Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 அன்புள்ள மான்விழியே…!-இந்துமகேஷ் – stsstudio.com

அன்புள்ள மான்விழியே…!-இந்துமகேஷ்

„மானின் நேர்விழி மாதராய்..!“ என்று விளிக்கின்ற முன்னைய காலம் தொட்டு „அன்புள்ள மான்விழியே!“ என்று அழைக்கின்ற இந்தக் காலம்வரை மானின் விழியை மங்கையர் விழிகளுக்கு உவமை சேர்ப்பது வழக்கமாகிப் போயிருக்கிறது. முன்பின் மானைக் கண்டறியாதவனும் தனது பெண்துணையை வர்ணிக்க மானைத் துணைக்கு அழைக்கிறான். இவள்விழி மான்விழி என்பதைவிட மான்விழி இவளுடையது போலத்தான் இருக்கும் என்று தனக்குள் அவன் எண்ணிக்கொண்டிருக்கக்கூடும்.

அது சரி மான்விழி அத்தனை அழகா என்ன? காலகாலமாகச் சொல்லப்பட்டு வருவதால் அது உண்மையாகத்தான் இருக்கும்.

மான் எனக்கு அறிமுகமாவதற்கு முன்பு என் சிறுவயதில் மான்கொம்பும் அதன் தோலும்தான் அறிமுகமாகியிருந்தது. எனக்கு அறிவு தெரிந்த நாள்முதலாக எங்கள் வீட்டுச் சுவரில் ஒரு பெரிய மான்கொம்பு இருந்தது. அது மான்கொம்பு என்றும் மான் என்பது ஆடு மாடு போல் ஒரு விலங்கு என்றும் அறிந்ததைத் தவிர அந்தவயதில் எனக்கு அதுபற்றிய மேலதிக ஆர்வம் இருக்கவில்லை. நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அந்த மான்கொம்பு அங்கு இருந்திருக்கவேண்டும்.அந்த மான்கொம்பு எப்படி யார்மூலம் எங்கள் வீட்டுச் சுவருக்கு வந்தது? அதை எதற்காகச் சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்கள்? அழகுக்காகவா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? இப்படி வீடுகளில் மான்கொம்பை வைத்திருப்பதால் பலன் என்ன? என்பதுபற்றியெல்லாம் நான் அக்கறை கொள்ளவில்லை. வீட்டினுள்ளே பரணில், பாய்போல சுருட்டி வைக்கப்பட்டிருந்த மான்தோல் ஒன்றும் அங்கு இருந்தது. அந்த மான்தோலும் இந்தக் கொம்புக்குரிய மானினுடையதாக இருந்திருக்குமோ என்னவோ.

வீட்டில் ஏதாவது சமயக்கிரியைகளுக்காக ஐயர்மார் வரும் நாட்களில்மட்டும் அந்த மான்தோல் பரணிலிருந்து கீழிறங்கும்.

„ஐயர் வாறேர்.. அந்த மான்தோலை எடுத்து விரிச்சுவிடு. அவர் இருக்கட்டும்!“ என்று எனக்குக் கட்டளை இடப்படும். மான்தோலில் வேறு யாரும் அமர்வதில்லை. „ஐயர்மார் மட்டும்தான் மான்தோலிலை இருக்கலாம்!“

„ஏன் அப்படி?“ என்ற கேள்வியும் அப்போது என்னிடத்தில் இல்லை. இதெல்லாம் காலகாலமாக நடந்துவருகிற சங்கதிகள். கேள்வி கேட்பதுவோ சடங்குகள் சம்பிரதாயங்களை மாற்றுவதோ முறையற்ற செயலாக எனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது.

ஓர் உயிரைக்கொன்று அதன் தோல் தசை இரத்தம் என்பவைகளைப் பயன்படுத்திக் கொள்வதுதான் பாவமே தவிர, இயற்கையாகவே இறந்துபோகிற ஒன்றின் உடலைப் பயன்படுத்துவது பாவமல்ல என்ற விதி மனிதர்களால் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால்தான் மானினதும் புலியினதும் தோல்கள் இருக்கைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டினது தோல் மேளமாகவும் மத்தளமாகவும் ஆலயங்களுக்குள் பிரவேசிக்கின்றது.

சரி இப்போது மானின் கதைக்குவருவோம்.

மான் என்பது வனவிலங்குகளில் ஒன்று. மிகவும் சாதுவான பிராணி. மருண்ட பார்வை கொண்ட அழகான கண்களை உடையது. மிகப்பலமான, கிளைபோன்ற கொம்புகளுடன் காட்சியளிக்கும் ஆண்மானைக் கலை என்றும், பெண்மானைப் பிணை என்றும் அழைக்கப்படுகிறது என்று மானைப்பற்றிய அறிமுகம் தரப்படுகிறது.

