ஆலவிழுது ஊஞ்சல்

ஆலய முன்றலில் ஆகாயம் எட்ட 
உயர்ந்து நின்ற ஆலமரம்

அசைந்தாடும் போதெல்லாம் 
தாலாட்டுப் போல தென்றல் வீசும்

அந்தக்கால ஊஞ்சல் மரம்
அங்கே கழிந்திடும் பொழுதுகள் 
இந்தக்காலமில்லை அந்த இனிமைக்காலம்

அழகாய் காய்த்து நிற்க 
அதன் மேலே பறவையினம் கூடி நிற்கும்

இன்று காண்கையிலும் ஆசை ஊறும்
இனிமை நாட்கள் இதயத்தை மெதுவாய்த்தடவும்

காலத்தின் நினைவாக காதலர்களின் பெயர்களும் பதிந்து கிடக்கும்

வஞ்சகம் இல்லாது வாஞ்சையுடன்
விளையாடிய காலமது
நெஞ்சகம் முழுவதும் நிறைந்த பசுமையது

கண்ணகி அம்மன் சிலம்போசையாக 
ஆலமரக்காற்று எல்லோர் மனதிலும்
கலந்திருக்கும்
பழைமைக்கதைகளுக்கு சான்றாக 
விழுதெறிந்து நிற்கின்றது

ஆலம் விழுதுகளாக அசையாத
ஆசைகளும்
ஆலம்விழுதாக அடிபணியாத 
வீரத்தோடும்
ஆலம் விழுதாக என்றும்
இருப்போம்.

மட்டுநகர் கமல்தாஸ்