கனவில் கருகும் முல்லைகள்

மாயைச்சிறையில் மனங்கள்
மருகித்தவிக்கின்றன நாளும்
கற்பனையில் வடம் பிடித்து
கனவாய் தேரோட்டும் விடலைகள்

பள்ளிப்பருவம் பாலாய்போக
பருவம் வந்து போதை கொள்ள
அலையும் மனது அலைபாய
ஆசையின் தூண்டலில் அதீத தவறுகள்.

ஒப்பனையில்லா வாழ்வறியாது
உல்லாச உலகம் தேடி
பண்பாட்டாடோடு கலாசாரம் மீறி
காயப்படும் விட்டில்கள்.

உலகறியா நினைப்பில்
ஓருதுளி விசத்தை
சிறிதுநேர மகிழ்விற்காய்
சிதையில் ஏறும் பாவங்கள்

ஆயிரம் கனவிருக்கும்
ஆனாலும் போதை கண்ணை மறைக்கும்
ஆர்தடுத்தும் நிற்பதில்லை
ஆக்கிரமிப்பு போதைகளே.

கோடிதேடி ஓடும் உலகு
நாளை சமூகத்ததை நினைப்பதில்லை
மாறுகின்ற உலகம் தன்னில்
பாவம் கனவில் கருகும் முல்லைகள்.

கவிச்சுடர் சிவரமணி
திருகோணமலை