உபநிடதம் கூறும் இறைவனின் இருப்பு நிலை !

இறைத்துவத்தைப் பற்றி பேசப்படும் போது ஒன்றே பரம்பொருள் என்றும் அவரே அனைத்தையும் படைத்தார் என்றும் அத்தனை சமயங்களும் கூறி நிற்கின்றன.

கோட்பாட்டின் படி பார்த்தால் இறைவன் இந்த அண்டத்தை உருவாக்கினார் என்றால் அவர் ஏதோ ஒரு மூலப் பொருளிலிருந்து தான் உருவாக்கியிருக்க வேண்டும். எனவே இறைவனுக்கு முன்பே தோன்றிய அந்த மூலப் பொருள் அல்லவா பெரியதாக இருக்க முடியும். ஆகையால் ஏதோ ஒன்றை வைத்து இறைவன் அண்டத்தைப் படைத்தார் என்ற கூற்று பிழையாகிறது.

எனவே இறைவனே முதல் தோற்றம் எனில் இறைவன் தன்னிருந்து தான் இந்த அண்டத்தை உருவாக்கியிருக்க முடியும். காண்கின்ற காணப்படுகின்ற அத்தனையும் ஒரு மூலத்திலிருந்துதான் உருப்பெற்றிருக்க முடியும். எனவே இறைவன் தன்னையே பேரண்டமாக்கி அத்தனையுமாய் இறைவன் வியாபித்து நிற்கின்றான் என வேதாந்தமாகிய உபநிடதம் கூறுகிறது.

வேதப்பொருள் மூன்று வகைப்படும் அவை கர்ம காண்டம், உபாசன காண்டம், மற்றும் ஞான காண்டம் என்பனவாகும். இவற்றுள் ஞான காண்டம் தான் ‚உபநிஷத்‘ எனப்படுவது. ஆன்மாவை அதன் பரம்பொருள் தன்மைக்கு அழைத்துச் செல்வது. இதுவே வேதத்தின் உட் பொருள். வேதங்களில் இவை இறுதிப் பாகம் என்பதனால் இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ் உபநிடதத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப்படுகிறது. குரு – சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அதிகம் அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்புப் பெற்றவை.

உபநிடதங்களின் மையக்கருத்து இறைவன் ஒருவனே என்ற கொள்கையாகும்.
உபநிடதங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானவை பத்து. அவை ஈசாவாஸ்யம், கேனம், கடம், பிரச்சினம், முண்டகம், மாண்டுக்யம், தைத்தரீயம், ஐதரேயம், சாந்தோக்யம், பிரகதாரணியகம் எனப்படும்.

*அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாயிருக்கிறேன்)
*தத்வம் அசி (நீயும் அதுவாகவே இருக்கிறாய்) என்ற இந்தப் பேருண்மையை உபநிடதங்கள் சொல்லி நிற்கின்றன. வேதங்களின் சாரமே உபநிடதங்கள் என்பர்.

உதாரணமாக இறைவனின் இருப்பு பற்றி குரு சீடன் உரையாடலில் சீடன் குருவை கேட்கின்றான் „குருவே இறைவன் எப்படி எங்கும் நிறைந்துள்ளான்“ என்று. அதற்கு குருவானவர் “ ஒரு பாத்திரத்தில் நீரும் சிறிதளவு உப்புக் கற்களும் கொண்டு வா“ என்கிறார், பின்னர் „அந்த நீரில் உப்புக்கல்லை போடு இதை பத்திரமாகக் கொண்டு சென்று வைத்து மறுநாள் கொண்டு வா “ என்கிறார். சீடனும் அவ்வாறே செய்ய மறுநாள் அதை கொண்டுவந்து காட்டும்படி சீடனிடம் கேட்க சீடனும் அவ்வாறே செய்ய அந்த „நீரில் போட்ட உப்புக்கல்லை வெளியில் எடு “ என்கிறார் குரு. „உப்புக்கல்லை காணவில்லை“ என்கிறான் சீடன். „அந்த நீரை எல்லா பகுதியிலும் தொட்டு சுவைத்துப்பார்“ என குரு கூற அவ்வாறே சீடனும் அந்நீரில் உப்பு கரைந்து செறிந்துள்ளதை அறிகிறான். இவ்வாறே இறைவன் எங்கும் செறிந்து இணைந்து இருக்கிறார் என குரு உபதேசிக்கிறார்.

மேலும் “ எங்கும் எரியுறு நீர் போல் தங்குபவன் தானே தனி “ என்றும். அதாவது சுடு நீரில் எங்கு தொட்டாலும் எல்லா இடமும் அந்த சூடு நிறைந்து பரவி இருப்பதைப் போலும், மிகச் சிறிய ஆலம் விதைக்குள் மிகப் பெரிய ஆலம் விருட்சம் உறங்கிக் கிடப்பதைப் போன்றும் இறைவன் தன்னை அணுவுக்குள் அணுவாகவும், பிரமாண்டத்தில் பேரண்டமாகவும் சுருக்கியும், விரித்தும் எங்கும் செறிந்தும் உள்ளான் என உபநிடதம் கூறுகின்றது.

உபநிடதங்களில் பத்து தத்துவங்கள் உள்ளது. இவைகளைத் தவிர ஷ்வேதாஷ்வதாரா மற்றும் கௌஷிதகி போன்ற சிலவகைகளும் முக்கியமாகக் கருதப்படுகின்றன. ஸ்ரீசங்கரர் உபநிடதத்திற்கு எழுதிய விளக்கவுரைக்கு இவை முந்தியது என்று கருதப்பட்டாலும் அவைகள் காணாமற் போயிற்று. ஸ்ரீசங்கரரின் உபநிடத தத்துவ விளக்கவுரைகள் சமீப காலத்தில் இலகுவில் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

* கரிணி