‚இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்‘, ‚உன்னைச் சரணடைந்தேன்‘ நாவல்களின் அறிமுக விழா27.07.2018

ஈழத்தின் யாழ்ப்பாணம் குடத்தனையில் நிறைவேறிய, சுவிட்சர்லாந்து குடத்தனை உதயன் படைத்த ‚இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்‘, லதா உதயன் படைத்த ‚உன்னைச் சரணடைந்தேன்‘ நாவல்களின் அறிமுக விழா. புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் இரு படைப்பாளர்களின் நூல்கள் ஈழத்தில் அறிமுக விழா கண்டன. சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் குடத்தனை உதயன் எழுதிய ‚இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்‘ மற்றும் லதா உதயன் எழுதிய ‚உன்னைச் சரணடைந்தேன்‘ ஆகிய நாவல்களின் அறிமுக விழாவானது, 27.07.2018 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம், குடத்தனையில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் ஆரம்பமானது. வடமராட்சி கிழக்கு கலாசாரப் பேரவை இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது. நிகழ்வுக்கு கிராம சேவையாளர் அ.விமலேசன் தலைமை வகித்தார். விருந்தினர்கள் வரவேற்பினைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. அகவணக்கத்தினத் தொடர்ந்து வரவேற்புடன் கூடிய அறிமுக உரையினை கவிஞர் எஸ்.சிவசேகரன் வழங்கினார். வாழ்த்துரையினை மருதங்கேணி பிரதேச கலாசார உத்தியோகத்தர் செல்வசுகுணா வழங்கினார். பிரதம அதிதி உரையினை நிகழ்வின் பிரதம விருந்தினர் மருதங்கேணி பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் நிகழ்த்தினார். நூல்களினை நூலாசிரியர்களான குடத்தனை உதயன், லதா உதயன் ஆகியோர் மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் அவர்களிடம் வழங்கி அறிமுகம் செய்தனர். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர்க்கு இரண்டு நூல்களும் வழங்கப்பட்டன. குடத்தனை உதயன் எழுதிய ‚இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்‘ நாவ‌ல் பற்றிய நூற்சுவை பகிர்வினை யோ.புரட்சி நிகழ்த்தினார். நாவல் கூறும் வாழ்வியல் செய்திகள் பற்றிய உரையினை எழுத்தாளர் ந.மயூரரூபன் நிகழ்த்தினார். லதா உதயன் எழுதிய ‚உன்னைச் சரணடைந்தேன்‘ நாவல் சுட்டும் சேதிகளை திரட்டிய நூற்பகிர்வை கவிஞர் சு.க.சிந்துதாசன் ஆற்றினார். மக்கள் பிரதிநிதிகள் சார்பாக ஓய்வுபெற்ற கிராம அலுவலர் புலேந்திரன் கருத்துரை வழங்கினார். ஏற்புரையினை நூலாசிரியர்களில் ஒருவரான குடத்தனை உதயன் வழங்கினார். நன்றியுரையினை நாவலாசிரியர் லதா உதயன் வழங்கினார். குடத்தனை உதயனின் நாவலானது தாயகத்தின், புலம்பெயர் தேசத்தின் ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் பன்முகத் தொகுப்புகளையும், இரு தளத்தின் வாழ்க்கையின் நிறைந்த பக்கங்களையும் சொல்லும் 475 பக்கங்களைக் கொண்ட நாவலாகும். லதா உதயனுன் நாவலானது தாயக, புலம்பெயர் வாழ்வியலின் அதிமுக்கிய சேதிகளையும், வாழ்வியலையும் வெளிப்படுத்தும் 166 பக்கங்களைக் கொண்ட நாவலாகும்.