வேலணையூர் சுரேஷ் எழுதிய #நேரமில்லா_நேரம்

 

நேற்றைய மாலையில் என் கவிப்பசியை தீர்த்த அறுசுவை கவி விருந்து வேலணையூர் சுரேஷ் எழுதிய #நேரமில்லா_நேரம்

ஈழத்து கவிஞர்கள் வரிசையில் முக்கியமான ஒரு கவிஞர். இவரை நான் அறிந்ததை விட அதிகமாகவே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
முக்கியமாக, கவிஞர் புதுவை இரத்தினதுரையின் முதன்மை மணவன், பல புரட்சிப் பாடல்களால் எங்கள் வாழ்வியலை வகுத்தவர்.
பல்வேறு கவிநூல்கள்,பக்தி இசைத்தட்டுக்களால் இலக்கிய உலகில் ஆழமாக தடம் பதித்தவர், இன்னும் பதித்துக்கொண்டு இருப்பவர்.

அந்த வகையில் அண்மையில் இவரது நேரமில்லா நேரம் கவிதை நூல் வெளியீட்டிற்கு சென்றிருந்தேன் பல இலக்கிய வாதிகள் சபையில் மிகவும் காத்திரமாக வெளியீடு செய்யப்பட்டது நேரமில்லா நேரம் கவிதை நூல்.

இவ்வகையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு நா.வேதநாயகன் அவர்களது வாழ்த்துச் செய்தியுடனும்,மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் அணிந்துரையுடனும் நேரமில்லா நேரம் ஐம்பத்தொரு கவிதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

„தமிழ் தான் உயிர்“ என்ற முதலாவது கவிதையிலேயே என் உள்ளங்களை கொள்ளை கொண்டு விட்டார், அத்தனை அற்புதமாக தமிழின் அழகை வர்ணித்திருக்கிறார்.
தமிழை முதல் தாரமாக கரம் பிடித்திருக்கிறார் பிறிதொரு கவியில், கவிதைக்கு அழகான அலங்காரம் தந்திருக்கிறார் அதனை ஒரு இலக்கண வரையறை என்று கூடச் சொல்லலாம்.

குறிப்பாக பரந்து பட்ட விடயங்களை கவிதைக்கே உரிய பாணியில் மிகச் சுருக்கமாக இறுக்க வடிகட்டி கவிச் சுவையோடு ஆக்கியிருக்கிறார் கவிஞர் அத்தனை கவிதைகளும் ஏதோ ஒரு உன்னத கருத்தை அச்சொட்டாக எடுத்தியம்புகின்றது.
அனைத்தும் என் இதயம் தொட்டன குறிப்பாக,
„தப்பு “
„நன்றியுள்ள நாய்க்கு “
„கவிதைப் பல்லக்கு “
„நேரமில்லா நேரம்“
„ஐ போன், ஐ பாட், மை காட் “
„அப்பா“
„தோதான சபைக்கு சோக்கான ஆட்கள் “
„நம்பிக்கை தான் வாழ்க்கை (பாடல்) “
…………… இப்படி அனைத்தையும் கூறி விடலாம் காரணம் அத்தனையும் முத்துக்கள்.

இவரின் கவிதைகளில் என்னை ஈர்த்தவை சமூக அவலத்தை அழகாக எடுத்தியம்புவது, கவிதை வாசிக்கையில் கவி ஓட்டம் ரசனையை தூண்டுவது , இறுக்கமான விடயத்தையும் நகச்சுவையாக புரிய வைப்பது, பரந்த விடயத்தை சில வரிகளில் உரைப்பது, சிறந்த மொழி ஆளுகை என்று பல்வோறு கோணங்களில் இவரது கவிதைகள் என்னில் இடம் பிடித்தன.

கவிப் பிரியர்களுக்கு நேரமில்லா நேரம் படிப்பதற்கு ஒரு பொன்னான நேரம் கண்டிப்பாக கவி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய கவிதை நூல் என்பது எனது கருத்து…

– நன்றி –
– வேலணையூர் ரஜிந்தன்.