என் எழுத்துப் பயணத்தில்…நிலையாக என் நெஞ்சில்….-இந்துமகேஷ்

அது 1960களின் பிற்பகுதி.

அரும்பு மீசையுடன் கூடவே என் கன்னங்களிலும் தாடையிலும் மெள்ளத்துளிர்க்கும் குறுந்தாடி
பாலபருவத்தைக் கடந்து தனிமையிலிருந்து விடுபட்டு வெளியுலகை எட்டிப் பார்க்கத் துடிக்கும் மனம்.
„கண்ட கண்ட பெடியங்களோடை பழகக்கூடாது!“ என்று அப்பு (அப்பா)வின் தடையுத்தரவைத் தாண்டி, 
„ஏன் பழகினால் என்ன?“ என்று என்னை நானே கேட்டுக்கொள்கிற வயது.
„நீங்கள் எவ்விடம்?“ 
„புங்குடுதீவு!“ 
„புங்குடுதீவில் எவ்விடம்?
இந்தக் கேள்விக்குப் பதில் இருக்கிறதா? 
இருக்கிறது
மேற்கூர், கிழக்கூர், வீராமலை, மாவுதடை, வல்லன், மடத்துவெளி, ஊரதீவு, பெருங்காடு, குறிகாட்டுவான், 
இறுப்பிட்டி, கழுதைப்பிட்டி, குறிச்சிக்காடு, போக்கத்தை இவற்றோடு கூடவே கோயிலடி, சுடலையடி, ஆஸ்பத்திரியடி, பள்ளிக்கூடத்தடி, என்று விரியும் பகுதிகள்.
கிட்டடியில் இருக்கும் உறவினர்களோடு பழகுவதுபோல் சற்றுத்தூரத்தில் இருக்கும் உறவினர்களோடு அதிகம் 
பழகுவதில்லைத்தான். நல்லது கெட்டதுகளில் பங்கெடுப்பதோடு சரி.

என் பள்ளித்தோழர்களிலும் ஒருசிலரே அருகில் இருந்தார்கள். மற்றவர்கள் சற்றுத்தொலைவில் இருப்பதால் அதிகம் பழகுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்தன.

பாடசாலை விடுமுறைக்காலம்! 
ஒருநாள் அந்திப்பொழுதில் ஆலடிச் சந்தியில் வில்வனைச் சந்தித்தேன்.
„நான் மாஸ்ரரைப் பார்க்கப் போறன் வாறியா?“ என்றான்.
„ஆர்?“
அந்தப்பக்கத்தில் வாத்தியார்கள் சிலர் இருந்ததால் அந்தக் கேள்வி.
„எங்கடை தளையசிங்கம் மாஸ்ரர்!“
„எனக்கு அவரைப் பழக்கமில்லையடா.. திடீரெண்டு போறதெண்டால்…?“ தயங்கினேன்.
அவன் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தான்.
„அதுக்கென்ன அவர் ஒண்டும் நினைக்கமாட்டார் வா!… அங்கை நிறையப் புத்தகங்கள் எடுக்கலாம்!“
„புத்தகங்கள்!“ என்றதும் மறுபேச்சு வரவில்லை. 
வில்வனோடு நடந்தேன்.

மு.த. என்கின்ற அந்த இலக்கியப் பெட்டகத்தை அன்றுதான் முதன்முறையாகச் சந்தித்தேன்.
ஊருக்குள்ளேயே இருந்தும் அத்தனைகாலமாய் அவரை நான் சந்திக்காமலேயே இருந்திருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. 
(சில மாதங்களுக்கு முன்புதான் அவர் வெளியூரிலிருந்து மாற்றலாகி மகாவித்தியாலத்துக்கு பணியாற்ற வந்திருந்தார்)
„இவன் மகேசன்… கதையெல்லாம் எழுதுகிறான்!“ என்று என்னை அவரிடம் வில்வன் அறிமுகம் செய்தபோது அவர் மெள்ளப் புன்னகைத்தார்.

அவரது மேசையில் கிடந்த புத்தகங்களின்மீது என் பார்வை பதிந்தது.
என் வாசிப்புப் பழக்கத்தில் வேறொரு உன்னத அனுபவத்தைப் பெறும் புதிய உலகத்தின் வாசல் அங்குதான் திறந்துகொண்டது.

