***குண்டு மழை கண்டோம் ***

பால் வண்ண மேகக்கூட்டங்கள்
பரந்து கிடக்கிறது வானமெங்கும்.
மேல் வானமோ வெளிர் நீலப்பட்டாய்
மெருகூட்டியே மிளிர்ந்து நின்றது .
கால் நடைகள் களைப்புத்தீர்க்க அங்கே
கட்டாந்தரையில் படுத்து களைப்பாற,
வேல் முருகன் கோயில் திருவிழா அன்று
வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்க
தாழ் பணிய வந்த மக்கள் கூட்டமோ
தடல் புடலாக விதிகளில் உலாவிவர
கோள் புரண்டது போல ஒரு பெரும்
கோர சத்தம் காதுகளைப் பிளந்தது .
பாழ் படுவார் பொழிந்த குண்டு மழையேயது
பாழாக்கி ஓய்ந்தது ஊரையே நன்று
நாள் விடியும் போது பேரழகாகவும்
நன்னாள் முடிகையில் பேரவலமுமானதே.
வாழ் நாளிலே பாதி நாட்களை இவ்வாறே
வாழ்ந்து முடித்தனர் ஈழத் தமிழர் .
அவல நேசன்