Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 **தைப்பொங்கல் /தித்திக்கும் வரலாறு** – stsstudio.com

**தைப்பொங்கல் /தித்திக்கும் வரலாறு**

**தைப்பொங்கல் / தித்திக்கும் வரலாறு**
****பொங்கல் பழமையும் பழக்கமும்!!****

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் போகிப்பண்டிகை

சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ‚பழையன கழித்து, புதியன புகவிடும்‘ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் „போக்கி‘ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி „போகி‘ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமாக இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.

இரண்டாம் நாள் #தைப்பொங்கல்

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க, பொங்கலுக்குத் தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து மொழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று „பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!“ என்று உரக்கக் கூவுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே, தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது #தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில்

சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‚பொங்கலோ பொங்கல்… மாட்டு பொங்கல் பட்டி பெருக.. பால் பானை பொங்க.. நோவும் பிணியும் தெருவோடு போக..‘ என்று கூறி. மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும்பொங்கல்:

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் விழா. காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப்பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரிஅடித்தல்,  வழுக்குமரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினைக் கட்டி, அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று, அதனை கல்லில் இழைத்து பாதத்திலும் முகத்திலும் பூசிக்கொள்வார்கள்.

இவ்வகையில் தமிழர் திருநாள் நன்முறையில் அனைத்து வகை மக்களாலும் கொண்டாடப்படும்./ பொங்கல் வாழ்த்துக்கள்