கம்போடியாவில் . கவிஞர் (இணுவையூர் மயூரன்)கவிபாடிய தருணம்..

22._9_2019. கம்போடிய மண்ணின் கலை பண்பாட்டு அவர்கள். தமிழர்களும் கிமர் மக்களுக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்பை மீட்டெடுத்து தமிழ் கம்போடியாவில் .
22.9.2019. இன்று ஆண்றோர்க்கள் நிறைந்த அரங்கில்
கவிஞர் (இணுவையூர் மயூரன்)
கவிபாடிய தருணம்.. மகிழ்ச்சியான தருணம்.

இன்றைய கம்போடிய கவிஞர் மாநாட்டின் இரண்டாவதுநாள் மேடையில் அரங்க எல்லைகளுக்கு அப்பாற்பட்டு படைத்த என் கவிப்படையல்.

-என்னுள் உயிராய் உறையும் தமிழுக்கும், தமிழன் என்ற உணர்வையும் நிமிர்வையும் திமிரையும் எனக்குள் தந்தவனுக்கும்
– தமிழ் வாழ தம் உயிர் தந்தோர்க்கும் முதல் வணக்கம்.

சான்றோர் கூடியிருக்கும் இச் சபைக்கும்
சொக்கும் தமிழ் கேட்டு சொக்கியிருக்கும் சொக்கத்தங்கம் சொக்கையாவுக்கும்
சரித்திரம் படைக்கும் பன்னாட்டு தமிழர் நடுவத்தினருக்கும்
அழகு பணி செய்யும் அங்கோர் தமிழ்ச் சங்கத்தினருக்கும் பணிவான வணக்கம்.

போர் உழன்ற பூமியிலிருந்து
பால் குடியாய் புலம்பெயர்ந்தவன் நான்
பால் வண்ணப்பனி பொழிந்து பளிங்காய் மிளிரும்
அல்ப்ஸ் மலை தேசத்தின்
ஊசியிலை காடுகள் தாண்டி வந்துள்ளேன்
பனைமரம் தழுவிய தென்றல் வீசிடும்.
பழம்பெரும் தேசத்தின் பாவலர் மாநாட்டில் இணைந்ததில்
மகிழ்வு.

பென்னம் பெரும் கவிஞனல்ல
பெயர் சொல் லும் புலவனல்ல
எண்ணக் கருக்களை
வண்ணத் தமிழ்ப்படுத்தும்
சின்னப்பெடி இவனே.

தவறிருப்பின் தமிழால் பொறுத்தருள்க.

சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்
************************************************

மீண்டும் மீண்டும் உருவேற்றி
மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி
சொல்லவும் மெல்லவும் முடியாமல்
எம் உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை
அணையாமல் காப்பது நம் கடனே

அடையாளம் அத்தனையும் தொலைத்து
அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள்
எங்கள் அன்னை பூமி
உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை
உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு

இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம்
இல்லாமல் செய்தனர் அதைக் கூட
தினம் அங்கு தடம் அழித்து அழித்து
திருவிழா பூமியாய் மிளிருது இன்று நாம்
பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு

கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த
கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது
செத்துக் கிடந்தவர் பிணம் கூட
சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது
முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம்

மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல்
மலையாய் எழுந்து நிற்கிறது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு
மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுத்லிக்கும் நிலை இன்று
ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து
மீள முடியா அடிமையான கதை சொல்லி வைப்போம்

இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது சிவந்தமே மட்டுமே
உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு
பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும்
சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்
தமிழ் இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம்.

ஈழத்துப்பித்தன்