பொம்மை விளையாட்டு! -இந்துமகேஷ்

எந்தன் சொந்தமென
ஏதோ ஒரு பொம்மை!

அறியாப் பருவத்தில்
அதனோடு வாழ்ந்திட்ட
பொழுதுகள் கனவாய்ப்
போய்மறைந்து விட்டாலும்-
இன்னும் அதன் நினைப்பு
என்மனதில் வாழ்கிறது!

வெளிநாட்டுக் குழந்தையைப் போல்
உடல் வண்ணம், விழி நீலம்,
கை கால் தலை அசைக்கும்
கண்சிமிட்டும் உட்காரும்
எழுந்துநிற்கும் நடைபழகும்
என்னோடு கதைபேசும்!

ஆர்கொண்டு தந்ததென்று
அறியாமல்…. ஆயினும் என்
சொந்த மென்றாகித்
துணையாகிப் போனதது!

பொம்மையென அப்போது
புரிந்தும் புரியாமல்
என்னைப்போல் ஓருயிராய்
எண்ணிக் களித்திருந்தேன்.

பொம்மையோடு பொம்மையாய்ப்
பொழுதைக் கழித்ததனால்
பொம்மையென என்னையும் நான்
புரிந்துகொண்டு விட்டேனோ?!
எடுப்பார் கைப் பொம்மையென
என்கதையும் ஆயிற்று!

என்னையும் ஓர் பொம்மையென
நானுணர்ந்த காரணத்தால்
என்பொம்மை இப்போது
என்னைவிட்டுப் போயிற்று!

„யார் என்ன சொன்னாலும்
தலையாட்டும் பொம்மையென
ஆனால்தான் அவர் எம்மை
அரவணைத்துக் கொள்வாராம்!
தாய் தந்தை ஆசிரியர்
சகதோழர் சுற்றமென
எவர் என்ன சொன்னாலும்
ஏற்றுவிடு பொம்மையைப்போல்!“
-இந்த உபதேசம்
என் பொம்மை தந்ததுதான்!

வாழ்க்கை விளையாட்டில்
வருகின்ற சொந்தமெல்லாம்
பொம்மை விளையாட்டாய்ப்
போய் மறையும்- ஒருகாலம்!

பொம்மையல்ல நீ என்று
புரிந்துகொண்டு விட்டபின்னால்
தனியாக உட்கார்ந்து
சஞ்சலம் நீ கொள்ளாதே!

கடவுள் எனும் பெயரால்
கண்ணெதிரே ஒரு பொம்மை!
அதனோடு விளையாடு
ஆனந்தக் கூச்சலிடு!
துன்பம் மிகுந்திருந்தால்
துவளாதே! வேண்டுதல் செய்!
அழு! புரளு! மன்றாடு!
அதைச்சுமந்து ஊர்வலம்போ!

சிறுபிள்ளை போலாகு
சிந்தனையைத் தெளிவாக்கு!
பொம்மையிடம் உந்தன்
போதனையைத் தொடங்கு!