யார் பெரியவர் இவ்வுலகில்…


சாவுகளை எண்ணி எண்ணித் தினமும்
நாங்கள் கணிதம் படிக்கிறோம்.
சஞ்சல உலகத்தில் எம்மை நாமிழந்து
ஏதும் புரியாது துடிக்கிறோம்.
மனிதனின் ஆணவ மிதப்பிற்கு
ஓங்கி அறைந்தது இன்றைய நிலை.
மரணத்தின் முன் மண்டியிட்டதை
தாங்கிச் சிரித்தது வைரஸ் மழை.
விண்ணேறிப் பிரபஞ்சம் அளப்பவனுக்கு
நுண் கிருமி சவாலானது கோரம்.
வீட்டுக்குள் யாவரையும் முடக்கி அடக்கி
திமிரெடுக்கிறது வைரஸ் வீரம்.
செவ்வாய்க்கு குடியேற அழைத்தவர்
மூச்சிறைக்கும் இயந்திரத்திற்குப் பிச்சை.
நெஞ்சுரம் நிமிர்த்தி வல்லரசு என்றோர்
பரிதாபமானது தான் காலத்தின் சர்ச்சை.
யாரிடம் கையேந்தி வரம் கேட்டுக் கும்பிட
கோவில் கதவுகள் பூட்டப்பட்டிருக்கிறது.
யாரிடம் போய் பலம் பெற நம்பிட
அரசியல் அரங்குகள் வாய் பொத்தியிருக்கிறது.
யார் பெரிதென்ற உளவியல் போரும்
பிணத்தோடு பிணமாய் பெட்டிக்குள் கிடக்கிறது.
யாவுமே உலகிலே பெரிதில்லை என்பதை
வைரஸ் நோய் சொல்லிக் கடக்கிறது…
கலைப்பரிதி.