தென்மராட்சியில் முழுநிலாநாள் கலைவிழா

தென்மராட்சிக் கல்வி வலயம் நடத்திய முழுநிலா நாள் கலை விழா 13.09.2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 1.30 மணி வரை தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது.

தென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கனும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசனும் கௌரவ விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்கள அழகியல் பாட வளவாளர் மதிவாணி விக்னராஜாவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந. சர்வேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். வலய முகாமைத்துவப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பிரேமதாஸ் நன்றியுரை ஆற்றினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற வரணி மண்ணின் மைந்தர் பேராசிரியர் செ. சந்திரசேகரம் கௌரவிக்கப்பட்டார். தமிழ்ப்பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் வே. உதயகுமார் கௌரவிப்பிற்கான முன்வைப்பை மேற்கொண்டார்.

தென்மராட்சியின் முன்னணிப் பாடசாலைகளின் கலை நிகழ்வுகள் காண்போரைக் களிப்புறச் செய்யும் வகையில் மேடையேற்றப்பட்டன.

வடமாகாணக் கல்வித் திணைக்களம் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுத்து வரும் முழுநிலா நாள் நிகழ்வுகளில் ஆவணி மாதத்திற்குரிய நிகழ்வுகள் தென்மராட்சி கல்வி வலயத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.