ஈழத்தமிழ் இலக்கியத்தில் மர்ம நாவல்கள்: கே.எஸ்.ஆனந்தனின் ‚மர்மப்பெண்‘

 

ஈழத்தமிழ் இலக்கியத்தில் மர்ம நாவல்கள்: கே.எஸ்.ஆனந்தனின் ‚மர்மப்பெண்‘
என் மாணவப்பருவத்தில் நான் நிறைய மர்ம நாவல்களை வாசித்திருக்கின்றேன். பெரும்பாலானவை தமிழகப்பிரசுர வெளியீடுகள்தாம். பிரேமா பிரசுர நாவல்கள் பல மேதாவி, சிரஞ்சீவி எழுதியவை, சஞ்சிகைகளில் தொடர்களாக வெளியானவை பல (தமிழ்வாணம், செல்வி, கெளசிகன், நாஞ்சில் பி.டி.சாமி, சுஜாதா போன்றவர்கள்) எனப் பல நாவல்கள். மேலும் பலரால் எழுதப்பட்ட கைக்கடக்கமான ‚பாக்கற் சைஸ்‘ மர்மநாவல்கள் பலவற்றையுமடக்கலாம்.
அக்காலகட்டத்தில் ஈழத்தில் வெளியான மர்மநாவல்களென்றால் எனக்கு ஞாபகத்திலுள்ளவை கே.வி.எஸ்.வாஸ் (கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார்) ரஜனி என்னும் பெயரில் எழுதிய குந்தளப் பிரேமா , நந்தினி, தாரிணி, பத்மினி, ஆஷா, சிவந்தி மலைச்சாரலிலே, அஞ்சாதே அஞ்சுகமே போன்ற நாவல்கள்தாம். இவை விரகேசரியில் தொடர்களாக வெளிவந்தவை. மீள்பிரசுரங்களாகவும் எம் காலத்தில் வெளியானவை. வீரகேசரி பிரசுரங்களாகவும் வெளியாகியிருக்க வேண்டும். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
வீரகேசரி பிரசுரங்கள் போல் வீரகேசரி நிறுவனத்தின் இன்னுமொரு வெளியீடான மித்திரனும் பல மர்மநாவல்களை ஜனமித்திரன் வெளியீடுகளாக வெளியிட்டுவந்தது. ஆனால் ஜனமித்திரன் வெளியீடுகள் பலவற்றை நான் வாசித்திருக்கவில்லை.
அண்மையில் நூலகம் இணையத்தளத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது எழுத்தாளர் கே.எஸ்.ஆனந்தனின் (கார்த்திகேசு சச்சிதானந்தம்) பல சமூக நாவல்கள், மர்மநாவல்களைப் பார்க்க முடிந்தது. சில வீரகேசரிப்பிரசுரமாக வெளிவந்தவை. மேலும் சில மீரா , மாணிக்கம், மணிமேகலை மற்றும் ஜனமித்திரன் வெளியீடுகளாக வெளியானவை. அவற்றில் வீரகேசரிப் பிரசுரமாக வெளியான ‚தீக்குள் விரலை வைத்தால்‘ வெளிவந்த காலத்தில் மிகுந்த வரவேற்பைப்பெற்ற நாவல்.
இந்நிலையில் ஜனமித்திரன் வெளியீடாக வெளியான இவரது நாவலொன்று என் கவனத்தை ஈர்த்தது. அதுவொரு மர்மநாவல். ‚மர்மப்பெண்‘ என்னும் பெயரில் வெளியான அந்நூலினை நூலகம் தளத்தில் கண்டேன். நாவலில் இடையிடையே ஓவியங்களையும் சேர்த்திருக்கின்றார்கள். வீரகேசரி பிரசுரங்களில் இடையில் ஓவியங்கள் இருந்ததாக ஞாபகமில்லை. ஒரு பதிவுக்காக அதற்கான இணைய இணைப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.