ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚குறிஞ்சாளினி‘ சிறுகதை நூல், ‚

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚குறிஞ்சாளினி‘ சிறுகதை நூல், ‚பந்தயத்தேவன்‘ நாவல் பற்றியதான இலக்கியத்தேடல் கருத்தரங்கு. கொள்ளைநோய் ஒருபுறம் பாடுபடுத்திக்கொண்டிருந்தாலும், கலை இலக்கியச் செயற்பாடுகள் பக்குவமாகவும், மென்போக்கிலும் நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அரச இலக்கிய விருது பெற்ற எழுத்தாளரான ரீ.எஸ்.யோசுவா அவர்களின் படைப்பிலுருவான இரு நூல்கள் பற்றியதான அறிமுக ஆய்வுடன் கூடிய இலக்கிய சுவைத்தேடல் ‚இயற்கைவழி இலக்கியத்தேடல் கருத்தரங்கு‘ நிகழ்வு 26.02.2021 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு, ஈழத்தின் கிளிநொச்சியில் அமைந்துள்ள நணபர்கள் விருந்தகத்தில் ஆரம்பமானது. பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 03.00 மணிவரை வருகை நேரமாக வரையறை செய்யப்பட்டிருந்து. நிகழ்வினை கிளிநொச்சி காவேரி கலாமன்ற கலை இலக்கியப்பிரிவு ஒழுங்கமைத்திருந்தது.நிகழ்விற்கு திருமதி பிறேமா மதுரநாயகம் தலைமை வகித்து தலைமையுரை நிகழ்த்தினார். வரவேற்புரையினை கலாபூஷணம் சிவ.ஏழுமலைப்பிள்ளை வழங்கினார். வாழ்த்துரையினை க.பங்கையற்செல்வன் வழங்கினார். தொடர்ந்து ‚முதலடி இயற்கையாகி‘ என்ற தலைப்பில் ‚குறிஞ்சாளினி‘ சிறுகதை நூல் பற்றிய தேடல் இடம்பெற்றது. இதன் அறிமுகவுரையினை ஜோயல் பியசீலன் அவர்களும், நூல் பற்றியதான இலக்கியப் பார்வையினை கருணாகரன் அவர்களும், நூலின் சமூகப்பயன்பாடு பற்றி எஸ்.தேவதாஸ் அவர்களும் உரை மொழிந்தனர். ‚குறிஞ்சாளினி‘ நூலினை ஜோயல் பியசீலன் அவர்கள் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை செளந்தரராஜன் பெற்றுக்கொண்டார். ‚பந்தயத்தேவன்‘ நூலினை யோ.புரட்சி வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை சுந்தரவள்ளி பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து ‚பந்தயத்தேவன்‘ நாவல் பற்றிய இலக்கியத்தேடல் ‚வாழ்வதன் கடைசி எய்தல்‘ எனும் தலைப்பில் இடம்பெற்றது. நூலின் அறிமுகவுரையினை யோ.புரட்சி அவர்களும், நூல் பற்றிய இலக்கியப் பார்வையினை தமிழ்க்கவி அவர்களும், நூலின் சமூகப்பயன்பாடு பற்றிய பார்வையினை பெருமாள் கணேசன் அவர்களும் மொழிந்தனர். ஏற்புரையினை இருநூல்களினதும் ஆசிரியர் ரீ.எஸ்.யோசுவா வழங்கினார். தொடர்ந்து இயற்கைவழி விவசாயத்தின் அதீத அக்கறையாளர்கள், நிகழ்வில் இலக்கியத்தேடல் வழங்கியவர்கள் ஆகியோருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நேர வரையறை சீர்பட பேணப்பட்டிருந்தது. ஒவ்வொருவரது உரைகளுக்குமான நேரம் அழைப்பிதழிலேயே பதிவு செய்யப்பட்டிருந்ததனால் குறித்த நேரப்படி யாவும் நடந்தேறின. ‚பந்தயத்தேவன்‘ நாவலுக்கு அணிந்துரை வழங்கிய சு.ஸ்ரீகுமரன்(இயல்வாணன்) இப்படி குறிப்பிடுகிறார், ‚அந்தவகையில் பந்தயத்தேவன் என்கிற இந்த நூல் விளிம்புநிலை மாந்தரின் வாழ்வை மையப்படுத்திய ஒரு பிரதியாகும். ஒரு மாலைக்குள் தொடங்கி, மறுநாள் மாலைமங்கும் நேரம் வரையான ஒன்றரை நாளுக்குட்பட்ட காலத்தில் ஒரு மனிதனைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தப்பிரதி வாசகருக்குள் நுழைகிறது‘