இத்தனை பெரிய கொம்புக்குச் சொந்தமுடையதாக இருந்தும் எதிரிகளிடம் இலகுவில் வசப்பட்டுவிடும் மானின் வீரம்பற்றி என்ன சொல்வது? எதிர்ப்பை வெளிக்காட்டாமல் சாதுவாக அடங்கிப்போவதாலோ பயந்து ஒளிந்துகொள்வதாலோ ஓர் இனம் தன்னைத்தானே அழித்துக்கொண்டுவிடும் என்ற விதி மான்களுக்கும் பொருந்தும்.

„தேடிவந்தேனே புள்ளி மானே!…“

ஸ்ரீவள்ளி நாடகத்தில் வேடனாக வேடமிட்டுவரும் முருகனாக, கதையின்நாயகன் பாடிக்கொண்டு ஓடிவருவார். மேடையில் மான் இருக்காது. மானுக்குப் பதிலாக வள்ளி இருப்பாள்.வில்லும் அம்பும் கையிலிருந்தாலும் முருகனின் நோக்கம் புள்ளிமான் வேட்டையல்ல. வள்ளிமான் வேட்டை.

„உயிர்க்கொல்லி நோயான“ காதலுக்கு இலக்கானவர்கள் எவருக்கும் எல்லா உயிர்கள்மீதும் அதீதமான பாசம் ஏற்பட்டு விடுவது இயற்கை.அதனால் துரத்தி வந்த மானைக் கொல்வது முருகனின் நோக்கமல்ல.வள்ளியின் நேசத்துக்குரிய மானைக் கைப்பற்றப் போவதாக அறிவிப்பதன்மூலம் அவளது நேசத்தை தன் பக்கம் திருப்புவதே அவனது நோக்கம்.

ஆடுவளர்ப்பு மாடுவளர்ப்பு கோழிவளர்ப்பு என்று பெண்கள் தங்கள் வீடுகளில் வளர்க்க விரும்பும் விலங்குகளுக்குப் பதிலாக அது என்ன மான் வளர்ப்பு?முன்னைய காலங்களில் மான்களும் வளர்ப்புப் பிராணிகளில் ஒன்றுதான்.பெரும்பாலும் முனிவர்களின் குடில்களில் அவர்களது பத்தினியரின் பிரியத்துக்குரியவைகளாக மான்களும் மயில்களும் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

இலக்கியங்களின் பல்வேறு பக்கங்களில் மானும் ஓர் முக்கிய பாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது.மாரீசன் மாயமானாக மாறி சீதையை இராமரிடமிருந்து பிரிப்பதற்கு வழிவகுத்த கதை நமக்கெல்லாம் தெரியும். மான்களை வதைசெய்ததால் துன்பப்பட்டவர்கள் பலரை பண்டைய இலக்கியங்களில் நாம் அதிகம் காணலாம்.

உலகெங்கிலும் மான்கள் பெருவாரியாக வாழ்ந்த காலம் ஒன்று இருந்திருக்கிறது.சாதுவாகவும் தாவரபட்சணியாகவும் இருக்கின்ற விலங்கினங்கள் ஏனைய உயிரினங்களுக்கு இலகுவில் இரையாகிப் போகின்ற ஆபத்தை தொடக்க காலத்திலிருந்தே மான்களும் எதிர்கொண்டன. அதனால் அவற்றின் இனமும் அருகி வருகிறது.

மான்களை இரையாகக் கொள்ளும் மனிதர்களிடமிருந்து அவற்றைக் காப்பதற்காக இப்போது பல நாடுகளில் மான்வேட்டைத் தடைச்சட்டம் அமுல் படுத்தப்பட்டிருக்கிறது.

இப்போது முருகன் „தேடிவந்தேனே புள்ளிமானே“ என்று வில் அம்புடன் வந்தால் அவரையும் பிடித்து உள்ளே போட்டுவிடலாம்.

„மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்!“ என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறாரேஅந்தக் கவரிமானும் இந்த மான்வகைகளில் ஒன்றா? மானினத்துக்கும் கவரிமானுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அண்மைக்காலமாக அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் சில அறிஞர்கள். உண்மையில் கவரிமான் என்றொரு இனமே கிடையாது. வள்ளுவர் குறித்தது „கவரிமா“ என்னும் ஒரு காட்டு மிருகத்தையே தவிர மானல்ல அது என்கிறார்கள் அவர்கள். பல சந்தர்ப்பங்களில் உண்மையைவிடக் கற்பனை அதிக சக்திவாய்ந்ததாகி விடுகிறது. கவரிமான் இதற்கு நல்ல உதாரணம்.

கற்பனை மான்களை ஒதுக்கிவிட்டு நிஜமான்களைக் காக்கவேண்டிய கடமை நமக்குரியது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert