வவுனியாவில் பல திறமைகள் இருந்தும் இலைமறைகாயாக இருக்கும் பெண்!!

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகிற்கு தெரியவருகின்றன.

ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் உலகின் வெளிசத்துக்கு வந்து அடையாளங்களையும் பெற்று விடுகின்றனர். அந்தவகையில் எமது பார்வையில் சிக்கிய வவுனியாவைச் சேர்ந்த கேசனா இராசரத்தினம் எனும் கலைஞரின் திறமையினை வெளிக்கொணர்வதில் நாம் மகிழ்வடைகின்றோம்.

வவுனியாவில் வசித்து வரும் கேசனா இராசரத்தினம் சித்திரம் வரைதலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது 16 வயதில் தந்தையினை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் ஐந்து சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் இவர் எதேனும் ஓர் படத்தினையோ அல்லது ஒருவரையோ பார்த்து அவ்வாறே வரையும் ஆற்றல் உடையவர்.

பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் கல்விகற்ற இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினையும் முடித்துள்ளார்.

குடும்பத்தின் சூழ்நிலைகள் காரணமாக அவரது சித்திரம் வரையும் கலையினை மேம்படுத்த முடியாமல் தனக்குள் வைத்துக்கொண்டு வர்த்தக நிலையமொன்றில்
பணிபுரிந்து வருகின்றார். தனது கலையினை அவ்வாறே விடாது தற்போதும் அவரது சித்திரம் வரையும் திறமையினால் பலரை மகிழ்வித்து வருகின்றார்.