நீந்திச்செல்லும் நினைவுகள்..


நீச்சல் குளத்தினில் துள்ளும் மீன்களாக
நெஞ்சக்குளத்தினுள் நீச்சலடிக்கும்
நினைவுகள் நொடிக்கொரு தடவை
நைல்நதியாக நீந்திச்செல்லும்…
இருட்டினில் தேடிய வெளிச்சம்
இசைக்கத்தவறிப்போன பூபாளம்
இதய வலிகளுக்குநிவாரணியாய்
அந்த நிலாக்காலம் நோக்கி அழைக்கும்
முல்லைக்கொடிக்கு தேர் தந்த பாரியாய்
மனங்கொண்ட காதலுக்கு உயிர் தந்து
மெல்லத்தாலாட்டி துயில் கொள்ளும்
மனதோரம் பட்டாம்பூச்சியாய் பறக்கும்
மயக்கம்பாதி தயக்கம் பாதியாய்
கமலத்தை அள்ளிய மலர்க்கரங்கள்
கலாசாலை கதவுகளை தட்டும்
கட்டி வைத்த புத்தகங்களிடையே
எட்டிப்பார்க்கும் மயிலிறகுகள்
குட்டிப்போடும் என்ற எதிர்பார்ப்பாய்
காணமற்போன நட்பு பட்டியல் நீளும்
கலைந்தகனவுகளாய் கன்னங்களில் நீராகும்..
கொத்து கொத்தாய் காய்த்த மரங்களும்
கொட்டும்மழையில் நனைந்தும் கொளுத்தியவெயிலில் காய்ந்தும்
குச்சொழுங்கைக்குள் ஓடியாடியும்
கல்லெறிந்து நண்பன் பறித்து தந்த விளாங்காயும்..
கிளி கொந்திய மாம்பழமும் மைனாவின் பேச்சும்
காலங்கள்கடந்தபோதும்ஈரப்பசுமையாய்
கண்களில் காட்சிகளாய் தினம் தெரியும்
கண்டங்கள் தாண்டி கன்னங்கரிய இருளைகிழித்துச்செல்லும்…
நினைவுகளை சுமந்தபடி
ரதிமோகன்