பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலை பள்ளிகளின் 19 ஆவது முத்தமிழ் விழா!

பிரான்சில் உள்ள 64 தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த 19 ஆவது முத்தமிழ் விழா பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (16.12.2017) சனிக்கிழமை Savigny – le – Temple பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்ற இந்நிகழ்வில் இன்னியம் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். விருந்தினர்கள், பிரமுகர்கள் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து வணக்க நடனம் இடம்பெற்றது.
தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் சார்பில் வரவேற்புரை இடம்பெற்றதையடுத்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வழமை போன்று இம்முறையும் தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. நடனங்கள், நாடகங்கள், தாளலயம், வில்லுப்பாட்டு, கோலாட்டம்,பறை இசை, குழுப்பாடல், பரதம் என கலை நிகழ்வுகளின் பட்டியல் தொடர்ந்தது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு.ரங்கன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக Savigny – le – Temple உதவி நகர பிதா லின் பிசெறி மற்றும் உறுப்பினர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேஸ், தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை மேலாளர் திருமதி அரியரட்ணம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு. பாலகுமாரன், பிரான்சு மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
திரு.ரங்கன் அவர்கள் தனது சிறப்புரையில், புலம்பெயர் தேசத்தில் எமது சிறார்கள் கல்வியிலே சிறந்து வினங்குவதன் மூலமே சர்வதேசம் எம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கமுடியும் என்ற கருத்துப்பட அவருடைய உரை தொடர்ந்தது. முதன்மை விருந்தினர் உரையும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில், தமிழியல் பட்டப்படிப்பு புகுமுகத் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல், ஆண்டுமலர் வெளியீடு, திருக்குறள் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல், தமிழ், தமிழ்கலை ஆசிரியர்களின் பத்தாண்டுப்பணி நிறைவு மதிப்பளிப்பு, வளர்தமிழ் 12 தமிழ்த் தேர்வில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் போன்றவை சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெற்றிருந்தன.
தமிழ்ச்சோலைத் தலைமையகத்தின் சார்பில் குறித்த நிகழ்வுக்கு பங்காற்றிய அனைவருக்கும் நன்றி உரைக்கப்பட்டது.
நிகழ்வின் நிறைவில் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் வளர்ச்சி நிதிக்காக தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தால் விற்பனை செய்யப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டுக்கள் குலுக்கப்பட்டு நல்வாய்ப்புப் பார்க்கப்பட்டன.
தமிழ்மொழி வாழ்த்தினைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)