தாள், எழுதுகோல், கவிதை….

எழுது கோலின் முனைகள் பார்த்து
என் ஆயுள் கரைய வேண்டும்.
ஏற்றம் தாழ்வு எல்லாமெனக்கு
கவிதையாக இருக்க வேண்டும்.
பாடும் நாவில் எனது வரிகள் 
பசுமை போல இனிக்க வேண்டும்.
படைத்த உயிரும் ரசிக்க ரசிக்க
கவிதை மழையாய்ப் பொழிய வேண்டும்…

புரட்சி செய்து எனது கவிதை
புலியைப் போல சீற வேண்டும்.
புதிய புதிய புதுமை செய்து
கவிதை விழிகள் சிரிக்க வேண்டும்.
எந்தத் திசையும் எனது வரிக்குள்
உயிராய் வந்து திளைக்க வேண்டும்.
எனது தேசம் என்னைக் கட்டி
கவிஞன் என்று அணைக்க வேண்டும்…

எனது சாவின் முதல் நாளும் 
கவிதை ஒன்று எழுத வேண்டும்.
எங்கிருப்பேனோ இறைவா 
எனக்கு அந்த வரம் வேண்டும்.
நான் கிடக்கும் பெட்டியிலும்
நாலு வரி பொறிக்க வேண்டும்.
நாலு பேர் காவினாலும்- என்
கவி படித்து எரிக்க வேண்டும்…

கலைப்பரிதி.