இராட்சத வாழ்வியல்…


பெரு வெளிப் பொழுதில்
கால விழுதானோரின் மூச்சு.
அர்த்தத்தை அடுக்கடுக்காய் அடுக்கி
அழகு பார்த்தது மர்மமாச்சு.
இது கொடுங்காலம் என்பதை
இறை முதல் நான் வரை ஏற்போம்.
இலட்சியச் சிறகுகள் உடைத்து
இயல்பை மனிதத்தால் கற்போம்.
„புல்லாங்குழலின் துளைகள்
ராகம் மறந்து சுவாசம் கொடுத்தது“.
„பூமியில் மூண்ட நோய் நெருப்பை
மனிதம் சுயம் மறந்து சுவாசித்தது“.
எல்லாம் பாடம் என்றபடி ஏதேதோ
ஏக்கங்கள் புலம்பலை புராணமாக்கியது.
ஏட்டில் பொறித்தபடி பூமியின் சுழற்சி
உயிரழிவை சோகத்தின் சரணமாக்கியது.
இராட்சத இருமல் இன்றைய கருவாய்
காய்ச்சலாய் காலம் வரைகிறது.
இருப்பவர் வாழ்வார் என்றோர் கணக்கு
காலத்தை எழுதி உறைகிறது.
எது நஞ்சு என்றபடி மதங்கள் வரிசையாய்
இறை முன் நின்று இலக்கியம் பேசுகிறது.
எல்லாம் ஓர் புள்ளி மையமென்று சிரித்தபடி
இயல்பாய் வைரஸ் காற்று வீசுகிறது…
கலைப்பரிதி.