புதுமைப்பித்தன் முதலாக ஜெயகாந்தன் ஈறாக இலக்கியகர்த்தாக்கள் என்று அடையாளப் படுத்தப்படுகிற பலரையும் அவர்களது படைப்புக்களையும் நான் அறிமுகம் கொண்டது அவர் மூலமாகத்தான்.

60களில் தமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும் வெளியாகிக்கொண்டிருந்த சிற்றிதழ்கள் (கணையாழி ஞானரதம் கசடதபற போன்ற இதழ்கள்) ஜெயகாந்தன், மௌனி போன்றவர்களோடு மஹாகவி(உருத்திரமூர்த்தி) போன்ற நமது இலக்கியவாதிகளும் அவரிடமிருந்துதான் எனக்கு அறிமுகமானார்கள்.

ஜனரஞ்சகம் இலக்கியத்தரம் என்ற கோட்பாடுகளுக்குள் ஒரு படைப்பாளியின் ஆக்கத்தை கூறுபோட்டுப் பார்ப்பதில் எனக்கு அத்தனை உடன்பாடில்லை என்றானபோதும் அன்று இலக்கியவாதிகள் என்று தனித்து நின்றவர்களின் எழுத்துக்களில் ஒரு தனித்துவம் இருப்பதை என்னால் உணரமுடிந்தது.

மு.த.வின் மாணவர்களும் மாணவர்களல்லாதவருமான ஒரு இளைஞர் அணி அவர் பின்னால் திரண்டிருந்தது. 
அவர்களது வளர்ச்சியிலும் ஊரின் வளர்ச்சியிலும் அவர் கொண்டிருந்த ஈடுபாடு இளைஞர்கள் அவரது அணியில் 
இணைந்துகொள்ளக் காரணமாயிற்று.

அடுத்த சில மாதங்களில் தொழில்தேடி நான் கொழும்புக்குப் பயணமானேன்.
அதனால் அவரை அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் அற்றுப் போயிற்று.
ஆனால் 1971இல் இதயம் மாத இதழை வெளியிட நான் தீர்மானித்தபோது முதலில் என் விருப்பத்தைத் தெரிவித்து அவருக்கே மடல்வரைந்தேன். அவரது ஆக்கங்களையும் கோரியிருந்தேன்.

சிற்றிதழ் வெளியீட்டில் ஏற்படக்கூடிய சிரமங்கள் குறித்து சுட்டிக்காட்டி, எனினும் உனது முயற்சி வெற்றிபெறட்டும் 
என வாழ்த்துக்களைத் தெரிவித்து பதில் அனுப்பியிருந்தார் அவர். பின்னர் இதயத்தில் கட்டுரைகளும் எழுதினார்.

(தாழ்த்தப்பட்டோருக்கான சத்தியாக்கிரகத்தினால் அவர் சிறைப்பிடிக்கப்பட்டபோது அவரது வழி நடத்தலில்தான் 
நான் இதயம் இதழை நடத்துவதாக நான் விசாரணைக்குட்படுத்தப்பட்டதும் மாதாந்தம் அரசாங்க அதிபரின் பார்வையிடலுக்குப் பின்பே இதயம் வெளிவரவேண்டும் என்று எனக்குக் கட்டளை யிடப்பட்டதும் தனிக்கதை)

தமிழ் இலக்கியத்துறையில் மு.த.என்கின்ற இந்த இரண்டு எழுத்துக்களும் ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளது. 
இளம்வயதிலேயே அவர் எங்களைப் பிரியாதிருந்திருந்தால் இன்று அவரிடமிருந்து ஏராளமான படைப்பிலக்கியங்கள் நமக்குக் கிடைத்திருக்கும். எனினும் அவர் தந்துவிட்டுச் சென்றிருப்பவையும் காலகாலத்துக்கும் அவரை நினைவூட்டிக் 
கொண்டிருக்கப் போதுமானவைதான்.

இலக்கிய உலகில் அவர் நிரந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். 
அவ்வப்போது அவருடைய எழுத்துக்களுடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.