நான் கரைந்துகொண்டிருக்கிறேன் மிக நுட்பமாக….

நான் கரைந்துகொண்டிருக்கிறேன்
மிக நுட்பமாக….
நான் கரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன்
மிகச் சாதுர்யமாக….

எனக்கும் ஒரு வசந்தம் இருந்தது,
எனக்கும் ஒரு வாழ்வு இருந்தது,
ஒரு வண்ணத்துப்பூச்சியை
பிய்த்து விளையாடுபவர்களுக்கு
மத்தியில் புனிதமான நேசத்தை
தேடிய புண்ணியவான் நான்

என் கால்கள் தளர்கிறது
ஆனாலும் நான் நடப்பேன்…
என் கைகள் நடுங்குகிறது
ஆனாலும் நான் வாளேந்துவேன்….
என் குரல்கள் அடைக்கிறது
ஆனாலும் நான் கோஷமிடுவேன்….

சாக்கடைகளையும்
முட்களையும், துரோகங்களையும்
கடந்துவந்ததன் மயக்கம்
என்னை இப்படி செய்கிறது

அவர்கள் எண்ணுவதைப்போல
ஒரு தூக்குக் கயிற்றை
நான் என்றும் முத்தமிடப்போவதில்லை

என் நேசத்தை அழுக்கற்று
அருந்தியவர் எவரேனும்
என்னை தட்டி நிமிர்த்துங்கள்
நான் தைரியம் கொள்வேன்
இல்லாவிடினும் நடப்பேன்
என் தளர்ந்தகால்களால்…..

இத்தனை இன்னல்களையும்
நான் கடக்கிறேன்
துரோகம் என் முன்னே
தலை குனியும் நாளிற்காக….

– அனாதியன்-