா நடேசன் அவர்கள், ; யேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் தலைவர் திரு. பொன்.சிறி ஜீவகன் ஆசிரியர் அவர்கள், எசன் தமிழ் மொழிச்சேவைக் கலாச்சார மன்ற தமிழ்ப்பாடசாலை ஆசிரியையும் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினருமான திருமதி. சாந்தினி துரையரங்கள் அவர்கள், மூத்த அறிவிப்பாளர்.திரு.முல்லைமோகன் அவர்கள், STS TV,STS Studio உரிமையாளர் திரு.எஸ்.தேவராஜா அவர்கள், என்று நீண்ட வாழ்த்துரைகளில் இலக்கிய விமர்சகர். திரு. தேவன் அவர்கள் வாழ்த்துரையுடன் நிறைவுக்கு வந்தது. கவிதைநூல் அறிமுகத்தின் இந்தவிழாவினை முகநூல்வழி கண்டுகளித்த கவிஞையும் படைப்பாளியுமான மீரா அவர்கள் அனுப்பிவைத்த ஏற்புரையினை யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர். திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் மீராவின் சார்பில் வாசித்து வழங்கினார்.
இவ்விழா நிகழ்வின் இரண்டாம் பகுதியான வி. சபேசனின் துணை- குறும்படத்திரையிடல் இடம்பெற்றது. மிக அமைதியாக அனைவரும் படத்தினை இரசித்தார்கள். உச்சக்கட்டங்களில் ஆரவாரத்தோடு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனர். சுமார் 20 நிமிடங்களுள்ளடங்கிய குறும்படம் நிறைவுற்றநிலையில், யேர்மனிய தமிழ்க்குறும்பட இயக்குநர்களில் ஒருவரும் நுண்கலைக் கலைஞருமான திருமதி சுபோ கஜன் அவர்களின் விமர்சனம் இடம்பெற்றது. தொடர்ந்து திரு. வி. சபேசன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தமது விமர்சனத்தினையும் பலர் முன்வைத்தனர். அவர்களுள் யேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் தலைவருமான திரு. பொன்.சிறி ஜீவகன் ஆசிரியர் அவர்கள், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளர். திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள், எசன் தமிழ் மொழிச்சேவைக் கலாச்சார மன்ற தமிழ்ப்பமசாலை ஆசிரியை திருமதி. சாந்தினி துரையரங்கள் அவர்கள், மூத்த அறிவிப்பாளர். திரு.முல்லைமோகன் அவர்கள், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்; தலைவர் திரு.அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் எனச்சிலரைக் குறிப்படலாம். தொடர்ந்து துணை- குறும்படத்தின் கதை,திரைக்கதை, வசனம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தினை திறம்பட வெளிக்காட்டிய பன்முகப்படைப்பாளியான திரு.விமலசேகரம் சபேசன் அவர்களின் (விமர்சனத்தக்கான) ஏற்புரையும், மீராவின் பறவையாய் அவளை மாற்றிப்பார்ப்போமா? நூலின் மீதான சிறப்புப்பார்வையும் அவர்வழங்கிய சிறப்புரையாக இடம்பெற்றது. நிறைவான நிகழ்வுக்கு யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்; துணைப்பொருளாளரும் டோட்முண்ட் கல்விக்கழகத் தமிழ்ப்பாடசாலை ஆசிரியையுமான திருமதி.ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்களின் நன்றியுரை இடம்பெற்றது. யதார்த்தமான துணை என்ற இந்தக்குறும்படத்திற்கும் மீராவின் கவிதை நூலுக்கும் இடையே நெருக்கமான ஒரு தொடர்பிருப்பதான உள்ளுணர்வுடன் பலர் அளவளாவிய தருணத்தோடு, மனதுக்கு நிறைவான அன்ளைய நிகழ்வானது இனிதே நிறைவுகண்டது.
-யேர்மனியிலிருந்து… கவிச்சுடர்-