நிமிர்தல்


என் பாவலனே
உன் பேனா
எழுத மட்டுமே
குனியட்டும்..


என் படைப்பாளிகளே
விடுதலைக்காகவே
படையுங்கள்..


என் பாடலனே
விடியலுக்காகவே
பாடுங்கள்.


என் நடிகர்களே
நாடகங்களில்
மட்டுமே
நடியுங்கள்…

அரங்கம்
ஒவ்வொன்றும்
உங்கள்
ராஜாங்கமாகட்டும்..

சிரியுங்கள்
சிரிக்கவும் செய்திடுங்கள்
சிந்தனைகளையும்
விதையுங்கள்..

ஓலமிடும்
உறவுகளின்
கோலம் மாறிட
ஒன்று பட்டே இயங்குங்கள்…

காலங்கள்
காத்திருப்பதில்லை.
தடுமாற்றங்களால்
ஏமாற்றங்கள் தொடர்கின்றன.

எரிந்த எங்கள்
தேசத்தின் வாடை
உங்கள் நாசிகளை
விட்டகன்றிடுமா…?

கார்த்திகை
27 மட்டுமே உங்கள்
இலக்கல்ல
கூடுங்கள் எங்கள்
கூடுகளைக் கலைத்தவனை
இனம் காட்டுங்கள்..

மாவீரர்
கனவுகளை நெஞ்சினில்
தாங்குங்கள்
அவர்கள் தியாகங்களை
மதியுங்கள்.
மக்கள் புரட்சியாக
வெடித்திடும் எழுச்சியை
உருவாக்குங்கள்..

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி