அசைய மறுக்கும் சிலை நீ.!கவிதை நெடுந்தீவு தனு

புல்லரிக்கும் உடல்களில்
மூடிக்கொள்ளும் இமைகளை
நான் எதுவென சொல்வேன்.
அந்த காதுமடல்களில்
உரசப்படும் சொற்பூக்களின்
வாசனையில் நுகர்ந்துறங்கும்
தலையணைகளின் விட்டுக்கொடுத்தலுக்கு
நீ என பெயரிடுகிறேன்…

தீ மூட்டிக்கொள்ளும் பாசறையொன்றில்
இந்த கடுங்குளிர் கொட்டிக்கொள்கிறது.
வெற்றுருளும் மதுப்போத்தல்களை
உனது கால்கள் அதட்டுகிறது.
நான் பரந்திருக்கும் எனதுடலில்
நீ நாதமிசைக்கின்றாய்…

தூரத்து நிலவொளியை
உனக்காக கடன்வாங்கி
இவ் அறைகளில் படரவிட்டுள்ளேன்.
மூலையில் கிறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட
உனக்கான எனதான கடிதங்களை
நீ ஏன் வெறித்துப் பார்க்கின்றாய்..?

இப்போது ஏன் அழுகின்றாய்
இந்த நிமிடங்களை விழுங்கிக்கொண்டிருக்கும்
முட்கம்பிகளை நினைத்தா..?
என்னோடு கவிதைபாடும்
காகிதங்களை நினைத்தா..?

நிறுத்தி விட நினைக்கின்றேன்
நீ எனக்குள் இருப்பதால் முடியவில்லை
மங்கலாகி கொள்கின்ற கண் திறப்புகளிலெல்லாம்
ஓர் பயம் ஆட்கொள்கிறது.
நேற்றைய கனவு போல் இன்றாகிடுமா என…

ஆக்கம்  நெடுந்தீவு தனு