அன்னை ஒருத்தியின் அந்தநாள் தாலாட்டு


வான்மீது கூவி
வந்துவிட்ட எறிகணை
பதுங்குகுழி கடந்து
பனையில் மோதி வெடித்தது
பயமது கொள்ளாமல்
பதுங்குகுழி பிறந்த‌
பாலகனே கண்ணுறங்கு.
அலைகடல் தாண்டியே
ஐசிஆர்சி கப்பல் வந்தால்
பசிக்கு ஒரு
பால்மா பெட்டி வரும்
பவளமே..முத்தே
படுத்துறங்கு அதுவரை.
தேங்காய் பிடுங்கவென‌
சென்றுவிட்ட உன்னப்பா
செல்லிலே சிக்கி
சிதறியே விடாமல்
தெய்வமது துணையிருக்கும்
செல்லமே..சிங்காரமே
சிரித்தபடி நீயுறங்கு.
வெளியே போனால்
வேட்டு ஒலிகள்.
வேண்டாம் நமக்கு
வீண் வம்புகள்.
கனியே..தமிழே
கந்தக வாசத்து
காலம் பிறந்த ஒளியே
விழியை மூடி
துணிவாய் நீயுறங்கு.
கண்ணில்லா எறிகணையால்
கண்ணிரண்டை இழந்துவிட்ட‌
கண்னாஉன் தாயிவளின்
உள்ளமது குளிரவே
‚அம்மா‘ எனவழைத்த‌
ஆதவனே நீயுறங்கு.
முதற்பிள்ளை உந்தனின்
முகம்காணா விட்டாலும்
அகம்காணும் அம்மாநான்
ஆரிராரோ பாடுகிறேன்
அற்புதமே கண்னுறங்கு.
உந்தனுக்கு நான் தாய்
எந்தனுக்கு தந்தைதானே தாய்.
இருவருக்கும் தாயாக‌
என்மகனே வளர்ந்துவிடு.
இப்போமட்டும் கண் மூடிவிடு.
தொட்டிலிட்டு தாலாட்ட‌
சேலை இல்லையே..
சேலையெல்லாம் உரப்பையாகி
பங்கருக்கு எல்லையே.
இந்த இடம் கூடநமக்கு
நிரந்தரம் இல்லையே.
இடம்பெயர்ந்து வேறிடம்
தடம்பதிப்போம் நாளையே.
இந்த நேரம் கண்மூடி
இதமாய் உறங்கு என் காளையே..
ஆராரோ..ஆரிவரோ…….!!!!
(மீளேற்றம்)
யோ.புரட்சி,