ஹாரி எழுதிய ‚நானாக நீயானாய்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற ஹபீலா புஹாரி எழுதிய ‚நானாக நீயானாய்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா.

கற்கும்போதே கவிதை நூலினை வெளியிடுவது ஒருவகை உயர்ச்சியும் மகிழ்ச்சியுமானது. அப்படியான ஒரு வெளியீடு இது. வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் மாணவ ஆசிரியை ஹபீலா புஹாரி எழுதிய ‚நானாக நீயானாய்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 24.01.2018 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு ஈழத்தின் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி பல்நோக்கு மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமை வகித்தார். வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். விருந்தினர்கள் வரவேற்பினைத் தொடர்ந்து சுடரேற்றல் இடம்பெற்றது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தினை மாணவ ஆசிரியர்கள் இசைத்தனர்.

வரவேற்புரையினை தமிழ் மன்றத் தலைவர் பெ.பாஸ்கரன் வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து மாணவ ஆசிரியை செ.சுமித்ரா வாழ்த்துக்கவி அளித்தார். வெளியீட்டுரையினை கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன் ஆற்றினார். நூலினை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி க.சுவர்ணராஜா வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் பிரதிகள் வழங்கப்பட்டன.

நூலின் ஆய்வுரையினை யோ.புரட்சி ஆற்றினார். அத்துடன் ‚1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூலினையும் யோ.புரட்சி கல்லூரிக்கு அளித்தார்.

தொடர்ந்து மாணவ ஆசிரியை க.ருத்திரி கவிதை வழங்கினார். அநுராதபுரம் மாவட்ட எழுத்தாளர் கெக்கிறாவை சஹானா வாழ்த்துரை வழங்கியதைத் தொடர்ந்து
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தினார். ஏற்புரையினை நூலாசிரியர் ஹபீலா புஹாரி வழங்க, நன்றியுரையினை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ் மன்றச் செயலாளர் கி.கார்த்திகா வழங்கினார். விஜய் பதிப்பக அச்சில் வெளியான இந்நூலின் வெளியீட்டு
நிகழ்வில் ஹபீலா புஹாரி அவர்களின் பெற்றோர், மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் என நிறைவானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிகளை மாணவ ஆசிரியர்கள் த.மிரோஜன், பமிலா ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.