Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கொடியேற்றத்தில் நடப்பது என்ன? – stsstudio.com

கொடியேற்றத்தில் நடப்பது என்ன?

ஆகமம் சாராத பக்திசார் வழிபாட்டு மையமாக இருக்கும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியின் கொடியேற்ற நிகழ்வு ஏனைய ஆலயக் கொடியேற்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டதாகும்.
.
ஆவணி மாத பூர்வபக்க பிரதமை கூடும் நேரத்தில் இங்கு கொடியேற்றம் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் இரவு 12.49 இற்கு அமாவாசை அற்றுப் போவதால் அதன் பின்னா் விடிகாலையில் கொடியேற்றம் என அறிவித்துள்ளனா்.
.
வைரவப் பெருமானுக்குக் காப்புக் கட்டிப் பின்னர் பிள்ளையார் பூசை மூலவரான வேலவருக்குப் பூசை என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து கொடியேற்றத்தின் முக்கிய நிகழ்வான கேடகப் பூசை இடம்பெறும்
.
ஆலய வாயிலில் மூலஸ்தானத்தை நோக்கியவாறு உள்ள நந்திக்கு (இடபத்திற்கு) முன்பாக கேடயம் வைக்கப்பட்டிருக்கும் . (கேடகம் என்பது சுவாமியைக் காவிச்செல்லும் கூடு) கேடகத்தின் உச்சியில் உள்ள கலசத்தில் தருப்பை, ஏழு மாவிலைகள் என்பவற்றைப் பட்டுத் துண்டால் கட்டி பூசை இடம்பெறும். இதனைக் கலச பூசை என்கின்றனர். இதுவே கொடியேற்றத்தின் முக்கிய நிகழ்வு.
.
கொடியேற்றம் நிகழ்ந்ததன் அறிகுறியாக ஆலய வாயிலில் சேவல் கொடியைப் பறக்கவிடுவா் அதன்பின் எழுந்தருளி வேலவருக்குப் பூசை இடம்பெறும். அவரை கேடகத்தில் எழுந்தருளச் செய்து உள்வீதியுலா வரச் செய்வர்.
.
வள்ளி அம்மன் வாசலுக்கு எழுந்தருளி வேலவர் வந்ததும் அவரை வள்ளி அம்மன் கோவிலுக்குக் கொண்டு சென்று தீர்த்தக் குளத்தில் நீர் எடுத்து வேலவருக்கும் வள்ளி அம்மைக்கும் விசேட பூசை இடம்பெறும்.
.
தொடர்ந்து கேடகத்தில் எழுந்தருளி வேலவர் வெளிவீதியுலா வருவாா். கோவிலுக்கு வடக்குப் புறமுள்ள வாயிலில் (கதிர்காம வாயில்) தீர்த்தக் குளத்தில் நீர் எடுத்து கும்பம் வைத்து அர்ப்பணிப்பா். நூற்றுக்கணக்கான தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைத்து அர்ப்பணிப்பா்.
.
அர்ப்பணங்கள் நிறைவுற்றதும் வேலவர் தனது சந்நிதானத்தை வந்தடைவார்.
.
சந்நிதியில் பூசை செய்பவர்களைப் பூக்காரர் என அழைப்பர். இவர்கள் வாய்கட்டியே பூசை செய்வர்.
.
பூசை முறை தமக்குத் தெரியாது என இவ்வாலயத்தைத் தாபித்த மருதர் கதிர்காமர் முருகப் பெருமானிடம் கோரியபோது முருகன் அவரை கண்மூடுமாறு பணித்ததாகவும் அடுத்த கணம் கதிர்காமத்தில் அவரை சேர்ப்பித்ததாகவும் அதன் மூலம் பூசை முறையையும் வேல் ஒன்றையும் அவர் பெற்றதாகவும் ஐதிகம் உண்டு.
.
முருகனும் கதிர்காமரும் உரையாடிய இடம் ஆலய முகப்பில் உள்ள நந்திக்கு அருகில் உள்ள இரண்டு குந்துகள் ஆகும். இந்த இரண்டு குந்துகளிலும் அவர்கள் எதிர் எதிர் இருந்து கதைத்தார்கள் என்ற நம்பிக்கையில் அக்குந்துகளில் எவரும் இருப்பதுவும் இல்லை. ஏன் அதற்குக் குறுக்கே போகக் கூடாது (அதாவது நேர் வாயிலால் கோவிலுக்குள் போகக்கூடாது) என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.
.
மூலவராக வேற்பெருமான் உள்ளார். இதைவிட அடியவர்கள் வழங்கிய வேல்களையும் இங்கு வைத்துள்ளனர்.
.
முருகனது உபதேசப்படி உப்பு இடாமல் 65 ஆலம் இலைகளில் வெண்பொங்கல் படைக்கப்படுகின்றது. இதுவே முருகனுக்கான பிரசாதம். இதனை மருந்து என்றுதான் அழைப்பர்.
.
சந்நிதியில் விபூதி வாங்கும் போது ஒரு கையால் வாயைப் பொத்தியபடி நிற்க பூசகர் விபூதியைப் பெறவேண்டியவருடைய சிரசில் விபூதியை தூவி நெற்றியிலும் பூசிவிடும் மரபும் உள்ளது.
.
மருதர் கதிர்காமர் முருகனிடம் தனக்கு விபூதி கொடுக்கத் தெரியாதே என்று கூறியபோது இப்படி விபூதியைக் கொடு என முருகன் வழிப்படுத்தினார் என நம்புகின்றனர். இதனால் அவரது சந்ததியினரும் அந்த மரபைப் பின்பற்றுகின்றனர்.
.
சந்நிதித் திருவிழாவையொட்டி வழமை போல சந்நிதியான் ஆச்சிரமத்தில் தினந்தோறும் அன்னதானம் மற்றும் ஆன்மீக உரைகள் இடம்பெறவுள்ளன.
.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டிலும் ஆன்மீக நிகழ்வுகள் ஆலய வெளிவீதியில் மாலை மற்றும் இரவு வேளையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.