உலகத்தின் தூக்கம் கலையாதோ…?

ஊருக்கே உபதேசம் ;
தமக்கானதாய் இல்லை இங்கு !

வேலிகளே இன்று ;
பயிரை அதிகம் மேய்கின்றன !

நீதிகளை வரையறுத்து விட்டு ;
அநீதிகளை அணிந்து கொள்கிறது அதிகாரம் !

நல்லவர் எனும் வெளித் தோற்றத்துள்ளே ;
ஒளிந்து கொள்கிறது நாசவேலை !

பொது நலத்தை கூடாரம் செய்து ;
தந்திரமாக பதுங்குகிறது சுயநலம் !

அன்பை போதிக்கும் கரங்களே ;
அதிகமாக வன்முறையை கட்டவிழ்க்கின்றது !

போலி அன்பே – இன்று
அதிக முகங்களின் முகப்பூச்சு ஆனது !

அச்சுத் தாள்களுக்கே மதிப்பு அதிகம் !
அதிகமாக நீதிகளும் விலை போகின்றது !

சத்திய வான்களும் சமத்துவ தேவர்களும்
மானிட வாழ்வை போதித்த பூமி ;
மனிதநேயம் மறந்தவர்களின் காடானது !

சமாதானத்தால் நிறைய வேண்டிய
மானிட உலகம் – இன்று
சண்டைகள் மலிந்த சாக்கடை ஆனது !

மாயைக்குள் உறங்கும் உலகம்
என்றுதான் விழித்துக் கொள்ளும் ?

வேலணையூர் ரஜிந்தன்.